2015-06-26 15:50:00

புலம்பெயர்ந்தோர் பிரச்சனை - ஐரோப்பிய ஆயர்களின் கருத்தரங்கு


ஜூன்,26,2015. காயப்பட்டிருக்கும் மனித சமுதாயம், நம்மை நோக்கி கரங்களை நீட்டும்போது, நாம் கண்களைத் திருப்பிக் கொள்ளக்கூடாது என்று ஐரோப்பிய ஆயர் பேரவை ஒன்றியம் கூறியுள்ளது.

அண்மைய ஆண்டுகளில், ஐரோப்பிய நாடுகளை நோக்கி புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை கூடிவரும் பிரச்சனையை, கண்டும் காணாமல் இருக்கமுடியாது என்று கூறும் இந்தப் பேரவை ஒன்றியம், இந்தப் பிரச்சனையை மையப்படுத்தி, ஜூன் 29, வருகிற திங்கள் முதல், ஜூலை 2ம் தேதி முடிய லிதுவேனியா நாட்டின் வில்னியுஸ் நகரில் நான்குநாள் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

ஐரோப்பாவை நோக்கி திரண்டு வரும் மக்களை வரவேற்கும் அதே வேளையில், அவர்கள் தங்கள் நாடுகளைவிட்டு வெளியேறுவதற்கு காரணங்கள் எவை என்பதையும் ஆய்வு செய்வது அவசியம் என்று பேரவை ஒன்றியம் கூறியுள்ளது.

இக்கருத்தரங்கின்போது, புலம்பெயந்தோரின் பிரச்சனைகளை ஆய்வு செய்யும்வேளையில், உலகெங்கும் வளர்ந்துவரும் மனித வர்த்தகம் குறித்தும் விவாதிக்கவேண்டும் என்று கருத்தரங்கின் அமைப்பாளர்கள் கூறியுள்ளனர்.

தங்கள் நாடுகளைவிட்டு கட்டாயமாக வெளியேற்றப்படும் அகதிகளின் நினைவாக, இக்கருத்தரங்கின் இறுதி நாளான, ஜூலை 2ம் தேதி, வில்னியுஸ் நகருக்கு அருகே அமைந்துள்ள சிலுவைகளின் குன்று என்ற இடத்திற்கு திருப்பயணம் ஒன்று மேற்கொள்ள கருத்தரங்கின் அமைப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.