2015-07-01 17:21:00

அமைதி ஆர்வலர்கள் : 1988ல் நொபெல் அமைதி விருது


ஜூலை,01,2015. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அமைதி காக்கும் படைகளுக்கு 1988ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் நிறுவனம் அனைத்துலக அரசியலில் மிகுந்த தாக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை, உலகில் பனிப்போர் முடிவடைந்த காலக்கட்டத்தில் நார்வே நொபெல் விருது வழங்கும் குழு சுட்டிக்காட்ட விரும்பியது. அப்படி விரும்பிய இக்குழு, படைவீரர்களாகவும், கண்காணிப்பாளர்களாகவும் போர் நிறுத்த மற்றும் போர்ப் பகுதிகளில் பணியாற்றிய ஐ.நா.வின் இராணுவப் பணியாளர்களுக்கு நொபெல் அமைதி விருதை வழங்கியது. 1948ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ஐ.நா. அமைதி காக்கும் படை அமைப்பில், அவ்வாண்டு முதல் 1988ம் ஆண்டு வரையான நாற்பது ஆண்டுகளில், 53 நாடுகளில் ஐந்து இலட்சத்துக்கு மேற்பட்ட பணியாளர்கள் ஐ.நா. அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்களில் 733 பேர் தங்கள் உயிர்களை இழந்திருந்தனர். உலக நிறுவனமான ஐ.நா., 1988ம் ஆண்டுவரை தனது அமைதி காக்கும் படைகளை, மத்திய கிழக்குப் பகுதி, காஷ்மீர், சைப்ரஸ், காங்கோ மற்றும் மேற்கு நியூ கினி பகுதிகளுக்கு அனுப்பியிருந்தது. ஐ.நா.வின் உறுப்பு நாடுகள் முன்வந்து அனுப்பும் படைவீரர்களைக் கொண்ட இந்த அமைப்பு, ஐ.நா.பொதுச் செயலரின் நேரிடை அதிகாரத்தின்கீழ் செயல்படுகின்றது. இந்த ஐ.நா. படைகள் தற்காப்புக்காக, மென்ரக ஆயுதங்களைக் கொண்டிருக்கின்றனர். பிரச்சனைகள் நிறைந்த சூழல்கள் குறித்து தகவல் அளிப்பது, தாக்குதல்களிலிருந்து மக்களைக் காக்கும் பாதுகாப்பு வலையங்களை அமைப்பது, போரிடும் தரப்புக்களுக்கிடையே தொடர்புகள் வைத்திருத்தல், போர் நிறுத்த ஒப்பந்தங்களைக் கண்காணித்தல், மனிதாபிமான உதவிகளை வழங்குதல் போன்றவையே  ஐ.நா. அமைதி காக்கும் படைகளின் முக்கிய பணிகளாகும்.  

ஆண்டுதோறும் மே 29ம் தேதி ஐ.நா. அமைதி காக்கும் படைகளின் அனைத்துலக நாள் சிறப்பிக்கப்படுகின்றது. அமைதி காக்கும் பணியில் இறந்தவர்களை நினைத்து மரியாதை செலுத்தவும், இந்தப் பணியில் தொடர்ந்து துணிச்சலுடன் பணியாற்றும் அனைத்து மனிதருக்கும் மரியாதை செலுத்தி அவர்களை ஊக்கப்படுத்தவும் இந்த உலக நாள்      உருவாக்கப்பட்டது. இந்த இராணுவ அமைப்பு உருவாக்கப்பட்ட 1948ம் ஆண்டிலிருந்து, 2015ம் ஆண்டு ஏப்ரல்வரை, இதில் பணியாற்றிய இராணுவத்தினர், காவல்துறையினர், பொதுப் பணியாளர்கள் என, 3,358 பேர் உயிரிழந்துள்ளனர். வன்முறை, விபத்துகள் மற்றும் நோய்களே இந்த இறப்புகளுக்குக் காரணம். ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு ஆகிய பகுதிகளில் 1948ம் ஆண்டிலிருந்து 71 இடங்களில் ஐ.நா.வின் அமைதி காக்கும் பணிகள் ஆற்றப்பட்டுள்ளன. இந்த ஐ.நா. அமைதிப் படையில் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பணியாற்றியுள்ளனர். தற்போது ஏறக்குறைய ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ஆண்களும், பெண்களும் நான்கு கண்டங்களில் 16 அமைதி காக்கும் பணித்தளங்களில் பணியாற்றி வருகின்றனர். உலகில் மிகவும் சவாலான, ஆபத்தான சூழல்களில் இவர்கள் உள்ளனர். இவர்கள் மக்களின் பாதுகாப்புக் காரணமாகவே தேவைப்பட்ட பகுதிகளில் பணியில் அமர்த்தப்படுகின்றனர்.

ஆயுதம் ஏந்தாத கண்காணிப்புக் குழுக்கள், மென்ரக ஆயுதங்கள் ஏந்திய இராணுவப் படைகள் என, ஐ.நா. அமைதி காக்கும் படைகளின் பணிகளில் இரு வகைகள் உள்ளன. ஆயுதங்கள் ஏந்திய இராணுவப் படைகள், தற்காப்புக்காக மட்டுமே ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றனர். இந்த இரண்டு வகைகளிலும் மொத்தம் 14 உள்ளன. ஆயுதம் ஏந்தாத கண்காணிப்புக் குழுக்கள், பணிசெய்யும் இடங்களின் உண்மை நிலைகள் குறித்து ஐக்கிய நாடுகள் நிறுவனத்திற்கு அறிவிக்கின்றன. எடுத்துக்காட்டாக, போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள இடங்களில், போரிட்ட இரு தரப்புகளும் ஒப்பந்தக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கின்றனவா என்பது போன்ற தகவல்களை ஐ.நா.வுக்கு தெரிவிக்கின்றன. அதேசமயம், ஐ.நா. இராணுவப் படைகளின் பணிகள் சற்று அதிகமானவை. போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள இடங்களில், போரிட்ட இரு தரப்புகளும் மீண்டும் தாக்குதலைத் தொடங்காமல் இருப்பதையும், அவ்விடங்களில் சட்டம் ஒழுங்கு காக்கப்படுவதையும் இப்படைகள் கவனிக்கின்றன. ஐ.நா.வின் இந்த இரு பிரிவுகளுமே, மத்திய கிழக்குப் பகுதியில் அதிகமாக வேலை செய்கின்றன.

1948ம் ஆண்டில் இஸ்ரேலுக்கும், அரபு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்பார்வையிடுவதற்காக ஐ.நா. முதன்முதலில் தனது கண்காணிப்பாளர்களை அனுப்பியது. மேலும், 1956, 1967, 1973 ஆகிய ஆண்டுகளில் போர்களுக்குப் பின்னர் ஐ.நா. கண்காணிப்புக் குழுக்கள் மீண்டும் பணியில் ஈடுபட்டன. 1956ம் ஆண்டுக்குப் பின்னர், சீனாய் விவகாரம் தொடர்பாக இஸ்ரேலுக்கும், எகிப்துக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தைக் கண்காணிப்பதற்கு, ஆயுதங்கள் ஏந்திய ஐ.நா. இராணுவப் படைகள் முதன்முதலில் உருவாக்கப்பட்டன. இதற்கு பத்து நாடுகள் தங்களின் படைவீரர்களைக் கொடுத்து உதவின. 1967ம் ஆண்டில் இஸ்ரேலுக்கும், எகிப்துக்கும் இடையே ஏற்பட்ட போருக்குப் பின்னர் மற்றுமொரு ஐ.நா. இராணுவப் பிரிவு உருவாக்கப்பட்டது. உள்ளூரிலும், பெரிய வல்லரசுகளுக்கும் இடையேயும் கடும் பதட்ட நிலைகள் காணப்பட்ட சமயம் அது. மேலும், பெல்ஜியத்தின் காலனி நாடாக இருந்த காங்கோ சுதந்திரம் அடைந்தபோது 1960ம் ஆண்டில் ஏற்பட்ட கடும் சண்டையை நிறுத்துவதற்கு ஐ.நா. முக்கிய பங்காற்றியது.

இவ்வாறு, 1988ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது  பெற்ற  ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அமைதி காக்கும் படைகள், இன்றும் தொடர்ந்து பல இடங்களில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.