2015-06-29 15:47:00

நம் வாழ்வை மாற்றுவதும் உயிர்ப்பே - திருத்தந்தை பிரான்சிஸ்


ஜூன்,29,2015. இஞ்ஞாயிறு நண்பகலில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகள் மற்றும் திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவால் நம்மைக் குணப்படுத்த முடியும் மற்றும் இறப்பிலிருந்து நம்மை அவர் விழித்தெழச் செய்ய முடியும் என்பதை உண்மையிலேயே நாம் நம்புகின்றோமா என்ற கேள்வியை முன்வைத்தார்.

இறந்த யாயீர் என்பவரின் மகளுக்கு இயேசு மீண்டும் உயிர் கொடுத்தது மற்றும் பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண்ணுக்கு இயேசு குணமளித்தது ஆகிய இரு நிகழ்வுகளை விளக்கும் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

குணமாதல், உயிர்ப்பு ஆகிய இரு நிகழ்வுகளுக்கும் விசுவாசமே மையமாக உள்ளது என்றும், இவை இரண்டையும் நாம் ஒரே கேள்வியில் அடக்கலாம் என்றுரைத்த திருத்தந்தை, இயேசுவால் நம்மைக் குணப்படுத்த முடியும் மற்றும் இறப்பிலிருந்து நம்மை அவர் உயிர்த்தெழச் செய்ய முடியும் என்பதை உண்மையிலேயே நாம் நம்புகின்றோமா என்று விசுவாசிகளிடம் கேட்டார்.

இயேசு உயிர்த்துவிட்டார், அவர் மரணத்தை வென்றுவிட்டார் என்ற விசுவாச ஒளியில் முழு நற்செய்தியும் எழுதப்பட்டுள்ளது, இயேசுவின் இந்த வெற்றியால் நாமும் உயிர்த்தெழுவோம் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த உயிர்ப்பின் உறுதியில் வாழ்வதற்கு இஞ்ஞாயிறு இறைவார்த்தை நமக்கு அழைப்பு விடுக்கின்றது என்றுரைத்த திருத்தந்தை, மரணத்தைப் பார்த்து சோர்வடைந்த எவரும் இயேசுவிலும் அவரின் அன்பிலும் நம்பிக்கை வைத்தால் மீண்டும் வாழத் தொடங்குவார், உயிர்ப்பு, நம் வாழ்வை மாற்றும் என்றும் கூறினார்.

விசுவாசமே வாழ்வின் சக்தி, நம் மனித சமுதாயத்துக்கு முழுமையைக் கொடுப்பது விசுவாசம், எனவே உறுதியான விசுவாசத்திற்காக இறைஞ்சுவோம் என்றும் இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.