2015-06-22 15:30:00

தூரின் நகரில் இளையோருடன் திருத்தந்தை மனம்விட்டுப் பேசியவை


ஜூன்,22,2015. தூரின் நகரில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட மேய்ப்புப்பணி பயணத்தின் ஓர் உச்ச நிகழ்வாக, வித்தோரியோ சதுக்கத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான இளையோரை, இஞ்ஞாயிறு மாலை 6 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்தார்.

அவ்விளையோருக்கு வழங்குவதற்காக தான் தயாரித்திருந்த உரையை வாசிப்பதற்குப்  பதிலாக, இளையோரிடம் மனம்விட்டு, நேரடியாகப் பேசினார் திருத்தந்தை.

அவ்விளையோரில் மூவர் எழுப்பியக் கேள்விகளுக்கு நன்றி கூறியத் திருத்தந்தை, அவர்களது கேள்விகள், யோவான் நற்செய்தியில் காணப்படும் அன்பு, வாழ்வு, நண்பர்கள் என்ற மூன்று வார்த்தைகளை மையப்படுத்தியிருந்தன என்ற குறிப்புடன் தன் உரையை ஆரம்பித்தார்.

அன்பு, வாழ்வு, நண்பர்கள் என்ற மூன்று அம்சங்களும், வாழவேண்டும் என்ற மன உறுதியிலிருந்து வருவன என்பதை, தன் உரையின் துவக்கத்தில் திருத்தந்தை வலியுறுத்தினார்.

"வாழ்வது என்பது, ஏனோதானோவென்று இயங்குவது அல்ல" என்று, அவர்களையொத்த இளையோரான, அருளாளர், பியர் ஜார்ஜியோ ஃபிரசாத்தி (Pier Giorgio Frassati) அவர்கள் கூறியதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இளையோருக்கு நினைவுறுத்தியபின், 20 வயதிலேயே, வாழ்வதிலிருந்து ஒய்வு பெற விழையும் இளையோரைக் கண்டு தான் மிகவும் வருத்தப்படுவதாகக் கூறினார்.

தொலைக்காட்சியில் இடம்பெறும் நாடகங்களில் காட்டப்படும் அன்பு, உண்மையான அன்பு அல்ல என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வார்த்தைகளைவிட, செயல்களில் வெளிப்படுவதே, உண்மையான அன்பு என்பதை வலியுறுத்திக் கூறினார்.

உறவுகளில் வெளிப்படும் அன்பு குறித்துப் பேசியத் திருத்தந்தை, தங்கள் சுயநலனுக்காக, ஆதாயத்திற்காக, அடுத்தவரைப் பயன்படுத்தத் தூண்டும் இவ்வுலகப் போக்கிலிருந்து விடுபட்டு, அடுத்தவரை உண்மையாகவே மதித்து, உறவுகொள்ளும்போதுதான் உண்மை அன்பு வெளிப்படுகிறது என்று திருத்தந்தை கூடியிருந்த இளையோரிடம் கூறினார்.

தனக்கென அனைத்தையும் அபகரித்துக்கொள்ளத் தூண்டும் இவ்வுலகில், அவரவர் பெறக்கூடிய இன்பத்தை மட்டும் விளம்பரப்படுத்தும் இவ்வுலகில், கற்புடன் வாழ்வது பெரும் சவால் என்பதையும் திருத்தந்தை தன் உரையில் வலியுறுத்தினார்.

அன்பு என்பது, பிறருக்குப் பணியாற்றுவதில் அமைந்துள்ளது என்ற கருத்தை விளக்கும் வகையில், நோயுற்றிருக்கும் தன் குழந்தையின் அருகில் இரவெல்லாம் கண்விழித்திருக்கும் பெற்றோர், அடுத்தநாள், தங்கள் களைப்பைப் பெரிதுபடுத்தாமல், மற்ற பணிகளை மேற்கொள்வது, உண்மை அன்பின் சிறந்ததோர் எடுத்துக்காட்டு என்று திருத்தந்தை குறிப்பிட்டுப் பேசினார்.

இவ்விதம், அன்பைக் குறித்து தன் மனதிலிருந்து எழுந்த கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமுதாயப் பிரச்சனைகள் குறித்து, சிறப்பாக, வேலைவாய்ப்பின்றி தவிக்கும் இளையோர், உபயோகமற்றவர்கள் என்ற கருத்தால், கருவில் அழிக்கப்படும் குழந்தைகள், வயது முதிர்ந்தோர் ஆகியோரைக் குறித்துப் பேசினார்.

பகிர்ந்து வாழ்வதில் இளையோர் வளரவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்த, தெருவில் வாழும் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பது, இளையோர் ஆற்றக்கூடிய ஒரு பெரும் உதவி என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

மிகக் கடினமானச் சூழலில் வாழ்ந்த சிறுவர்களையும், இளையோரையும் காக்க, சலேசியத் துறவு சபை துவக்கப்பட்டது என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இளையோருக்கு வழங்கியத் தன் உரையின் இறுதியில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.