2015-07-04 16:10:00

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு கவுரவ முனைவர் பட்டம்


ஜூலை,04,2015. முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு, போலந்து நாட்டு கிராக்கோவ் திருத்தந்தை 2ம் ஜான் பால் பல்கலைக்கழகம் மற்றும் கிராக்கோவ் இசைக் கழகம் கவுரவ முனைவர் பட்டத்தை இச்சனிக்கிழமை வழங்கின.

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தற்போது ஓய்வுக்காகச் சென்றிருக்கும் காஸ்தெல் கந்தோல்ஃபோவிலுள்ள பாப்பிறை மாளிகையில், கிராக்கோவ் 2ம் ஜான் பால் பல்கலைக்கழக துணைவேந்தர் கர்தினால் ஸ்தனிஸ்லாஸ் திஷ்விஷ் மற்றும் அப்பல்கலைக்கழக செனட் அவைக் குழுவினரால் இம்முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. 

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், அறிவுக்கும் கலாச்சாரத்திற்கும் ஆற்றியுள்ள சேவைகள், திருஅவையின் மரபு இசைமீது இத்திருத்தந்தை கொண்டிருக்கும் பெருமதிப்பு, விசுவாச இசைமீது இவர் வைத்திருக்கும் குறிப்பிடத்தக்க ஆர்வம், திருஇசையின் உன்னத அழகின்மீது இவர் வாழ்வு முழுவதும் வெளிப்படுத்தும் ஆர்வம், இவர் வாழ்நாள் முழுவதும் உண்மைக்கு அர்ப்பணித்திருப்பது போன்ற பல காரணங்களுக்காக இம்முனைவர் பட்டம் வழங்கப்படுவதாக இக்குழுவினர் அறிவித்தனர்.

இந்நிகழ்வில் நன்றியுரையாற்றிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், உண்மையில் இசை என்பது என்ன, இது எங்கிருந்து வருகிறது, எங்கு நிறைவடைகின்றது என்ற கேள்விகளையும் எழுப்பினார். அன்பு அனுபவம், மரணம், வேதனை போன்றவற்றால் ஏற்படும் துன்ப அனுபவம், இறைவனைச் சந்திப்பதால் ஏற்படும் அனுபவம்.. இவற்றால் இசை பிறக்கின்றது என்று விளக்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.