2015-07-04 16:45:00

இந்தியா-கிராம மக்களில் 40 விழுக்காட்டினர் நிலமற்றவர்கள்


ஜூலை,04,2015. இந்தியாவில் கிராமங்களில் ஏறக்குறைய 18 கோடிக் குடும்பங்கள் உள்ளன, இக்குடும்பங்களில், அதிகபட்சமாக ஒருவர் ஐந்தாயிரம் ரூபாய்க்குக் குறைவான மாத ஊதியத்தையே பெறுகின்றார், மேலும், இக்கிராம மக்களில் 40 விழுக்காட்டினர் நிலமற்றவர்கள் என்று ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இந்திய மத்திய அரசு, இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ள சமூக, பொருளாதார, சாதிவாரியப் புள்ளி விபர அறிக்கையில், கிராமங்களில் வாழும் குடும்பங்களில் மூன்றில் ஒரு குடும்பம் நிலமற்றது, நிலத்தை வைத்திருக்கும் குடும்பங்களிலும் 25 விழுக்காடு, விவசாயம் செய்வதற்கு வசதியின்றி, பருவ மழையையே சார்ந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.  

மத்திய கிராம முன்னேற்ற அமைச்சகம், இந்தியா முழுவதும் உள்ள 640 மாவட்டங்களில் எடுத்த இந்தக் கணக்கெடுப்பில், 23.52 விழுக்காட்டுக் கிராமப்புறக் குடும்பங்களில் 25 வயதுக்கு மேற்பட்டவர்களில் படித்தவர்கள் கிடையாது என்றும் தெரியவந்துள்ளது.

நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் 24.39 கோடிக் குடும்பங்கள் வாழ்கின்றன. இவற்றில் 17.91 கோடிக் குடும்பத்தினர் கிராமப்புறங்களில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தலித் இனத்தை பொறுத்தவரையில் 70 விழுக்காட்டினரும், பழங்குடியினர் 50 விழுக்காட்டினரும் நிலமற்றவர்களாக இருந்து வருகின்றனர்.

இந்தியாவில் கடந்த 1931ம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட சாதிவாரியான கணக்கெடுப்பு அதன் பிறகு நிறுத்தப்பட்டுவிட்டது. 1931ம் ஆண்டுக்குப் பிறகு மதம், இனம், சாதி, பொருளாதார அளவீடுகள், வாழ்விடம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களுடன் எடுக்கப்பட்ட முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011ம் ஆண்டு எடுக்கப்பட்டது.

இந்தியாவில் பல்வேறு மக்களின் சமூக, பொருளாதார, சாதி, கல்வி விபரங்களைத் தொகுப்பதற்காக சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரிக் கணக்கெடுப்பாக இது அமைந்தது.

ஆதாரம் : PTI/ IANS/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.