2015-07-08 16:48:00

ஈக்குவதோர் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு திருத்தந்தை ஆற்றிய உரை


ஜூலை,08,2015. ஈக்குவதோர் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகத்தினரிடம், Laudato Si’ அதாவது இறைவா உமக்கே புகழ் என்ற தனது அண்மைத் திருமடலிலிருந்து கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒரு பல்கலைக்கழகத்தில் படிப்பது, மதிப்புடன் வாழ்வதற்காககோ அல்லது அதிகப் பணம் சம்பாதிப்பதற்காகவோ அல்ல, ஆனால், பிறரோடும், உலகோடும், சிறப்பாக ஏழைகளோடும், சமூகத்தில் வாய்ப்பிழந்தவர்களோடும் எப்படி ஒருமைப்பாட்டுணர்வில் வாழ்வது என்பதைக் கற்பதாகும். ஈக்குவதோர் நாட்டு இளையோரும் ஆசிரியர்களும், பேராசிரியர்களும் தங்களோடு வாழும் சகோதர சகோதரிகளையும், இறைவனால் நமக்கு வழங்கப்பட்ட உலகையும் பாதுகாக்க வேண்டும். சமுதாயத்தில் உயர்நிலையையும், மதிப்பையும் அடைவதற்கும், பணம் சம்பாதிப்பதற்கும் பல்கலைக்கழகப் பட்டயம் அவசியம் என்று நம் இளையோர் நோக்காமல் இருப்பதற்கு நாம் எவ்வாறு உதவலாம்? இக்காலத்தின் பிரச்சனைகள் மத்தியில் ஏழைகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் இளையோர்க்கு இருக்கும் பெரும் பொறுப்பை கல்வி மூலம் எப்படி உணர்த்துவது? என்ற கேள்விகளையும் ஆசிரியர்களிடம் முன்வைத்தார். அதோடு, என் அன்பு மாணவர்களே, உங்களிடம் கேட்பதற்கும் என்னிடம் ஒரு கேள்வி உள்ளது. நீங்கள் ஈக்குவதோர் நாட்டின் எதிர்காலச் சமுதாய வளர்ச்சியின் இக்காலத்திய மற்றும் வருங்கால விதைகள். நீங்கள் படிக்கும் இக்காலம், உங்களின் உரிமை மட்டுமல்ல, ஆனால் அது ஒரு சலுகை என்று உணர்கிறீர்களா? உங்களுக்குத் தெரிந்த அல்லது தெரியாத உங்கள் நண்பர்களில் எத்தனை பேர் இந்த வீட்டில் இடத்தைக் கொண்டிருக்க விரும்புகிறார்கள்?, ஆனால் பல்வேறு காரணங்களுக்காக இதை அவர்கள் கொண்டிருக்கவில்லை என்பதை அறிந்திருக்கிறீர்களா? அவர்களோடு ஒருமைப்பாட்டுணர்வு கொள்ள உங்களின் கல்வி எந்த அளவுக்கு உதவுகின்றது?

இந்தக் கேள்விகளை எழுப்பிய திருத்தந்தை ஒருவர் ஒருவரையும், படைப்பையும் பாதுகாப்பதில் அனைவருக்கும் இருக்கும் பொதுவான பணி பற்றி நற்செய்தி மற்றும் தொடக்க நூலிலிருந்து மேற்கோள்காட்டி விளக்கினார்.

இறைவன் நமக்கு வாழ்வை மட்டுமல்ல, இப்பூமியையும், படைப்பு அனைத்தையும் கொடுத்திருக்கிறார். இறைவன் மனிதனுக்குத் துணையாளை மட்டுமல்ல, முடிவற்ற வாய்ப்புக்களையும் வழங்கியிருக்கிறார். மனிதருக்கு ஒரு கடமையை, ஒரு பணியைக் கொடுத்திருக்கிறார். அவர் தனது படைப்புப் பணியில் ஓர் அங்கமாக இருக்குமாறு நம்மை அழைக்கிறார். விதைகளையும், நிலத்தையும், நீரையும், சூரியனையும் உங்களுக்குக் கொடுக்கிறேன், பயிரிடுங்கள் என்கிறார். உங்களுக்குக் கரங்களையும், சகோதர சகோதரிகளையும் தருகிறேன். உங்களுடையவை இவை. இவை ஒரு கொடை. இது விலைக்கு வாங்கப்படும் அல்லது பெறப்படும் பொருள் அல்ல. இவை நமக்கு முன்னரும் இருந்தன, நமக்குப் பின்னரும் நீண்ட காலம் இருப்பவை. நம் உலகம் இறைவனால் நமக்குக் கொடுக்கப்பட்ட கொடை. இதை நமது சொந்தமாக ஆக்கலாம். இறைவன் தமது படைப்பை தமக்கென கொண்டிருக்கவில்லை. மாறாக, படைப்புப் பகிரப்பட வேண்டிய கொடை. நாம் ஒருவர் ஒருவரோடு சேர்ந்து நம்மைக் கட்டியெழுப்ப இறைவன் கொடுத்திருக்கும் இடம் இது. மனிதச் சுற்றுச்சூழலும், இயற்கைச் சுற்றுச்சூழலும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இவை ஒன்றுக்கொன்று ஆதரவளிக்க முடியும் மற்றும் சிறந்தவற்றிக்காக மாற்றம் பெற இயலும். இந்த உறவு, மாற்றத்திற்கும், திறந்த மனதிற்கும் வாழ்வுக்கும் அல்லது அழிவுக்கும், மரணத்திற்கும் இட்டுச்செல்லக் கூடும்.

உரோமையில் வத்திக்கானுக்கு அருகில் ஒரு வயதானவர் ஓர் இரவில் குளிரால் இறந்தார். இது எந்தச் செய்தித் தாளிலும் வெளிவரவில்லை, ஆனால் பொருளாதாரச் சந்தைகளின் ஏற்ற இறக்கங்கள் அனைத்துலகச் செய்திகளாக வெளிவருகின்றன என்றுரைத்த திருத்தந்தை மேலும் தொடர்ந்தார்.

நம் தாய் பூமி மீதும், நம் சகோதர சகோதரிகள் மீதும் நாம் அக்கறை கொள்ளாமல் இனிமேலும் இருக்க முடியாது. இப்படி இருந்தால் அது தவறாகும். உன் சகோதரன் எங்கே? என்று இறைவன் காயினிடம் எழுப்பிய கேள்வி மீண்டும் மீண்டும் நம்மில் கேட்கப்பட வேண்டும்.

இவ்வாறு, ஈக்குவதோர் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.