2015-07-07 16:43:00

திருத்தந்தை-குடும்பங்களுக்குச் செபங்கள்,கருணை,துணிச்சல் தேவை


ஜூலை,07,2015. Quayaquil நகரின் Samanes பூங்காவில் நிறைவேற்றிய திருப்பலியில் கானாவில் திருமண நிகழ்வை(யோவா.2:1-11) மையமாக வைத்து திருத்தந்தை வழங்கிய மறையுரை...

யோவான் நற்செய்திப்படி இயேசு நிகழ்த்திய முதல் அரும் அடையாளம் குறித்த நற்செய்திப் பகுதியை இத்திருப்பலியில் நாம் வாசிக்கக் கேட்டோம். “அவர்களுக்குத் திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” என்று அன்னைமரியா தனது தாய்க்குரிய அக்கறையுடன் இயேசுவிடம் பரிந்துரைக்கிறார். அதற்கு, “எனது நேரம் இன்னும் வரவில்லையே” என்று இயேசு கூறிய பதில், அவரின் திருப்பாடுகளின் வரலாற்றில் பின்னர் மேலும் அதிகமாகப் புரிந்துகொள்ளப்படும். இது நல்லது. ஏனெனில், போதிப்பதற்கும், நம்மோடு உடன் வருவதற்கும், மகிழ்வை அளிப்பதற்கும் இயேசுவுக்கு இருக்கும் ஆர்வத்தை நம்மால் பார்க்க முடிகின்றது. இதனால், அவர்களுக்குத் “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” என்ற அன்னைமரியாவின் வார்த்தைகளுக்கு நன்றி செலுத்துவோம்.

ஒவ்வொரு தலைமுறையிலும், ஒவ்வொரு குடும்பத்திலும், நம் ஒவ்வொருவரிலும், கானாவில் திருமணம் மீண்டும் மீண்டும் நடைபெறுகின்றது. உறுதியான, பலனுள்ள மற்றும் மகிழ்வான அன்பில் நம் இதயங்கள் இளைப்பாறுதலைக் காணும் நம் முயற்சிகளிலும் இது இடம்பெறுகின்றது. நற்செய்தியாளர், மரியாவை, தாய் என அழைக்கிறார். அத்தாய்க்கு நாம் தனி இடம் அமைப்போம்.

மரியா, திருமண விருந்தில் நடந்தவைகளை கவனித்து வந்தார். புதிதாகத் திருமணமான தம்பதியரின் தேவைகள்மீது கருத்தாய் இருந்தார். மரியா தனக்குள்ளே முடங்கி, தனது சிறிய உலகம் பற்றி மட்டுமே கவலைப்படவில்லை. அத்தாயின் அன்பு, பிறரை நோக்கிச் செல்கிறது. எனவே, திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது என்பதைக் கவனிக்கிறார். திராட்சை இரசம், மகிழ்வின், அன்பின் மற்றும் மிகுதியின் அடையாளம். இந்தப் பண்புகளை தங்கள் குடும்பங்களில் காண இயலுமா என்று, எத்தனை வளர்இளம் பருவத்தினரும் இளையோரும் இன்று உணர்கின்றனர்? குடும்பக் கொண்டாட்டங்களிலிருந்து விலக்கி வைக்கப்பட்டவர்களாக எத்தனை வயதானவர்கள் உணர்கின்றனர்?, ஒவ்வொரு நாளும் சிறிதளவு அன்புக்காக எத்தனை வயதானவர்கள் ஏங்குகின்றனர்? இந்த இரசம் இல்லாமல் இருப்பதற்கு, வேலைவாய்ப்பின்மை, நோய், நம் குடும்பங்கள் அனுபவிக்கும் இன்னல்நிறைந்த சூழல்கள் போன்றவையும் காரணங்களாக இருக்கலாம். மரியா, வற்புறுத்தும் தாய் அல்ல, நம் அனுபவக் குறையில், நம் தவறுகளில் மற்றும் நாம் செய்ய மறக்கும் காரியங்களில் களிப்புறும் மாமியார் அல்ல, ஆனால் மரியா ஒரு தாய். அவர் கருத்தாய், அக்கறையுடன் இருக்கிறார்.

இவ்வாறு மறையுரையாற்றிய திருத்தந்தை, அன்னை மரியா, தாய் என்று அனைவரும் மூன்று முறை சப்தமாகச் சொல்லுமாறு கேட்டுக்கொண்டார். பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட விசுவாசிகளும் அன்னை மரியா, தாய் என்று கூறினர். இது கேட்பதற்கு அழகாக இருக்கிறது என்று சொல்லி, மறையுரையை மேலும் தொடர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆயினும், மரியா இயேசுவை நம்பிக்கையுடன் அணுகி மன்றாடுகிறார். மரியா, பந்தி மேற்பார்வையாளரிடம் உடனடியாகச் செல்லவில்லை. அவர், புதிதாகத் திருணமானத் தம்பதியரின் பிரச்சனையைத் தமது மகனிடம் உடனடியாகச் சொல்கிறார். “அம்மா, அதைப் பற்றி நாம் என்ன செய்ய முடியும், எனது நேரம் இன்னும் வரவில்லையே(வ.4)” என்று மரியா பெற்ற பதில் மனதைக் கடினப்படுத்தியதாகத் தோன்றுகிறது. இருந்தபோதிலும், அவர் பிரச்சனையை இறைவனின் கரங்களில் வைக்கிறார். பிறரின் தேவைகளை நிறைவேற்ற வேண்டுமென்ற அவரின் அக்கறை, இயேசுவின் அந்த நேரத்தை வேகமடையச் செய்கின்றது. மரியாவும் தொட்டிலிலிருந்து சிலுவை வரை, அந்நேரத்தின் ஓர் அங்கம். அளவற்ற அன்பாலும், வறிய கந்தல் துணிகளாலும் மாட்டுத் தொழுவத்தை இயேசுவுக்கு வீடாக்கிக் கொடுக்க அவரால் முடிந்தது. வாள் அவரது இதயத்தை ஊடுருவியபோது, நம்மை அவரின் பிள்ளைகளாக ஏற்றார். நம் குடும்பங்களை இறைவனின் கரங்களில் ஒப்படைத்துச் செபிக்கவும், நம் நம்பிக்கையைத் தூண்டவும் நமக்கு மரியா கற்றுத் தருகிறார். நம் கவலைகள் இறைவனின் கவலைகளும்கூட என்பதை நமக்குக் காட்டுகிறார்.

செபிப்பது எப்போதும் நம் கவலைகளையும், கரிசனைகளையும் அகற்றுகிறது. நம்மைப் புண்படுத்தும், ஏமாற்றமடையச் செய்யும், மனச்சோர்வடையச் செய்யும் நேரங்களில் செபம் நம்மை மேலே எழும்பச் செய்கின்றது. குடும்பம் ஒரு பள்ளியாகும். இங்கு, நாம் தனித்துவிடப்பட்ட தனியாட்கள் அல்ல என்பதை செபம் நமக்கு உணர்த்துகிறது. நமக்கு அடுத்த வீடுகளில் வாழ்பவரும் நம் வாழ்வின் ஓர் அங்கம் மற்றும் அவர்கள் தேவையில் இருப்பவர்கள் என்பதையும் செபம் உணரச் செய்கிறது.

இறுதியில் மரியா செயலில் இறங்குகிறார். “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்(வ.5)” என்று பணியாளரிடம் மரியா சொல்கிறார். மரியாவின் இச்சொற்கள், பணிவிடை பெற அல்ல, பணிபுரியவே வந்த இயேசுவுக்கு நம் இதயங்களைத் திறப்பதற்கு விடுக்கப்படும் அழைப்பாகும். பணிவிடை உண்மையான அன்பின் அடையாளம். ஒருவர் ஒருவர் மீது கொண்டிருக்கும் அன்பால் பணிபுரியும்  குடும்பங்களில் இதைச் சிறப்பாகக் கற்றுக்கொள்கிறோம். குடும்பத்தின் இதயத்தில் யாரும் ஒதுக்கப்படுவதில்லை. வற்புறுத்தல் இல்லாமல் கேட்பதற்கு குடும்பங்களில் கற்றுக்கொள்கிறோம். குடும்பம், மிக அருகில் இருக்கும் மருத்துவமனை. அது இளையோருக்கு முதல் பள்ளி, வயதானவர்க்கு சிறந்த பள்ளி, அது சிறந்த சமூக மூலதனம். மற்ற நிறுவனங்களால் அதை ஈடுசெய்ய முடியாது. குடும்பங்களுக்கு உதவிகள் செய்யப்பட்டு அவை உறுதிப்படுத்தப்பட வேண்டும். உதவிகள் என்ற உணர்வு இழக்காதிருக்கும்படி, இந்த உதவிகள் பிச்சை போடுவது போல் இருக்காமல், குடும்பம் என்ற நிறுவனத்தின்மீது உண்மையான மதிப்போடு ஆற்றப்படும் சமூகக் கடனாக அமைய வேண்டும். இது பொது நலனுக்கு மிகவும் உதவுவதாக இருக்கும்.

குடும்பம் சிறிய திருஅவையாக, இல்லத் திருஅவையாக உள்ளது. இங்கு வாழ்வோடு, இறைவனின் கனிவும் கருணையும் உள்ளது. குடும்பத்தில், தாயின் பாலோடு விசுவாசமும் ஊட்டப்படுகின்றது. நம் பெற்றோரின் அன்பை நாம் அனுபவிக்கும்போது, நாம் இறைவனின் அன்பின் அருகாமையையும் உணர்கிறோம்.

நாம் வைத்திருக்கும் குறைந்த பொருள்களோடு, நாம் யார் என்பதோடு, நம் கரங்களில் இருப்பதோடு குடும்பத்தில் பல நேரங்களில் அற்புதங்கள் நிகழ்கின்றன. இது ஒரு பேரம் அல்ல, நாம் கனவு காண்பது அல்ல அல்லது எப்படி இருக்க வேண்டுமென்பதல்ல. கானா திருமண விருந்தில் புதிய இரசம் தண்ணீர்த் தொட்டிகளிலிருந்து வந்தவை. ஒவ்வொருவரும் அவரவர் பாவங்களை விட்ட இடங்களிலிருந்து வந்தவை என்றுகூடச் சொல்லலாம். “பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது(உரோ.5.20)”. நம் சொந்தக் குடும்பத்திலும், நாம் அனைவரும் சார்ந்திருக்கும் பெரிய குடும்பத்திலும் எதுவுமே பயனற்றது அல்ல, எதுவுமே தூக்கி எறியப்படுவது அல்ல. இரக்கத்தின் ஜூபிலி ஆண்டைத் தொடங்குவதற்கு முன்னர் திருஅவை, குடும்பம் குறித்த உலக ஆயர்கள் மாமன்றத்தைச் சிறப்பிக்கவுள்ளது. இக்காலத்தில் குடும்பங்கள் எதிர்நோக்கும் பல இன்னல்கள் மற்றும் குறிப்பிடத்தக்க சவால்களுக்குத் தெளிவான தீர்வு காண்பதற்கும், திருஅவை தனது ஆழமான ஆன்மீகத்தை ஆராயவும் இம்மான்றம் முயற்சிக்கும். இதற்காகச் செபியுங்கள். இதன்மூலம் தூய்மையற்றதை, துர்மாதிரிகையானதை அல்லது அச்சுறுத்துவதாகத் தெரிவதை கிறிஸ்து அகற்றுமாறு செபிப்போம்.

இரசம் தீர்ந்துவிட்டதால் இவை எல்லாம் நடக்கின்றன. கன்னிமரியா கவனமுடன் இருந்ததால் இக்குறை நீக்கப்பட்டது. மரியா தனது அக்கறையை இறைவனின் கரத்தில் அர்ப்பணித்து உணர்ந்து துணிச்சலோடு இருந்ததால் இக்குறை நீக்கப்பட்டது. இதனால் எல்லாரும் நல்ல இரசத்தை எல்லாரும் பருகி அனுபவித்தனர். எனவே, இயேசு சொல்வதுபோல் செய்யுமாறு அன்னை மரியா நம்மை அழைக்கிறார். நல்ல இரசங்கள் சுவை பார்க்கப்படவுள்ளன. அன்பை தினமும் ருசி பார்க்கும்போது, நம் குழந்தைகள் குடும்பங்களைப் பாராட்டும்போது, வாழ்வின் மகிழ்வில் வயதானவர்கள் பிரசன்னமாய் இருக்கும்போது, நம்பிக்கையிழந்தவர்கள் மீண்டு வரும்போது நல்ல இரசம் சுவை பார்க்கப்படும் காலம் வரும். அன்னைமரியிடம் இதற்காக அருள் வேண்டுவோம். குடும்பத்தில் வாழும் மகிழ்வை மீண்டும் கண்டுகொள்ளும் புதிய இரசத்திற்காக நன்றி செலுத்துவோம். இவ்வாறு தனது மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.