2015-07-04 16:25:00

ஜப்பானில் மக்கள்தொகை குறைவு, ஆயர்கள் கவலை


ஜூலை,04,2015. ஜப்பானில் இளையோர் எண்ணிக்கை குறைந்து வருவதும், வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் கவலை தருகின்றது என்று ஆந்நாட்டு ஆயர் ஒருவர் கூறினார்.

ஜப்பானின் Niigata ஆயர் Isao Kikuchi அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் ஓய்வூதிய அமைப்புமுறையும், நலவாழ்வு வசதிகளும் வீழ்ச்சியடையும் அச்சுறுத்தலை முன்வைக்கும் வயதானவர் சமுதாயப் பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது என்று கூறியுள்ளார்.

டோக்கியோ போன்ற மாநகரங்களில் குடியேறும் இளையோர் சமுதாய எண்ணிக்கை குறைந்து வருவதும், வயதானவர் சமுதாயமும், உள்ளூர் சமூகங்கள் இல்லாமல் போகும் ஆபத்தை அறிவிக்கின்றன என்றும் ஆயரின் அறிக்கை கூறுகிறது.

ஜப்பானின் மக்கள்தொகை ஆறாவது ஆண்டாக 2014ம் ஆண்டில் கடும் சரிவில் இருந்தது. அந்நாட்டு மக்கள் தொகையில் 25.9 விழுக்காட்டினர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள். ஜப்பானில் 1968ம் ஆண்டுக்குப் பின்னர் முதியோர் தொகை, மொத்த மக்கள் தொகையில் 25 விழுக்காட்டுக்கும் அதிகமாகியுள்ளது.

தாய்மார் கர்ப்பம் தரித்தலை ஊக்குவிக்கும் விதமாக, ஜப்பான் ஆயர்கள், 2010ம் ஆண்டை வாழ்வு ஆண்டு என அறிவித்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.