2015-06-24 16:49:00

திருமடல் கருத்துக்கள், வியட்நாம் கலாச்சரத்துடன் தொடர்புடையவை


ஜூன்,24,2015. பொருளாதார முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்டிருக்கும் வியட்நாம் நாடு, சுற்றுச் சூழலுக்கு பெரும் ஆபத்துக்களை உருவாக்கி வருகிறது என்று வியட்நாம் தலத்திருஅவை கவலை வெளியிட்டுள்ளது.

'இறைவா, உமக்கே புகழ்' (Laudato sì) என்ற திருமடலின் பின்னணியில், 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' என்ற தலைப்புடன் வியட்நாமின் ஹோ சி மின் நகரில் கருத்தரங்கு ஒன்றை தலத்திருஅவை ஏற்பாடு செய்தது.

"நாம் யாரும் இயற்கையைப் படைக்கவில்லை, இயற்கையின் வளங்கள் அனைத்தும், அனைத்து மக்களுக்கும் சொந்தமானதே தவிர, ஒரு சில செல்வந்தர்களுக்கு மட்டுமல்ல" என்று, 2009ம் ஆண்டு, கர்தினால் Pham Minh Man அவர்கள் வெளியிட்ட வார்த்தைகள், இக்கருத்தரங்கின் துவக்கத்தில் கூறப்பட்டது.

திருத்தந்தை வெளியிட்டுள்ள 'இறைவா, உமக்கே புகழ்' என்ற திருமடலின் கருத்துக்கள், வியட்நாம் கலாச்சரத்துடன் தொடர்புடைய கருத்துக்களாக உள்ளன என்று கிறிஸ்தவர் அல்லாதவரும் கூறி வருகின்றனர் என்று ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஹோ சி மின் நகரைச் சுற்றி இயங்கிவரும் 100க்கும் அதிகமான பன்னாட்டு தொழிற்சாலைகள், ஒவ்வொரு நாளும், 13,40,000 கன மீட்டர் கழிவு நீரை Dong Nai நதியில் கலக்கிறது என்று இக்கருத்தரங்கில் புள்ளி  விவரம் ஒன்று வெளியிடப்பட்டது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.