2015-07-06 16:00:00

கிட்டோ விமான நிலைய வரவேற்பு


ஜூலை,06,2015. ஆல் இத்தாலியா A330 விமானத்தில் 13 மணி நேரம் பயணம் செய்து ஈக்குவதோர் நாட்டுத் தலைநகர் கிட்டோ “Mariscal Sucre” பன்னாட்டு விமான நிலையத்தை ஈக்குவதோர் நேரம் ஞாயிறு மாலை 3 மணிக்குச் சென்றடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அப்போது காற்று பலமாக வீசியதால் திருத்தந்தையின் தொப்பி பறந்து சென்றது.  கிட்டோ விமான நிலையத்தில் ஈக்குவதோர் அரசுத்தலைவர் Rafael Correa அவர்களும் அவரது மனைவியும், “உங்களின் வீட்டிற்கு நல்வரவு” என்று சொல்லி இனிய வரவேற்பளித்தனர். இன்னும், பிற அரசு அதிகாரிகளும் மரபு உடையணிந்த சிறாரும் வரவேற்றனர். விமான நிலைய வரவேற்பில் முதலில் அரசுத்தலைவர் Correa அவர்கள் உரையாற்றினார்.

ஈக்குவதோர் நாட்டின் மனித வாழ்வுக்கு ஆதரவான சட்டங்கள் மற்றும் குடும்பத்திற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் குறிப்பிட்டார் அரசுத்தலைவர் Correa. தென் அமெரிக்கா, ஒரு கிறிஸ்தவக் கண்டமாக இருப்பினும், அதற்கு முரண்பாடுகளை அங்குக் காண முடிகின்றது. இக்கண்டத்தில் சமத்துவமின்மை அதிகமாக நிலவுகின்றது என்றும் சொல்லி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Laudato Si’-இறைவா, உமக்கே புகழ் என்ற புதிய திருமடல் பற்றியும், வறுமை மற்றும் சமூக நீதி பற்றியும் பேசினார்.

இவ்வுரைக்குப் பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், ஈக்குவதோர் அரசுத்தலைவர் Rafael Correa அவர்கள் தன்னை சற்று மிகைப்படவே புகழ்ந்து பேசினார் என்று சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்து, இத்திருத்தூதுப் பயணத்தின் தனது முதல் உரையைத் தொடங்கினார். இறைவனின் கருணைக்கும், இயேசு கிறிஸ்துவில் வைத்துள்ள விசுவாசத்துக்கும் சாட்சியாக வந்துள்ளேன் என்று சொல்லி, ஈக்குவதோர் நாட்டின் சில முக்கிய புனிதர்களின் பெயர்களையும் குறிப்பிட்டார் திருத்தந்தை.

ஈக்குவதோர் நாட்டின் கிட்டோ “Mariscal Sucre” பன்னாட்டு விமான நிலையத்தில் தனது முதல் உரையை நிறைவு செய்த பின்னர், சாதாரண பியாத் காரில் பின்பக்க இருக்கையில் அமர்ந்து அங்கிருந்து கிட்டோ நகருக்குப் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். 40 கிலோ மீட்டர் தூரப் பயணத்தில், கிட்டோ திருப்பீடத் தூதரகம் செல்வதற்கு 8 கிலோ மீட்டர் தூரத்தில் திறந்த காரில் ஏறி, வழியெங்கும் இரு பக்கங்களிலும் நின்று கொண்டு வாழ்த்திய மக்களை திருத்தந்தையும் வாழ்த்தினார். காரிலிருந்து அரசுத்தலைவர் எட்டிப் பார்த்தபோது, Correa வேண்டாமென மக்கள் கூறியது, அம்மக்கள் திருத்தந்தையைக் காண விரும்பியதை உணர முடிந்தது. திருத்தந்தையின் உருவம் பொறித்த விளம்பரங்கள், டி ஷர்ட்டுகள் என பலவற்றையும் சாலைகளில் காண முடிந்தது.  கிட்டோ திருப்பீடத் தூதரகத்தில் இரவு உணவருந்தினார் திருத்தந்தை. அங்கு அவர் உறங்கச் செல்வதற்கு முன்னர், திடீரென பால்கனிக்கு வந்து அவ்விடத்தில் காத்துக்கொண்டிருந்த பல கத்தோலிக்கரை வாழ்த்தினார். அவர்களுக்கு நன்றி சொல்லி, தன்னோடு சேர்ந்து அருள் நிறைந்த மரியே செபத்தைச் செபிக்குமாறு கூறி சேர்ந்து அவர்களோடு சேர்ந்து செபித்தார். தொடர்ந்து அங்கு நின்று கொண்டிருந்த மக்களிடம், இவ்விடத்தின் அருகில் வாழ்பவர்க்குத் தொந்தரவு இல்லாமல் கலைந்து செல்லுங்கள் என இனிதாகக் கேட்டுக்கொண்டார். இத்துடன் இந்த ஒன்பது நாள்கள் கொண்ட இப்பயணத்தின் முதல் நாள் நிறைவுற்றது.

ஈக்குவதோர் நாட்டில் 2வது நாளாக, இத்திங்கள் உள்ளூர் நேரம் காலை 8 மணிக்கு பயண நிகழ்வுகளைத் தொடங்கினார். அப்போது இந்திய இலங்கை நேரம் இத்திங்கள் மாலை 6.30 மணியாகும். கிட்டோவிலிருந்து Quayaquilவிற்கு விமானத்தில் சென்று இறை இரக்கத் திருத்தலத்தைச் சந்தித்தல், அந்நகரின் Samanes பூங்காவில் திருப்பலி, இயேசு சபை இல்லத்தில் மதிய உணவு, மீண்டும் கிட்டோ நகர் சென்று ஈக்குவதோர் அரசுத்தலைவரைச் சந்தித்தல் ஆகிய நிகழ்வுகள் இத்திங்கள் பயணத் திட்டத்தில் உள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.