2015-06-30 16:51:00

திருத்தந்தையின் 9வது வெளிநாட்டுத் திருப்பயண விபரங்கள்


ஜூன்,30,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வருகிற ஞாயிறன்று தொடங்கவிருக்கும் மூன்று இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான திருத்தூதுப் பயணங்கள் குறித்த விபரங்களை இச்செவ்வாயன்று பத்திரிகையாளர் கூட்டத்தில் வெளியிட்டார் திருப்பீட செய்தித் தொடர்பாளர் இயேசு சபை அருள்பணியாளர் பெதரிக்கோ லொம்பார்தி.

ஜூலை 5ம் தேதி ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 9 மணிக்கு உரோம் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்படும் திருத்தந்தை, 13 மணி நேரம் பயணம் செய்து, ஞாயிறு மாலை 3 மணியளவில் ஈக்குவதோர் நாட்டுத் தலைநகர் குய்ட்டோ பன்னாட்டு விமான நிலையம் சென்றடைவார். அப்போது இந்திய இலங்கை நேரம் திங்கள் அதிகாலை 1 மணி 30 நிமிடமாக இருக்கும். ஈக்குவதோர் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையேயுள்ள கால இடைவெளி 10 மணி 30 நிமிடமாகும்.

ஈக்குவதோரில் பயண நிகழ்வுகளை நிறைவு செய்து, பின்னர் பொலிவியா, பராகுவாய் ஆகிய நாடுகளுக்கும் செல்வார் திருத்தந்தை. ஜூலை 12ம் தேதி இத்திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்து 13ம் தேதி திங்கள் பிற்பகல் 1.45 மணியளவில் உரோம் வந்து சேர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 5ம் தேதி முதல் 13ம் தேதி வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் இத்திருத்தூதுப் பயணம், திருத்தந்தையின் இரண்டாவது இலத்தீன் அமெரிக்கப் பயணமாகும். இதற்கு முன்னர், 2013ம் ஆண்டு ஜூலையில் பிரேசில் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், ஈக்குவதோர், பொலிவியா  மற்றும் பராகுவாய் நாடுகளுக்கான இத்திருத்தூதுப் பயணம், திருத்தந்தையின் 9வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணமாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.