2015-07-04 15:33:00

ஜூலை5-13 ஈக்குவதோர்,பொலிவியா பராகுவாய் நாடுகளில் திருத்தந்தை


ஜூலை,04,2015. “கிறிஸ்துவின் கருணைநிறை அன்பே, நமக்கு உண்மையான சுதந்திரத்தையும், உண்மையான மகிழ்வையும் வழங்குகிறது”என்ற வார்த்தைகளை, தனது டுவிட்டரில் இச்சனிக்கிழமையன்று பதிவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், ஜூலை,05, இஞ்ஞாயிறன்று உரோம் நேரம் காலை 9 மணிக்கு இலத்தீன் அமெரிக்காவுக்கான தனது இரண்டாவது திருத்தூதுப் பயணத்தைத் தொடங்குகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 9வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணமாக அமைந்துள்ள இப்பயணத்தில், ஈக்குவதோர், பொலிவியா, பராகுவாய் ஆகிய மூன்று இலத்தீன் அமெரிக்க நாடுகளில் பயண நிகழ்வுகளை நிறைவேற்றுவார்.

இம்மாதம் 5 முதல் 13ம் தேதி வரை இடம்பெறும் இத்திருத்தூதுப் பயணத்தில் ஏழு தடவைகள் விமானப் பயணம் மேற்கொள்வார், 22 உரைகள் நிகழ்த்துவார், பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு நற்செய்தியின் மகிழ்வை அறிவிப்பார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் நகரிலிருந்து 13 மணி நேரம் விமானப் பயணம் செய்து ஈக்குவதோர் நாட்டுத் தலைநகர் குய்ட்டோவை இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் மாலை 3 மணிக்குச் சென்றடைவார் திருத்தந்தை. அப்போது இந்திய-இலங்கை நேரம் வருகிற திங்கள் அதிகாலை 1.30 மணியாக இருக்கும். இந்தியாவுக்கும், ஈக்குவதோர் நாட்டுக்கும் இடையே உள்ள கால இடைவெளி 10.30 மணியாகும். குய்ட்டோ விமான நிலைய வரவேற்பு நிகழ்ச்சிகளில் அந்நாட்டுக்கான தனது முதல் உரையை வழங்குவார் திருத்தந்தை. அடுத்த நாளான வருகிற திங்கள், செவ்வாய் தினங்களில் ஈக்குவதோர் நாட்டில் பயண நிகழ்வுகளை நிறைவுசெய்து, பொலிவியா நாட்டிலும், பின்னர் பராகுவாய் நாட்டிலும் திருத்தூதுப் பயணத் திட்டங்களை நிறைவேற்றுவார்.

ஜூலை 12 ஞாயிறு மாலை 6.15 மணியளவில் பராகுவாய் நாட்டிலிருந்து உரோம் நகருக்குப் புறப்பட்டு, ஜூலை 13 திங்கள் பிற்பகல் 1.45 மணியளவில் உரோம் வந்து சேர்வார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.