2015-06-22 17:00:00

இத்தாலியின் தூரின் நகரில் திருத்தந்தை - திருப்பயண விளக்கம்


இத்தாலியின் வடமேற்கில் உள்ள தூரின் நகருக்கு ஜூன் 21,22 ஆகிய இரு நாள்கள் திருப்பயணம் மேற்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். ஞாயிறன்று துவக்கப்பட்ட இத்திருப்பயணத்தின் முக்கிய நோக்கங்கள் இரண்டு. ஒன்று, இயேசுவின் இறந்த உடலைப் போர்த்தியிருந்த துணியைத் தரிசித்து, செபிப்பது. இரண்டு, சலேசிய துறவுசபையை நிறுவிய புனித ஜான் போஸ்கோ பிறந்ததன் 200ம் ஆண்டுக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வது.

ஞாயிறன்று காலை இத்தாலிய நேரம் எட்டு மணிக்கு, திருத்தந்தை, தூரின் நகர் விமான நிலையத்தில் இறங்கி, நேரடியாக, அரச வளாகம் என அழைக்கப்படும் Reale வளாகம் நோக்கிச் சென்றார். அங்கு தொழில் உலகினருடன் ஓர் சந்திப்பை மேற்கொண்டார். தொழில் உலகம் சந்திக்கும் பிரச்சனைகளை ஒரு பெண் தொழிலாளி, ஒரு விவசாயி, ஒரு சிறு தொழிலதிபர் என மூவர் மேடையில் எடுத்துரைக்க, திருத்தந்தையும், அங்கு குழுமியிருந்த தொழில் உலக அங்கத்தினர்களை நோக்கி, வெலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படவேண்டியதன் அவசியம் குறித்தும், மக்கள் முன்னேற்றத்தை மனதில்கொண்ட ஒப்பந்தங்களின் அத்தியாவசியம் குறித்தும் எடுத்துரைத்தார். வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளையோர், மற்றும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தப் போராடும் குடியேற்றதாரர்கள் ஆகியோருடன் தன் ஒருமைப்பாட்டையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். வருங்காலத்தின் நம்பிக்கையாக இருக்கும் இளையோரும், கடந்த காலத்தின் நினைவுகளாக இருக்கும் முதியோரும், ஒரு தேசத்தின் சொத்துக்கள் எனவும் தன் உரையில் குறிப்பிட்டார் திருத்தந்தை.

இந்த சந்திப்புக்குப் பின்னரே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நகர் புனித திருமுழுக்கு யோவான் பேராலயம் சென்று, இயேசுவின் புனிதத் துணியைத் தரிசித்தார். தூரின் நகர் முதிய அருள்பணியாளர்களும், அடைபட்ட மடத்தின் அருள்கன்னியர்களும் அத்துணியை தரிசிக்க திருத்தந்தையுடன் அனுமதிக்கப்பட்டனர். அதன்பின், தூரின் நகர் வித்தோரியோ சதுக்கத்தில் குழுமியிருந்த விசுவாசிகளுக்கு, திருப்பலி நிறைவேற்றி மறையுரையும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பலிக்குப்பின் தூரின் நகர் பேராயர் இல்லத்தில், இளையோர் பிரதிநிதிகளோடும், புலம்பெயர்ந்த மக்கள் சிலருடனும் இணைந்து மதிய உணவருந்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். பிற்பகலில், அன்னமரி பசிலிக்காவில், சலேசிய துறவுசபை அருள்பணியாளர்களையும், சலேசிய சபை பெண் துறவிகளையும் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை. அவர்களுக்கு வழங்கிய உரையில், சலேசிய சபைக்கும் தனக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு குறித்து எடுத்துரைத்தார். தனக்கு திருமுழுக்கு அளித்ததும், துறவு வாழ்வை மேற்கொள்ள வழிகாட்டியதும் ஒரு சலேசிய அருள்பணியாளரே எனவும் திருத்தந்தை கூறினார். இன்றைய உலகில் இளையோர் வேலைவாய்ப்பின்றி இருப்பது குறித்த ஆழ்ந்த கவலையையும் தன் உரையில் வெளியிட்டார் திருத்தந்தை.

இச்சந்திப்பிற்குப்பின் கொத்தொலெங்கோ கோவில் சென்று அங்கு குழுமியிருந்த நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைச் சந்தித்து, உரை வழங்கி, அவர்களை ஆசீர்வதித்தார். இஞ்ஞாயிறின் இறுதி நிகழ்ச்சியாக, பல்லாயிரம் இளையோரை வித்தோரியோ சதுக்கத்தில் சந்தித்தார் திருத்தந்தை. ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில், முதலில் இளையோர் பிரதிநிதிகள் மூவர், தங்கள் சந்தேகங்களை கேள்விகளாக திருத்தந்தையின் முன்வைக்க, அக்கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக தன் உரையை வழங்கினார் திருத்தந்தை. இச்சந்திப்புடன் திருத்தந்தையின் ஞாயிறுதின நிகழ்ச்சிகள் நிறைவுக்கு வந்தன.

திருத்தந்தையின் திங்கள் தின நிகழ்ச்சிகளுள் முதலாவதாக, அந்நகரிலுள்ள வால்தேசே (Valdese) எவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபைக் கோவிலுக்குச் சென்று அவர்களுடன் உரையாடியது இடம்பெற்றது. அங்கு, கிறிஸ்தவ ஒன்றிப்பு குறித்த தன் கருத்துக்களை வெளியிட்ட திருத்தந்தை, அங்கு குழுமியிருந்தவர்களுடன் இணைந்து 'வானகத்தில் உள்ள எங்கள் தந்தாய்' என்ற செபத்தையும் செபித்தார். இந்த சந்திப்பு ஏறத்தாழ ஒரு மணி நேரம் நீடித்தது. இதன் பின் தூரின் நகர் பேராயர் இல்லம் வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு அவரைக் காண வந்திருந்த அவரின் உறவினர்களுடன் இணைந்து திருப்பலி நிறைவேற்றி, அவர்களுடன் பேராயர் இல்லத்திலேயே மதிய உணவும் அருந்தினார்.

தன் இரண்டு நாள் திருப்பயணத்தை திங்கள் உள்ளூர் நேரம் மாலை 5.30 மணிக்கு நிறைவுச்செய்து, அங்கிருந்து விமானம் மூலம் உரோம் நகர் நோக்கிப் பயணம் மேற்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.