2015-06-30 17:09:00

கத்தோலிக்க-புத்த மதத்தினரின் ஒன்றிணைந்த சமூகநலத் திட்டங்கள்


ஜூன்,30,2015. கத்தோலிக்கரும் புத்த மதத்தினரும் ஒன்றிணைந்து பல்வேறு சமூகநலத் திட்டங்களில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளனர்.

இத்தாலியின் காஸ்தெல் கந்தோல்ஃபோவில் கத்தோலிக்கரும் புத்த மதத்தினரும் இணைந்து நடத்திய ஐந்து நாள் கூட்டத்தில் இத்தீர்மானத்தை எடுத்து, அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

உலக வெப்பநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கு அந்தந்த இடங்களில் நடவடிக்கை எடுத்தல், நகரங்களில் இளையோர் நல்வாழ்வு திட்டங்கள், சிறைப்பணிகளில் ஒத்துழைப்பு, நீதி சார்ந்த விவகாரங்களை நிலைநாட்டுதல், குடிபெயர்வோர் நலன், குடும்பங்களுக்கு மதிப்பீட்டுக் கல்வி வழங்குதல், வீடற்றவர்க்கு உதவுதல் என, பல்வேறு திட்டங்களை, கத்தோலிக்கரும் புத்த மதத்தினரும் ஒன்றிணைந்து ஆற்றுவதற்கு இசைவு தெரிவித்துள்ளனர்.    

திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் ஒத்துழைப்புடன் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் பல்சமய விவகார ஆணைக்குழு, “துன்பம், விடுதலை மற்றும் உடன்பிறப்பு உணர்வு” என்ற தலைப்பில் கத்தோலிக்க- புத்தமத உரையாடல் கூட்டம் ஒன்றை ஜூன் 23 முதல் 27 வரை காஸ்தெல் கந்தோல்ஃபோவில் நடத்தியது.

இலங்கை, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், திபெத், சீனா, கொரியா, ஜப்பான் அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய நாடுகளின் புத்தமதப் பிரதிநிதிகள், அமெரிக்க ஐக்கிய நாட்டில் பல்சமய உரையாடலில் ஈடுபட்டுள்ள கத்தோலிக்கப் பிரதிநிதிகள் என 45 பேர் இதில் கலந்து கொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.