2015-07-01 17:02:00

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் கைது செய்யப்பட வலியுறுத்தல்


ஜூலை,01,2015. இந்தியாவில் கடந்த மாதத்தில் அருள்சகோதரி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான விவகாரத்தில் சந்தேகிக்கப்படும் குற்றவாளிகளின் பெயர்கள் இன்னும் அறிவிக்கப்படாமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் கண்டன ஊர்வலங்கள் நடைபெற்றன.

சட்டீஸ்கார் மாநிலத்திலும், தலைநகர் டெல்லியிலும் இச்செவ்வாயன்று ஏராளமான கிறிஸ்தவர்கள் கண்டன ஊர்வலங்கள் நடத்தி காவல்துறையின் மெத்தனப்போக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு, காவல்துறை, குற்றவாளிகளை மறைப்பதற்கு முயற்சிப்பதாகக் கூறி குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.

அமலமரி சலேசிய சபையைச் சார்ந்த அருள்சகோதரி ஒருவர் கடந்த ஜூன் 20ம் தேதி ரெய்ப்பூரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார்.

அச்சகோதரிக்கு தங்களின் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் விதமாக, ரெய்ப்பூரில் இச்செவ்வாயன்று அனைத்து தனியார் பள்ளிகளும் மூடப்பட்டன.

டெல்லியிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவரும் அருள்சகோதரிகளும் ஊர்வலம் நடத்தி, குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தினர்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.