2015-06-29 15:31:00

புதிய பேராயர்களிடம் திருத்தந்தை - சாட்சிய மனிதராக வாழுங்கள்


ஜூன்,29,2015. வாழ்வதாக நினைக்கும் இறந்த மனிதர் போன்று, கனிகொடாத காய்ந்த மரம் போன்று, தண்ணீரை வழங்காத காலியான கிணறு போன்று, சான்று பகராத ஒரு திருஅவை வளமற்றது அல்லது ஒரு கிறிஸ்தவர் வளமற்றவர் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தூதர்கள் புனித பேதுரு, பவுல் பெருவிழாவான இத்திங்கள் காலை 9.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தீமைகளை மேற்கொள்ளும்  திருஅவை, துணிச்சலுடனும், உண்மையுடனும், தாழ்மையுடனும் சான்று பகர்ந்த தனது பிள்ளைகளுக்கு நன்றி செலுத்துகின்றது என்றும் கூறினார்.

மதுரை உயர்மறைமாவட்டப் பேராயர் அந்தோனி பாப்புசாமி அவர்கள் உட்பட, கடந்த ஆண்டில் அகிலத் திருஅவையில் பேராயர்களாக நியமனம் பெற்ற நாற்பதுக்கும் மேற்பட்ட பேராயர்களுடன் இத்திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நாளில் பால்யம் பெறும் இப்பேராயர்கள், செப மனிதர்களாக, விசுவாச மனிதர்களாக, சான்று பகரும் மனிதர்களாக வாழுமாறு கேட்டுக் கொண்டார்.

இத்திருப்பலியின் இறுதியில், இப்பேராயர்களைத் தனிப்பட்ட வகையில் சந்தித்து, அவர்கள் கரங்களில் 'பாலியம்' என்ற கழுத்துப்பட்டையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அகமும் புறமும் ஒன்றிணைந்து செல்லும் வாழ்வுமுறையின்றி சான்று பகர்தல் கிடையாது என்றும், இக்காலத்திற்குத் தலைவர்கள் அதிகமாகத் தேவைப்படவில்லை, ஆனால், துணிச்சலாக சான்று பகர்பவர்களே தேவைப்படுகின்றனர் என்றும் கூறினார் திருத்தந்தை.

விசுவாச மனிதர்களாக, விசுவாசத்தில் சிறந்தவர்களாக, எல்லாவிதமான சிலுவைகளை வழங்கி துன்புறுத்தும் பல ஏரோதுகளைக் கண்டு அஞ்சாமல் இருக்கும் விசுவாசத்தைப் போதிப்பவர்களாகத் திகழுமாறு திருஅவை பேராயர்களிடமிருந்து எதிர்பார்க்கிறது என்றும் கூறினார் திருத்தந்தை.

திருத்தந்தையர், ஆயர்கள், அருள்பணியாளர்கள் அல்லது பொதுநிலை விசுவாசிகளுக்கு திருஅவை சொந்தமல்ல, மாறாக, திருஅவை ஒவ்வொரு நேரமும் கிறிஸ்துவுக்கு மட்டுமே சொந்தமானது, கிறிஸ்துவில் வாழ்பவர் மட்டுமே, திருத்தூதர்கள் புனித பேதுரு, பவுல் ஆகியோரைப் பின்சென்று, தனது தூய வாழ்வால் திருஅவையை ஊக்குவித்து பாதுகாக்க முடியும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பால்யம், திருஅவையில் பேராயர்களாகப் பணியாற்றுவோர், உரோமை ஆயருடன் கொண்டிருக்கும் உறவைச் சுட்டிக்காட்டும் ஓர் அடையாளமாக, அமைந்துள்ளது. கடந்த ஆண்டில் நியமனம் பெற்ற 46 பேராயர்களுள் ஆறு பேர் ஆசியர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.