2015-07-04 16:40:00

AIDS மனித உரிமைகள் விவகாரம், ஐ.நா. பொதுச் செயலர்


ஜூலை,04,2015. எல்லா இடங்களிலும், எல்லாச் சமூகங்களிலும் எய்ட்ஸ் நோயை முற்றிலும் ஒழிப்பது, அனைவருக்கும் மாண்புடைய வாழ்வை அமைப்பதற்கான இலக்கை அடைவதற்கு இன்றியமையாதது என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் தெரிவித்தார்.

எய்ட்ஸ் உயிர்க் கொல்லி நோயை ஒழிப்பது குறித்த புதிய அறிக்கையை, கரீபியன் பகுதி தீவு நாடாகிய Barbadosல் இவ்வெள்ளியன்று வெளியிட்ட பான் கி மூன் அவர்கள் இவ்வாறு கூறினார்.

இப்பகுதியில் வாழும் மக்களில் 25 விழுக்காட்டினர் HIV நோய்க் கிருமிகளுடன் வாழ்கின்றனர், இந்நோயாளிகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அரசுகள் நிதி நெருக்கடியை எதிர்நோக்குகின்றன என்றும் பான் கி மூன் அவர்கள் தெரிவித்தார்.

2030ம் ஆண்டுக்குள் எய்ட்ஸ் நோயை முழுவதுமாக ஒழிப்பது எப்படி என்பதை உலகம் தெரிந்திருக்க வேண்டும் என்றும், தண்டனைக்குரிய சட்டங்கள் மற்றும் இழிவான பார்வை மூலம் இந்நோய் மேலும் மோசமடைகின்றது என்றும் அவர் கூறினார்.

HIV/AIDS குறித்த ஐ.நா. எய்ட்ஸ் பிரிவும்(UNAIDS), The Lancet மருத்துவ இதழும் இணைந்து இவ்வறிக்கையைத் தயாரித்துள்ளன.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.