2015-06-27 16:17:00

புதிய பேராயர்களுக்கு திருத்தந்தை வழங்கும் ‘பாலியம்’


ஜூன்,27,2015. கடந்த ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் பேராயர்களாக நியமனம் பெற்றவர்கள், ஜூன், 29, வருகிற திங்கள், திருத்தூதர்களான புனித பேதுரு, பவுல் ஆகியோரின் பெருவிழாவன்று, 'பாலியம்' எனப்படும் கழுத்துப் பட்டையை, திருத்தந்தையிடமிருந்து பெற்றுக்கொள்வர்.

அகில உலகக் கத்தோலிக்கத் திருஅவையில் பேராயர்களாகப் பணியாற்றுவோர், உரோமைய ஆயருடன் கொண்டிருக்கும் உறவைச் சுட்டிக்காட்டும் ஓர் அடையாளமாக, 'பாலியம்' கழுத்துப்பட்டை அமைந்துள்ளது.

உரோம் மறைமாவட்டத்தின் பாதுகாவலர்களாகக் கொண்டாடப்படும் புனிதர்கள், பேதுரு, பவுல் ஆகியோரின் பெருவிழா திருப்பலியின் ஓர் அங்கமாக, 'பாலியம்' வழங்கும் சடங்கு இதுவரை இடம் பெற்றுவந்தது.

இவ்வாண்டு முதல், இச்சடங்கில் மாற்றங்களை அறிவித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அகில உலக ஆயர்களுக்கு மடல் ஒன்றை அனுப்பியிருந்தார்.

இந்த மாற்றத்தின்படி, 'பாலியம்' கழுத்துப்பட்டையை, பேராயரின் கழுத்தில், திருத்தந்தை அணிவிப்பதற்குப் பதிலாக, திருப்பலியின் இறுதியில், பேராயர்களை தனிப்பட்ட வகையில் சந்திக்கும் திருத்தந்தை, அவர்கள் கரங்களில் 'பாலியம்' வழங்கவுள்ளார்.

அந்தந்த நாட்டில் திருத்தந்தையின் பிரதிநிதியாகப் பணியாற்றும் திருப்பீடத் தூதர்கள், மறைமாவட்ட மக்கள் முன்னிலையில் நிறைவேற்றும் திருப்பலியில், புதிதாக நியமனம் பெற்றுள்ள பேராயர்களுக்கு, 'பாலியம்' கழுத்துப் பட்டையை அணிவிக்கும் சடங்கு நிகழவேண்டும் என்று திருத்தந்தை அறிவித்திருந்தார்.

இருப்பினும், ஜூன் 29ம் தேதி கொண்டாடப்படும் பெருவிழாவின்போது, பேராயர்கள் உரோம் நகர் வந்து, திருத்தந்தையிடம் 'பாலியம்' கழுத்துப் பட்டையைப் பெற்றுச் செல்லலாம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்திருந்தார்.

இவ்வாண்டு, உலகெங்கும் புதிதாக நியமனம் பெற்ற 46 பேராயர்களில், மதுரை உயர் மறைமாவட்டப் பேராயர் அந்தோனி பாப்புசாமி உட்பட 40க்கும் மேற்பட்ட பேராயர்கள், உரோம் நகருக்கு வருகை தந்துள்ளனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.