2015-06-20 18:19:00

வரலாற்றில் கடந்த ஆண்டுதான் ஆறுகோடிபேர் அகதிகளாகியுள்ளனர்


ஜுன்,20,2015. உலகில் யுத்தம், மோதல்கள் மற்றும் அடக்குமுறை காரணமாக இடம்பெயர்ந்துள்ளவர்களின் எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டில், முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு, ஆறு கோடியாய் அதிகரித்துள்ளது என ஐ.நா.வின் புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.

நாடுகளின் அரசுகள் எந்த கவலையும் இல்லாமல் நினைத்தபோதெல்லாம் போர்களைத் துவக்குவதாகவும், அனைத்துலக சமூகம் அதைத் தடுக்க இயலாமல் அல்லது முயலாமல் இருப்பதாகவும் ஐநா மன்றத்தின் அகதிகளுக்கான ஆணையர் அந்தோனியோ குடரெஸ் தெரிவித்துள்ளார்.

உலகில் தமது சொந்த வாழ்விடங்களைவிட்டு அகதிகளாக வெளியேற நேர்ந்தவர்களின் எண்ணிக்கை 2013 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு 83 லட்சம் அதிகரித்துள்ளது என அகதிகள் நலனுக்கான ஐ.நா. ஆணையம் கூறுகிறது.

சிரியாவில் தொடரும் யுத்தமும், இஸ்லாமிய அரசு அமைப்பின் எழுச்சியும், முன்பில்லாத இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என்று கருதப்படுகிறது.

2013 ஆம் ஆண்டு ஒரு நாளைக்கு 32,000 பேர் இடம்பெயர்ந்ததற்கு மாறாக, 2014 ஆம் ஆண்டு ஒரு நாளைக்கு 42,500 பேர் இடம்பெயரும் சூழல் உருவாகியிருப்பதாக ஐ.நா. அறிக்கை தெரிவித்துள்ளது. உலகில் 122 பேருக்கு ஒருவர் அகதியாக உள்ளார்.

இச்சனிக்கிழமையன்று உலக புலம்பெயர்ந்தோர் தினம் சிறப்பிக்கப்பட்டது. 

ஆதாரம் : BBC /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.