2015-06-30 16:33:00

திருத்தந்தை-கிறிஸ்தவர்களும் யூதர்களும் சகோதரர்கள், நண்பர்கள்


ஜூன்,30,2015. கிறிஸ்தவமல்லாச் சமயங்களோடு திருஅவைக்குள்ள உறவு பற்றிய இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்க அறிக்கையாகிய Nostra Aetate, கிறிஸ்தவத்தின் யூத மூலத்தை உறுதி செய்துள்ளதோடு, யூதமத விரோதப்போக்கிற்கு நிரந்தரமாக முடிவுகட்டியுள்ளது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வாரத்தில் உரோம் நகரில் கூட்டம் நடத்தும் அனைத்துலக கிறிஸ்தவ-யூத அவையின் 255 உறுப்பினர்களை இச்செவ்வாயன்று வத்திக்கானின் Clementine அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ-யூத மரபுகள் அந்நியமானவை அல்ல, ஆனால், அவையிரண்டும் சகோதரர்கள், நண்பர்கள் என்று கூறினார்.  

இந்த அறிக்கை வெளியிடப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் இவ்வேளையில், கிறிஸ்தவ-யூதமத உரையாடலில் இவ்வறிக்கை கொணர்ந்துள்ள வளமான கனிகளை நம்மால் காணவும், நன்றியுடன் பாராட்டவும் முடிகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் நாம் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதிலும், நட்பிலும்  வளர்ந்துள்ளதற்கு இறைவனுக்கு நன்றி தெரிவிப்போம் என்றும் கூறிய திருத்தந்தை, கிறிஸ்தவர்களும் யூதர்களும் மாறுபட்ட கூறுகளைக் கொண்டிருந்தாலும், இந்த உலகைப் படைத்த வரலாற்றின் ஆண்டவரான ஒரே இறைவனில் இவ்விரு மதத்தவரும் தங்களின் விசுவாசத்தை அறிக்கையிடுகின்றனர் என்றும் கூறினார்.

இறுதியில், இந்த அனைத்துலக உரையாடல் அவை நடத்தும் ஆண்டுக் கூட்டங்கள் குறிப்பிடத்தக்க பலன்களைத் தருகின்றன என்று சொல்லி அவற்றைப் பாராட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

“Nostra Aetateன் 50ம் ஆண்டு நிறைவு : கிறிஸ்தவ-யூதமத உறவின் கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் வருங்காலம்” என்ற தலைப்பில் இந்த உறுப்பினர்கள் கூட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.