2015-06-29 16:10:00

45,000 கி.மீ. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரம்


ஜூன்,29,2015. நீர், நிலம், காற்று உள்ளிட்ட இயற்கை வளங்கள் சுற்றுச்சூழலால் மாசுபடுவதைத் தடுக்கும் நோக்கில், சைக்கிளில் இதுவரை 45,000 கி.மீ. பயணம் செய்துள்ளார் தமிழகத்தின் விவசாயி ஒருவர்.

நாமக்கல் மாவட்டம், என்.புதுப்பட்டியைச் சேர்ந்த 53 வயது அன்பு சார்லஸ் என்ற  விவசாயி, நாமக்கல்லில் கடந்த ஏப்ரல் 22ம் தேதியன்று சைக்கிளில் விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், உத்திரப்பிரதேசம், பீஹார் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பிரச்சாரத்தை முடித்துள்ளார்.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் சுற்றிய அன்பு சார்லஸ், கடந்த ஒரு வாரமாக இராமநாதபுரம் மாவட்டம், சிக்கல், வாலிநோக்கம், சாயல்குடி, கடலாடி ஆகிய பகுதிகளில் சைக்கிளில் சுற்றுப்பயணம் செய்து பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தாதீர், புகை ஏற்படுத்தி மாசு ஏற்படுத்தும் வாகனங்களை பயன்படுத்தாதீர் உள்ளிட்ட கருத்துக்களைக் கூறி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்தியாவில் இதுவரை 20 மாநிலங்களில் 5 இலட்சம் கிராமங்களுக்கு 45 ஆயிரம் கி.மீ. தூரம் சைக்கிளில் சென்று விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்துள்ளார் இவர். இப்பிரச்சாரங்களில், இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது, எரிபொருள் பயன்படுத்தும் வாகனங்களைத் தவிர்த்து சுற்றுப்புறத்தை மாசுபடுத்தாத வாகனங்களை அதிகமாகப் பயன்படுத்தலாம் என்று கூறியதாகத் தெரிவித்தார் அன்பு சார்லஸ்.

எம்.ஏ. சமூகவியல் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள இவர் இஞ்ஞாயிறன்று முதுகுளத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்தார்.

பீஹார் எல்லைப் பகுதியில் பிரச்சாரம் செய்தபோது உளவுப் பிரிவு காவல்துறை என நினைத்து நக்சலைட்டுகள் தன்னை 10 நாள்கள் சிறைப்பிடித்து வைத்திருந்ததாகவும், பத்திரிகைகளில் வெளியான செய்தியைப் பார்த்து பின்னர் அவர்கள் விடுவித்தனர் எனவும் கூறினார் அவர்.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.