2015-07-06 15:53:00

ஈக்குவதோர் நோக்கிய விமானப் பயணத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்


ஜூலை,06,2015. உரோம், லெயோனார்தோ த வின்ச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் தான் சந்தித்த பணியாளர்கள், திருஅவை மற்றும் அரசு பிரமுகர்ளை வாழ்த்தி இப்பயணத்தைத் தொடங்கினார் திருத்தந்தை. இப்பயணத்தில் முதலில் திருப்பீடச் செய்தித் தொடர்பாளரும், வத்திக்கான் வானொலி இயக்குனருமான இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள், அவ்விமானத்தில் பயணம் செய்யும் பன்னாட்டு பத்திரிகையாளர்கள் பற்றி முதலில் திருத்தந்தையிடம் எடுத்துச் சொன்னார். திருத்தந்தையே, பல நாடுகளைச் சேர்ந்த பல மொழிகள் பேசும் நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், தங்களோடு இந்த விமானப் பயணம் செய்வதற்கு விண்ணப்பித்திருந்தனர். ஆனால் இடமில்லாததால் 75 பேருக்கே மட்டுமே அனுமதி வழங்கினோம். மற்றவர்கள், ஈக்குவதோர், பொலிவியா, பராகுவாய் ஆகிய நாடுகளில் ஏற்கனவே காத்திருக்கின்றனர். இப்பத்திரிகையாளர்கள் 800 முதல் ஆயிரம் என அறிகிறேன். நற்செய்தியின் மகிழ்ச்சியை அறிவிக்கும் நல்ல செய்தியைக் கொண்டுசெல்லும் தங்களுக்கும் தங்களோடு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புக்கும் நன்றி என்று அருள்பணி லொம்பார்தி அவர்கள் கூறினார். திருத்தந்தையும் அனைத்துப் பத்திரிகையாளர்களுக்கும் காலை வணக்கம் சொல்லி, இவர்கள் ஆற்றவிருக்கும் அதிகமான பணிக்கு நன்றியும் தெரிவித்து 13 மணி நேர விமானப் பயணத்தைத் தொடர்ந்தார். இப்பயணத்தில் இடையில் எழுந்து சென்று, ஒவ்வொரு பத்திரிகையாளரிடம் பேசிக்கொண்டிருந்தார் திருத்தந்தை. அச்சமயத்தில் சிலர் கொடுத்த பரிசுப் பொருள்களையும் பெற்றுக் கொண்டார். பொலிவிய நாட்டுப் பெண் நிருபர் ஒருவர், பொலிவியச் சிறார் வரைந்த படங்களையும், அந்நாட்டின் சுக்ரேயில் திருத்தந்தை உருவத்துடன் செய்யப்பட்ட சாக்லேட் இனிப்பையும் திருத்தந்தைக்குக் கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்ட திருத்தந்தை, சிறாரின் ஓவியங்கள் தனக்குப் பிடிக்கும் என்று தெரிவித்தார்.

10,103 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்தப் பயணத்தில் தான் கடந்து செல்லும் இத்தாலி நாட்டின் அரசுத்தலைவர் செர்ஜோ மத்தரெல்லா, இஸ்பெயினின் அரசர் 6ம் பிலிப், போர்த்துக்கல் நாட்டு அரசுத்தலைவர் Anibal Cavaco Silva, வெனேசுவேலா அரசுத்தலைவர் நிக்கோலாஸ் மதுரோ மோரோஸ், கொலம்பியா அரசுத்தலைவர் ஹூவான் மனுவேல் சாந்தோஸ், ஈக்குவதோர் ஆகிய நாடுகளின் அரசுத்தலைவர்களுக்கு வாழ்த்துத் தந்திகளையும், அந்நாடுகளின் மக்களுக்குத் தனது செபங்களையும் தெரிவிக்கும் வாழ்த்துத் தந்திகளையும் அனுப்பினார். அந்நாடுகளின்  மக்கள் அனைவரும் ஒருமைப்பாட்டிலும், அமைதியான நல்லிணக்கத்திலும் வாழ்ந்து, மனித மற்றும் ஆன்மீக மதிப்பீடுகளை வளர்க்குமாறு ஊக்குவித்துள்ளார் திருத்தந்தை. இத்தாலிய அரசுத்தலைவர் மத்தரெல்லா அவர்களும், திருத்தந்தையின் செய்திக்கு நன்றி தெரிவித்து செய்தி அனுப்பினார். இந்த இலத்தீன் அமெரிக்க நாடுகள் ஒவ்வொன்றும் தனக்கேயுரிய அரசியல், பொருளாதார மற்றும் சமூகச் சூழல்களில் வாழ்ந்துவரும் இவ்வேளையில், இத்திருத்தூதுப் பயணத்தை இத்தாலியும், அனைத்துலக சமுதாயமும் மிகுந்த ஆர்வமுடன் கவனித்துக் கொண்டிருக்கின்றது. திருத்தந்தையின் இப்பயணம், இந்த நாடுகள், இத்தாலி மற்றும் ஐரோப்பாவின் வருங்காலத்திற்கு அழுத்தமான நம்பிக்கை செய்தியைக் கொண்டுவரும் என்ற உறுதியைத் தெரிவித்துள்ளார் அரசுத்தலைவர் மத்தரெல்லா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.