2015-07-04 16:35:00

சிரியா அகதிகளுக்கு ஐ.நா. உதவி குறைப்பு


ஜூலை,04,2015. சிரியா நாட்டுப் புலம் பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி நிறுத்தப்படும் என்று ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட அமைப்பு அறிவித்துள்ளது, ஆயிரக்கணக்கான புலம் பெயர்ந்த மக்கள் பசிக்கொடுமையை அனுபவிக்க வழிசெய்யும் என்று ஜோர்டன் காரித்தாஸ் கூறியது.

ஐ.நா. நிதியுதவியை நிறுத்தத் தீர்மானித்திருப்பது, சிரியா மற்றும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான புலம் பெயர்ந்த மக்களுக்கு அடைக்கலம் அளித்துள்ள ஜோர்டன் நாட்டில் கடும் எதிர்மறை விளைவுகளை உண்டுபண்ணும் என்று ஜோர்டன் காரித்தாஸ் இயக்குனர் Wael Suleiman அவர்கள் கூறினார்.

வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் உதவிகள் இல்லாமையால், சிரியா புலம் பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி நிறுத்தப்படும் என்று உலக உணவுத் திட்ட அமைப்பு கடந்த வாரத்தில் எச்சரித்திருந்தது.

இதற்கிடையே, ஐ.நா.விடமிருந்து பணம் கிடைக்கவில்லையெனில், 4 இலட்சத்து ஐம்பதாயிரம் பேருக்கு விநியோகிக்கப்படும் உணவு நிறுத்தப்படும் என்று இவ்வியாழனன்று ஜோர்டன் அறிவித்துள்ளது.

தற்சமயம் 14 இலட்சம் சிரியா நாட்டுப் புலம் பெயர்ந்த மக்கள் ஜோர்டனில் உள்ளனர்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.