2015-07-01 15:44:00

கடல் ஞாயிறு - கப்பல் தொழிலாளருக்குத் திருஅவை பாராட்டு


ஜூலை,01,2015. தங்கள் சொந்த நாடுகளைவிட்டு பெருமளவில் மக்கள் வெளியேறுவதற்குக் காரணமாக உள்ள நாடுகளில் உறுதியான மற்றும் நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு, அந்தந்த நாடுகளின் அரசுகளும், ஐரோப்பிய அரசுகளும் அனைத்துலக நிறுவனங்களும் நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது திருப்பீடம்.

ஜூலை,12, ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் கடல் ஞாயிறுக்கென செய்தி வெளியிட்டுள்ள, குடிபெயர்வோர் மற்றும் புலம்பெயர்வோர்க்கு மேய்ப்புப்பணியாற்றும் திருப்பீட அவை, போர்கள் மற்றும் வறுமை காரணமாக, தங்கள் நாடுகளை விட்டு வெளியேறும் மக்கள் வர்த்தகம் செய்யப்படுதல் மற்றும் அவர்கள் தவறாகப் பயன்படுத்தப்படுதல் தடை செய்யப்படுமாறு வலியுறுத்தியுள்ளது.

ஆபத்தான கடல் பயணத்தில் உயிருக்குப் போராடும் ஆயிரக்கணக்கான குடியேற்றதாரர்களைக் காப்பாற்றும் பணியில் நாடுகள் மேலும் தங்களை அர்ப்பணிக்குமாறு கேட்டுள்ள இத்திருப்பீட அவை, தங்கள் வாழ்வையும் பணயம் வைத்து இம்மக்களைக் காப்பாற்றும் பணியைச் செய்துள்ள சரக்குக் கப்பல் பணியாளர்க்குத் தனது நன்றியையும் தெரிவித்துள்ளது.

அனைத்துலக வர்த்தகத்திற்குப் பெரும் பங்களிப்பைக் கொடுத்துவரும் கப்பல் வர்த்தகம் செய்யும் அனைவரையும் இந்த கடல் ஞாயிறன்று கத்தோலிக்கத் திருஅவை நன்றியோடு நினைக்கின்றது என்றும் அச்செய்தி தெரிவிக்கிறது.

இயற்கையின் கடும் சீற்றங்களுக்கு மத்தியில் பணிசெய்யும் ஏறக்குறைய 12 இலட்சம் கப்பல் தொழிலாளர்களை இன்றைய உலகளாவிய பொருளாதாரம் சார்ந்துள்ளது என்றும், இன்றையப் போர்கள், வன்முறை, நிலையற்ற அரசியல் ஆகியவை கப்பல் தொழிலை அதிகம் பாதிக்கின்றன என்றும் கடல் ஞாயிறு செய்தி சுட்டிக்காட்டுகிறது.

கத்தோலிக்கத் திருஅவையில் 1975ம் ஆண்டு முதல் கடல் ஞாயிறு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.