2015-06-23 16:42:00

விமான நிலைய அருள் பணியாளரின் கருத்தரங்கு செய்தி


ஜூன்,23,2015. பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் கூடிவந்து, பிரியும் இடமாக விளங்கும் விமான நிலையங்கள், சிறப்பு அக்கறைக்கு உரிய இடங்களாக இந்நாட்களில் மாறிவருகின்றன என்று, குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் பணியாற்றும் திருப்பீட அவை வெளியிட்ட செய்தி கூறுகிறது.

இம்மாதம் 10ம் தேதி முதல், 13ம் தேதி வரை, உரோம் நகரில் இடம்பெற்ற விமான நிலைய அருள் பணியாளரின் 16வது கருத்தரங்கில், வெளியிடப்பட்ட ஓர் ஏட்டில் இச்செய்தியை வழங்கியுள்ள திருப்பீட அவை, பல்வேறு மக்களின் தேவைகளை உணர்ந்தவர்களாக, தங்கள் மேய்ப்புப்பணியின் முக்கியத்துவத்தை அறிந்து, அருள் பணியாளர்கள் செயலாற்ற வேண்டியக் கட்டாயம் உள்ளது என்று கூறுகிறது.

விமானப் பயணிகளுக்கு, திரு அவையை ஒரு கனிவுள்ளத் தாயாகக் காண்பிப்பது, அங்கு பணிபுரியும் அருள் பணியாளர்களின் பொறுப்பு என்பதை வலியுறுத்தியுள்ள இந்த ஏடு, நல்மனம் கொண்ட மக்களுடன் இணைந்து, பொது நலனுக்காக உழைப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது.

உலகின் 24 நாடுகளின் 36 அனைத்துலக விமானத் தளங்களில் பணியாற்றிவரும் 94 கத்தோலிக்க அருள் பணியாளர்கள், இக்கருத்தரங்கில் பங்கேற்றனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.