2015-06-24 16:43:00

'இறைவா உமக்கே புகழ்' திருமடலுக்கு பாகிஸ்தானில் வரவேற்பு


ஜூன்,24,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள 'இறைவா உமக்கே புகழ்' (Laudato sì) என்ற திருமடலை, பாகிஸ்தான் தலத்திருஅவை மிகுந்த மகிழ்வுடன் வரவேற்கிறது என்று பாகிஸ்தான் பேரவையின் நீதி அமைதிப் பணிக்குழுவின் தலைவர், ஆயர் ஜோசப் அர்ஷத் (Joseph Arshad) அவர்கள் கூறினார்.

Fides கத்தோலிக்கச் செய்திக்கு, ஆயர் அர்ஷத் அவர்கள் அனுப்பியுள்ள ஒரு குறிப்பில், ஏழைகள், மற்றும் தேவையில் இருப்போர் உரிமைகளுக்காக, திருத்தந்தை இம்மடல் வழியே குரல் கொடுத்திருப்பது பெரிதும் வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளார்.

பூமிக் கோளத்தைக் குறித்து எழுப்பப்படும் பல கவலைகளை, தன் மடலில் சுட்டிக்காட்டியுள்ளத் திருத்தந்தை, இறைவனின் படைப்பு, வாழ்வின் மதிப்பை வலியுறுத்துகிறது என்பதையும் திருத்தந்தை விளக்கிக் கூறியுள்ளார் என்று ஆயர் அர்ஷத் அவர்கள் குறிப்பிட்டார்.

இவ்வாண்டின் இறுதியில் பாரிஸ் மாநகரில், ஐ.நா. அவையால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் காலநிலை மாற்றம் குறித்தக் அகில உலகக் கருத்தரங்கிற்கு திருத்தந்தையின் 'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடல், பெரிதும் உதவியாக இருக்கும் என்று தான் நம்புவதாக ஆயர் அர்ஷத் அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.