2015-06-23 15:29:00

கடுகு சிறுத்தாலும்... நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பில்லை!


கழுத்தில் மாட்டப்பட்ட ஒரு சிறு கூடையுடன், ஒரு நாய், மளிகைக்கடைக்கு முன் வந்து நின்றது. பிச்சையெடுப்பதற்கு அந்த நாயை யாரோ பழக்கியுள்ளனர் என்று எண்ணிய மளிகைக்கடைக்காரர், அதை விரட்ட முயன்றார். அவர் எவ்வளவுதான் விரட்டினாலும், அந்த நாய் அவ்விடத்தைவிட்டு அகலவில்லை.

‘என்னடா பெரிய தொல்லையா போச்சு’ என்று எண்ணியக் கடைக்காரர் வெளியே வந்து பார்த்தபோது, அந்த நாயின் வாயில் ஒரு சீட்டும், பணமும் இருந்தன. ஆச்சரியமடைந்த கடைக்காரர், அந்தச் சீட்டை எடுத்து பார்த்தார். அதில் மளிகைப்பொருள்கள் எழுதப்பட்டிருந்தன. சீட்டில் எழுதப்பட்டிருந்த பொருள்களையும்,  மீதி பணத்தையும் கூடையில் போட்டு, நாய் கழுத்தில் கடைக்காரர் மாட்டிவிட்டதும், நாய் புறப்பட்டுச் சென்றது.

அந்த நாயை, தவறாக எடை போட்டதற்காக மனம் வருந்தியக் கடைக்காரர், அதை அவ்வாறு பழக்கிவிட்டவர் யாரென்று அறிந்துகொள்ள, நாயைப் பின்தொடர்ந்து போனார். அந்த நாய், தெருவைக் கடந்து ‘மெயின் ரோட்’டிற்கு வந்தது. அப்போது ‘ரெட் சிக்னல்’ இருந்ததால், அந்த நாய் ‘ரோட்’டை கடக்காமல் நின்றது… ‘சிக்னல்’ பச்சையாக மாறியவுடன் நாய் ‘ரோட்’டைக் கடந்தது… கடைக்காரருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை…

‘ரோட்’டைக் கடந்த நாய், ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது. ஒரு குறிப்பிட்ட பேருந்து வந்தவுடன், பேருந்தில் ஏறியது. கடைக்காரரும் ஏறினார். நாய் வாயில் கவ்வியிருந்த பணத்தை எடுத்துக்கொண்ட ‘கண்டக்டர்’ ஒரு ‘டிக்கெட்’ கொடுத்தார். இரண்டு நிறுத்தங்கள் கடந்து, பேருந்தில் இருந்து இறங்கியது நாய். கடைக்காரரும் அதன் பின்னால் இறங்கினார்.

நாய் ஒரு தெருவை கடந்து, ஒரு வீட்டின் முன் நின்று கதவைத் தட்டியது. கதவைத் திறந்து ஒருவர் வந்தார். நாயின் கழுத்தில் இருந்த பையை எடுத்துக்கொண்ட அவர், நாயை அடித்தார்.

கடைக்காரர் ஓடிச்சென்று, “நிறுத்துங்க! ஏன் அடிக்கறீங்க? அது எவ்வளவு பொறுப்பா என் கடைக்கு வந்து பொருள்களை வாங்கிகிட்டு, ‘சிக்னல’ மதிச்சு, ‘பஸ்’ல ‘டிக்கெட்’ எடுத்துகிட்டு வருது... அதைப் போய் அடிக்கறீங்களே…!” என்று கூறினார். அதற்கு, நாயின் உரிமையாளர், “வீட்டுச் சாவிய எடுத்துட்டு போகாம வந்து, கதவத் தட்டி என் தூக்கத்தக் கெடுத்துடுச்சி, பாருங்க.. நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பில்லை” என்று சலித்துக் கொண்டார்.

மிருகங்கள் வதைபடுவதற்கு ஒரு முக்கியக் காரணம், மனிதர்கள் சோம்பேறிகளாக மாறியதுதானோ?

ஆதாரம் : தினகரன் / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.