2015-06-23 16:35:00

கத்தோலிக்க, புத்த உரையாடல் கருத்தரங்கில் கர்தினால் Tauran


ஜூன்,23,2015. நம் வாழ்வு குறித்த மறையுண்மைகளையும், முழு உண்மையையும் கண்டு கொள்ள நாம் மேற்கொள்ளும் தேடலின் ஒரு வெளிப்பாடாக கத்தோலிக்க, புத்த மதங்களுக்கிடையே உரையாடல் இடம்பெறுகின்றது என்று கூறினார் பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் Jean Louis Tauran.

பல்சமய உரையாடல் திருப்பீட அவை, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை ஆகியவற்றின் உதவியுடன், Focolare அமைப்பினர் உரோம் நகரில் ஏற்பாடு செய்துள்ள ஒரு கருத்தரங்கில் துவக்க உரையாற்றிய கர்தினால் தவ்ரான் அவர்கள், இக்கருத்தரங்கின் மையக்கருத்தான, 'துன்பம், விடுதலை மற்றும் உடன்பிறந்தோர் நிலை' என்பது குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

அமெரிக்காவில் வாழும் புத்த மதத்தினர், எவ்வாறு அங்குள்ள கத்தோலிக்கர்களுடன் இணைந்து, சமுதாயத் தீமைகளை அகற்ற உழைக்க முடியும் என்பது கர்தினால் தவ்ரான் அவர்கள் வழங்கிய துவக்க உரையின் மையக் கருத்தாக இருந்தது.

கத்தோலிக்க, புத்த கலந்துரையாடல்கள் ஓர் உள்மனப் பயணம் என்பது குறித்தும், இக்கலந்துரையாடல்களின் நோக்கங்கள் குறித்தும், பரிந்துரைகள் குறித்தும் தன் உரையில் குறிப்பிட்டார், பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் தவ்ரான்.

கத்தோலிக்க, புத்த உரையாடல் கருத்தரங்கு, ஜூன் 23, இச்செவ்வாய் முதல், 27, வருகிற சனிக்கிழமை முடிய, உரோம் நகருக்கு அருகே அமைந்துள்ள காஸ்தல் கந்தோல்போ என்ற இடத்தில் நடைபெறுகிறது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.