2015-07-07 16:31:00

கடுகு சிறுத்தாலும்.. : மதங்களைப் புரிந்துகொண்டோமா?


ஓர் ஊரில் ஒரு பெரியவர், ஆசையாக ஒரு ரோஜா செடியை அவர் வீட்டு வாசலில் வைத்து வளர்த்து வந்தார். அந்தச் செடி அழகாக பூத்து குலுங்கியது.

அந்தச் செடி வளர்ந்து வரும்வேளையில் அந்தப் பக்கமாக வரும் ஆடு, மாடு, கோழி போன்றவை அந்தச் செடியை மிதிப்பதும், கடிப்பதுமாக நாசம் செய்துகொண்டிருந்தன. இதைக் கண்ட அந்தப் பெரியவர், அந்தச் செடியைப் பாதுகாக்க எண்ணி, அந்த ரோஜா செடியை சுற்றிலும் சில முள் வேலிகளைப் போட்டு வைத்தார். சிறிது காலம் சென்று அந்தப் பெரியவர் இறந்து விட்டார்.

பிறகு அவருடைய மகன், தன் தந்தை ஆசையாக வளர்த்த செடி ஆயிற்றே என்று அதனை ஆசையாக தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தார். சிறிது காலத்தில் அவரும் இறந்து விட்டார். பிறகு அவருடைய மகன் வந்து, இது என் தாத்தாவும் தந்தையும் வளர்த்த செடி, நானும் வளர்க்க வேண்டும் என்று, அவரும் தண்ணீர் ஊற்றி வளர்க்க ஆரம்பித்தார். இப்படியே ஒவ்வொரு தலைமுறையும் அந்தச் செடியை வளர்த்து வந்தது. ஆனால் உண்மையில், அந்த ரோஜா செடி பெரியவர் காலத்திலேயே பட்டுப்போய் விட்டது, இப்போது அவர்கள் செடி என்று வளர்ப்பதெல்லாம் அதைச் சுற்றி இருந்த முள் வேலிகளையே.

இதைபோல்தான், பெரியவர்கள், மனிதரைச் செழுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், மதத்தை உரமூட்டி வளர்த்து, அந்த மதம் அழியாமல் இருக்க முள் வேலி போன்று மதத்திற்கு சில சம்பிரதாயச் சடங்குகளை விதித்தனர். ஆதியில் மதத்தைக் கடைப்பிடித்த மனிதன், இப்போது ஒவ்வொரு மதத்திலும் இருக்கும் சம்பிரதாயச் சடங்குகளையே மதம் என்று எண்ணி கடைப்பிடிக்க ஆரம்பித்து விட்டான். இன்று ஒவ்வொரு மதத்திலும் இருக்கும் உண்மைகளைப் பின்பற்றுவோர் வெகுசிலரே. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.