2015-06-26 15:29:00

திருத்தந்தை : நன்மைகள் செய்ததால், இயேசுவும் தீட்டுப்பட்டார்


ஜூன்,26,2015. நன்மைகள் செய்யும்போது, நமது கரங்கள் கறைபடியாமல் இருப்பது இயலாத காரியம் என்றும், நன்மைகள் செய்ததால் இயேசுவும் தீட்டுப்பட்டார் என்றும் திருத்தந்தை இவ்வெள்ளியன்று வழங்கிய மறையுரையில் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளி காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஆற்றியத் திருப்பலியில், தொழுநோயாளர் ஒருவரை இயேசு தொட்டு குணமாக்கிய நிகழ்வை மையப்படுத்தி, மறையுரை வழங்கினார்.

ஒருவரை அணுகிச் செல்லாமல், ஒப்புரவு நிகழாது, நன்மைகள் செய்யமுடியாது என்று கூறியத் திருத்தந்தை, தன் ஒருவார்த்தையால் குணமாக்க முடியும் என்பதை அறிந்திருந்தும், தான் தீட்டுப்படுவோம் என்பதை அறிந்திருந்தும், இயேசு தொழுநோயாளரைத் தொட்டது நமக்கு நல்லதொரு பாடம் என்று எடுத்துரைத்தார்.

நோயுற்றோரை, பாவிகளைத் தொட்டதால், இயேசு, நோயாலும், பாவத்தாலும் தீண்டப் பட்டார் என்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இயேசுவின் இத்தகைய மனநிலையை புனித பவுல் அடியாரின், "கடவுள் வடிவில் விளங்கிய அவர்,... தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார்" (பிலி. 2:6-7) என்ற வார்த்தைகள் விளக்குகின்றன என்று கூறினார்.              

தொழுநோயாளருக்கு குணமளித்ததொடு இயேசு தன் பணியை நிறுத்தவில்லை, மாறாக, அவர் தான் குணமடைந்ததை, குருவிடம் காட்டி, மீண்டும் சமுதாயத்தோடு இணைந்துகொள்ளவும் இயேசு வழி காட்டுகிறார் என்பதையும் தன் மறையுரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார், திருத்தந்தை.

நாம் பாதிக்கப்படுவோம் என்ற காரணத்தால், நம்மில் பலர், நன்மைகள் செய்வதற்கு அஞ்சி, தேவைகளிலிருந்து தூரச் செல்கிறோம், அல்லது, நன்மைகள் செய்பவர்களை, தூரத்திலிருந்து விமர்சனம் செய்கிறோம் என்பதையும் திருத்தந்தை தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

கிறிஸ்தவ நெருக்கம் என்பதற்கு, இயேசு காட்டும் ஓர் அற்புத அடையாளம், அவர் தொழு நோயாளரைத் தொட்டு குணமாக்கியது என்பதை, தன் மறையுரையின் இறுதியில் திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.