2015-06-24 15:54:00

மறைக்கல்வி உரை – குடும்பங்களில் உருவாகும் மனக்கசப்புகள்


ஜூன்,24,2015. இப்புதனன்று உரோம் நகரின் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மறைக்கல்வி உரை, குடும்பம் குறித்த அவரின் கடந்த கால புதன் மறைக்கல்வி உரைகளின் தொடர்ச்சியாகவே இருந்தது. குடும்பங்களில் ஓர் அங்கத்தினர் இன்னொருவருக்கு எதிராக தீங்கிழைக்கும்போது ஏற்படும் மனக்கசப்புக்கள், மனப்பிளவுகள் ஆகியவைக் குறித்ததாக இப்புதன் மறைக்கல்வி உரை அமைந்திருந்தது.

ஒருவர் மற்றவரை மனதளவில் காயப்படுத்தும் நிகழ்வுகள் எல்லாக் குடும்பங்களிலும் ஏதாவது ஒரு சூழலில் இடம்பெறுவதுண்டு. நம்முடைய வார்த்தைகளால், செயல்களால், செய்யவேண்டியவற்றைச் செய்யாமல் விடுவதால், அதாவது, தம்பதியர் ஒருவர் ஒருவர் மீதோ, அல்லது, குழந்தைகள் மீதோ அன்பை காட்டத் தவறும்போது, அந்த அன்பையே நாம் குறையுடையதாக, அல்லது, குறைவாக மதிப்பிடுகிறோம். நம் குடும்பங்களில் ஏற்படும் காயங்களை, மனக்கசப்புகளை மறைப்பது, அந்த காயங்களை மேலும் ஆழப்படுத்தவேச் செய்யும். அன்பு கூர்பவர்களிடையே கோபமும், இடைவெளியும், முரண்பாடுகளும் அதிகரிக்கவே இது உதவும். இத்தகையக் காயங்கள் ஆழமானதாக மாறும்போது, பாதிக்கப்பட்ட தம்பதியருள் ஒருவர் இன்னொரு இடத்தில், ஆறுதலையும், புரிந்துகொள்ளும் நிலையையும் தேடும் நிலை உருவாகலாம். இதனால் குடும்பங்கள், குறிப்பாக குழந்தைகள், பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை எற்பட வாய்ப்புகள் உள்ளன. ஒரே உடலாய் இருக்கும் குடும்பங்களில், தம்பதியரிடையே ஏற்படும் பிளவுகள், குழந்தைகளை பெரிய அளவில் பாதிக்கும். 'சிறியோருள் எவரையேனும் பாவத்தில் விழச்செய்வோருடைய கழுத்தில் எந்திரக் கல்லைக் கட்டித் தொங்கவிட்டு, ஆழ்கடலில் அமிழ்த்துவது அவர்களுக்கு நல்லது' என இயேசு கூறியதை, மனதில் கொண்டவர்களாக, பெரியோர்களாகிய நாம், மனித குடும்பத்தின் அடிப்படையாக இருக்கும் திருமண ஒப்பந்தத்தை பாதுகாக்க வேண்டிய நம் பொறுப்புணர்வை அதிக அளவில் உணர்ந்து செயல்படுவோமாக. குடும்பத்தில் ஏற்படும் காயங்கள், சிலவேளைகளில் தம்பதியரிடையே பிரிவினைகளுக்கு வழி வகுத்தாலும், கணவன் மனைவியிடையே திருமண ஒப்பந்தம் நன்முறையில் மதிக்கப்பட்டு தொடர்வதற்கு, தங்கள் விசுவாசம் வழியாகவும், தங்கள் குழந்தைகள் மீது கொண்ட அன்பாலும் உறுதிப்படுத்தப்படும் தம்பதியருக்காக இறைவனுக்கு நாம் நன்றி கூறுவோம். திருமண வாழ்விலிருந்து மாறுபட்ட சூழல்களில் வாழும் தம்பதியரின் பிரச்னைகளைப் புரிந்துகொண்டு, அவர்களுடன் பயணம்செய்து, அவர்களுக்கு சிறந்தமுறையில் உதவுவது குறித்து சிந்திப்போம். குடும்ப வாழ்வின் உண்மை நிலைகளை இயேசுவின் கண்கொண்டு காணவும், இயேசுவின் கருணை நிறைந்த இதயத்தோடு நாம் அனைத்துக் குடும்பங்களையும் அணுகவும், இறைவனிடம் வரம் கேட்போம். இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் அண்மையில் நிறைவேற்றிய தூரின் நகர் திருப்பயணத்தின்போது தனக்கு உதவிய அனைவருக்கும் தன் நன்றியையும் வெளியிட்டார். இறுதியில், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.