2015-06-27 15:26:00

அறுபதாயிரம் குடியேற்றதாரரை ஏற்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்


ஜூன்,27,2015. மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் அனுமதியின்றி நுழைந்துள்ள குடியேற்றதாரர் பிரச்சனைக்கு தீர்வாக புதிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.

மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் வந்து, கிரேக்கத்திலும் இத்தாலியிலும் தற்போது தங்கியிருப்பவர்களில் நாற்பதாயிரம் பேரை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் படிப்படியாக ஏற்று, குடியமர்த்த, புதிய உடன்பாடு ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே இருந்தபடி தஞ்சம் கோரியுள்ளவர்களில், 20,000 பேரை ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் குடியேற்றவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த ஒட்டுமொத்த குடியேற்ற நடவடிக்கையும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தாமாக விரும்பிச் செய்யும் ஒன்றாக இருக்கும் என்றும், எந்த நாடும் குடியேறிகளை ஏற்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படாது என்றும் இந்த உடன்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் மட்டும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் குடியேற்றதாரர்கள் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் அனுமதியின்றி நுழைவதற்கு முயன்றுள்ளனர். 

ஆதாரம் : BBC/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.