2015-06-30 16:57:00

செப்டம்பர் 19-28, கியூபா, அமெரிக்கா, ஐ.நா.வில் திருத்தந்தை


ஜூன்,30,2015. வருகிற செப்டம்பர் 19ம் தேதி முதல் 28ம் தேதி வரை, கியூபா, அமெரிக்க ஐக்கிய நாடு, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமையகம் ஆகியவற்றுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணம் பற்றிய விபரங்களைத் திருப்பீடம் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் பிலடெல்பியாவில் நடைபெறவிருக்கும் 8வது உலக குடும்பங்கள் மாநாட்டில் கலந்துகொள்வதையொட்டி இத்திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 19ம் தேதி சனிக்கிழமை உரோமையிலிருந்து முதலில் கியூபத் தலைநகர் ஹவானா செல்வார்.

ஹவானா விமான நிலைய வரவேற்பு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் திருத்தந்தை, 20ம் தேதி ஞாயிறன்று ஹவானாவில் திருப்பலி நிறைவேற்றுவார். அன்று மாலை மரியாதை நிமித்தம் அரசுத்தலைவரைச் சந்திப்பார், பின்னர் குருக்கள், துறவியருடன் மாலை திருவழிபாட்டில் கலந்துகொள்வார். அதே நாளில் கியூப இளையோரையும் சந்திப்பார் திருத்தந்தை.

21, 22ம் தேதிகளில் கியூபாவில் பயண நிகழ்வுகளை நிறைவுசெய்து 22ம் தேதி மாலை 4 மணிக்கு வாஷிங்க்டன் செல்வார் திருத்தந்தை. 23ம் தேதியன்று அமெரிக்க அரசுத்தலைவர் சந்திப்பு, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களுக்கு உரை, வாஷிங்க்டன் அமல அன்னை திருத்தலத்தில் அருளாளர்  Junípero Serra அவர்களுக்கு புனிதர் பட்டமளிப்பு திருப்பலி ஆகிய நிகழ்வுகளை நடத்துவார் திருத்தந்தை.

24ம் தேதியன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டு காங்கிரஸ் அவைக்குச் சென்று உரையாற்றுதல், வாஷிங்க்டனில் வீடற்றவரைச் சந்தித்தல் ஆகிய நிகழ்வுகளை நிறைவு செய்து நியுயார்க் புறப்படுவார் திருத்தந்தை பிரான்சிஸ். அங்கு புனித பேட்ரிக் பேராலயத்தில் குருக்கள், துறவியரைச் சந்திப்பார்.

25ம் தேதி காலை 8.30 மணிக்கு ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமையகம் சென்று உரையாற்றுதல், பின்னர் தரைமட்டமாக்கப்பட்ட இரட்டைக் கோபுர நினைவிடத்தில் பல்சமயத்தினரைச் சந்தித்தல், குடிபெயர்வோரை மாலையில் சந்தித்தல், நியுயார்க்  Madison Square Gardenல் திருப்பலி ஆகியவை இடம்பெறும்.

26ம் தேதி பிலடெல்பியா செல்வார். 26, 27ம் தேதிகளில் பிலடெல்பியாவில் 8வது உலக குடும்பங்கள் மாநாட்டில் கலந்துகொள்வது, அதை நிறைவு செய்வது, இன்னும் பிற பயண நிகழ்வுகளை நிறைவேற்றுவார் திருத்தந்தை. அன்று இரவு 8 மணிக்கு உரோமைக்குப் புறப்படும் திருத்தந்தை, 28ம் தேதி காலை 10 மணியளவில் உரோம் வந்தடைவார்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.