2015-06-26 16:08:00

சகாயத் தாய் பக்தியின் 150வது ஆண்டு கொண்டாட்டங்கள்


ஜூன்,26,2015. 'சதா சகாயத் தாய்' என்று பரவலாகப் புகழ்பெற்றுள்ள 'என்றென்றும் உதவும் அன்னை மரியா'வின் (Our Lady of Perpetual Help) 150ம் ஆண்டு கொண்டாட்டங்கள், ஜூன் 27, இச்சனிக்கிழமை முதல், 2016ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி முடிய கொண்டாடப்படுகிறது என்று உலகமீட்பர் துறவற சபையின் தலைமையகம் அறிவித்துள்ளது.

1865ம் ஆண்டு, டிசம்பர் 11ம் தேதி, அப்போதைய திருத்தந்தையாக இருந்த அருளாளர் 9ம் பயஸ் அவர்கள், உலகமீட்பர் துறவற சபையின் உலகத் தலைவர், அருள்பணி நிக்கோலஸ் மவுரோன் (Nicholas Mauron) அவர்களிடம் 'சதா சகாயத் தாயி'ன் உருவத்தை ஒப்படைத்து, அன்னையின் இப்பக்தியைப் பரப்பும்படி அத்துறவற சபைக்குக் கட்டளையிட்டார்.

சகாயத் தாயின் உருவத்தை தங்கள் துறவற சபையின் அடையாளமாகக் கொண்டிருக்கும் உலகமீட்பர் துறவற சபையினர், அன்னையின் பக்தியை தாங்கள் பணிசெய்யச் சென்ற 80 நாடுகளில் பரப்பினர் என்று இச்சபையின் குறிப்புகள் கூறுகின்றன.

150ம் ஆண்டு கொண்டாட்டங்கள் 2014, 15, மற்றும் 16 ஆகிய மூன்று ஆண்டுகள் கொண்டாடப்படுவதாக இச்சபையின் தலைமையகம் வெளியிட்ட மற்றொரு குறிப்பு கூறுகிறது.

சகாயத் தாயின் திரு உருவம், கத்தோலிக்க உலகில் மிகவும் புகழ்பெற்ற உருவம் என்பதும், இந்த அன்னையின் மிகவும் புகழ்பெற்ற திருத்தலங்கள், பிரேசில் நாட்டின் Aparecida விலும், பிலிப்பின்ஸ் நாட்டின் மணிலாவிலும் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கவை. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.