2015-06-19 13:47:00

பொதுக் காலம் 12ம் ஞாயிறு – தந்தை தினம் - ஞாயிறு சிந்தனை


புயல் வீசிக்கொண்டிருந்தது. இயேசு தூங்கிக் கொண்டிருந்தார்.

புயலில் சிக்கிய ஒரு படகில் இயேசு தூங்கிக்கொண்டிருந்த நிகழ்வு, மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுவும், ஒவ்வொரு நற்செய்தியிலும் அவரது தூக்கம் வெவ்வேறாக கூறப்பட்டுள்ளது.

இயேசு தூங்கிக் கொண்டிருந்தார் (மத். 8:24) என்று மத்தேயுவும், அவர் ஆழ்ந்து தூங்கிவிட்டார் (லூக். 8:23) என்று லூக்காவும் சொல்லும்போது, மாற்கு இன்னும் சிறிது கூடுதலாக, அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தார் (மாற். 4:38) என்று இந்தக் காட்சியைச் சித்திரிக்கிறார்.

புயலுக்கு நடுவிலும் ஒருவரால் தூங்க முடியுமா? மனசாட்சியோடு மல்யுத்தம் செய்யாமல், மன நிம்மதியோடு தூங்கச் செல்பவர்கள் நன்றாகத் தூங்கமுடியும். ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் குழந்தையைப் பார்த்திருக்கிறீர்களா? அவ்வப்போது குழந்தையின் உதட்டோரத்தில் ஒரு சின்னப் புன்னகை தோன்றும். சம்மனசுகள் வந்து குழந்தையிடம் பேசுகின்றன என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்கள். அப்படி ஒரு தூக்கம் இயேசுவுக்கு.

நாள் முழுவதும் மக்கள் பலரைக் குணமாக்கிய திருப்தி அவருக்கு. உடல் நலம் மட்டுமல்ல. உள்ள நலமும் அவர்களுக்குத் தந்த திருப்தி. தான் சொன்ன வார்த்தைகள் பலருடைய மனதையும் குணமாக்கியிருக்கும் என்று அவர் நம்பினார். நாள் முழுவதும் நல்லவற்றையே செய்து வந்த இயேசு, உடலளவில் களைத்துப் போனார். மனதளவில், மனசாட்சி அளவில் 'தெம்பாக' இருந்தார். உடல் களைப்பு, உள்ளத் தெம்பு... நல்ல தூக்கத்திற்கு இந்த இரண்டும் தேவை.

நம்மில் பலருக்கு ஒரு நாள் முடியும்போது, உடல் சோர்ந்து விடுகின்றது. மனமோ தேவையான, தேவையற்ற நினைவுகளைச் சமந்து, அலைபாய்கிறது. எனவே, உடல் தூங்க முனைந்தாலும், உள்ளம் தூங்க மறுப்பதால், போராட்டம் ஆரம்பமாகிறது. ஒரு சிலர் இந்த போராட்டத்திற்கு காணும் ஒரு தீர்வு?... தூக்க மாத்திரைகள் அல்லது மது பானங்கள். இவை நல்ல தூக்கத்திற்கு வழிகளா? சிந்திப்பது நல்லது.

எனக்குத் தெரிந்த ஒரு வழியைச் சொல்கிறேன். நாள் முழுவதும் நமது சொல், செயல் இவற்றால் மனதில் பாரங்கள் சேராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அப்படியே, நம்மையும் மீறி, வந்து சேரும் பாரங்களை முடிந்தவரை கடவுள் பாதத்திலோ அல்லது வேறு வழிகளிலோ இறக்கி வைக்க முயலவேண்டும்.

நமக்கெல்லாம் தெரிந்த ஒரு ஆங்கிலப் பழமொழி: A joy shared is doubled, a sorrow shared is halved. அதாவது, இன்பத்தைப் பகிர்ந்தால், இரட்டிப்பாகும்; துன்பத்தைப் பகிர்ந்தால் பாதியாகக் குறையும். பாரங்கள் பாதியான, அல்லது பாரங்களே இல்லாத மனதைப் படுக்கைக்குச் சுமந்து சென்றால், சீக்கிரம் தூக்கம் வரும்.

தூக்கத்தைப் பற்றி அதிகம் பேசிவிட்டோமோ? தயவுசெய்து விழித்துக்கொள்ளவும்.

புயல் வீசியது, இயேசு தூங்கிக்கொண்டிருந்தார். புயலையும் மீறி, சீடர்கள் எழுப்பிய கூப்பாடு, இயேசுவை விழித்தெழ செய்தது. இயேசு எழுந்தார், புயல் அடங்கிப் போனது. அதன் பிறகு தன் சீடர்களைப் பார்த்து, "ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?" (மாற்கு 4:40) என்று கேள்வி கேட்கிறார்.

இயேசுவின் இக்கேள்வி, புயலையும், நம்பிக்கையையும் சேர்த்துப் பார்க்க ஒரு வாய்ப்பை உருவாக்குகிறது. புயல் வீசும் நேரத்தில் நம் நம்பிக்கை எங்கே போகிறது? ஆழ் மனதில் அதுவும் தூங்கிக் கொண்டிருக்கிறதா? அல்லது, எழுந்து நின்று சப்தம் போட்டு இறைவனை அழைக்கிறதா? அல்லது புயல் வரும்போதெல்லாம் நம்பிக்கை நமக்கு ‘டாட்டா’ காட்டிவிட்டு, நடுக்கடலில் நம்மைத் தத்தளிக்க விட்டுவிடுகிறதா?

புயல் நேரத்தில் இயேசுவின் சீடர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் பழக்கமான சூழ்நிலையில்தான் இருந்தனர். தினமும் மீன் பிடித்து வந்த அதே ஏரி. தினமும் பயன்படுத்தி வந்த அதே படகு. ஏறக்குறைய எல்லாமே பழக்கமானவைதாம்.

பழக்கமான சூழ்நிலையில் திடீரேனே எதிபாராதவை நடக்கும்போது, நமக்கு அதிர்ச்சி அதிகமாகும். தெரியாத, புரியாத சூழ்நிலை என்றால் எல்லாருமே கவனமாகச் செயல்படுவோம். அந்நேரத்தில், எதிர்பாராதவை நடந்தால்... அவற்றைச் சந்திக்க நாம் தயாராக இருப்போம். ஆனால், தினம், தினம், திரும்ப, திரும்ப பார்த்து பழகிவிட்ட இடம், ஆட்கள் என்று வரும்போது நமது கவனம் தீவிரமாக இருக்காது. அந்நேரத்தில் எதிபாராத ஒன்று நடந்தால், பெரும் அதிர்ச்சியாக இருக்கும். நம் எல்லாருக்கும் இந்த அனுபவம் இருக்கும். நாம் வாழ்ந்து பழக்கப்பட்ட வீட்டில் ஏற்படும் ஒரு விபத்து, நமது நெருங்கிய நண்பர் ஒருவர் எதிர்பாராத விதமாக நடந்துகொள்ளும் முறை... இப்படி அதிர்ச்சிகளை நாம் சந்தித்திருக்கிறோம். இந்த அதிர்ச்சிகள் புயல் போன்றவை.

வீசும் புயலில் பல ஆண்டுகளாய் வேரூன்றி நின்ற மரங்கள் சாய்வதில்லையா? அது போல, நமது இடம், நமது உறவுகள், நண்பர்கள் என்று நாம் வேர் விட்டு வளர்ந்த பிறகு, வருகின்ற அதிர்ச்சி, வேரோடு நம்மைச் சாய்த்து விடுகிறது. அந்நேரங்களில், முடிந்தவரை, நமக்குத் தெரிந்த, பழக்கமான மற்ற துணைகளைத் தேடி செல்வோம். ஆனால் ஒருவேளை அந்தத் துணைகளும் மாறிவிடுமோ அந்த நண்பர்களும் நம்மை ஏமாற்றி விடுவார்களோ என்ற கலக்கம் நமக்கு இருக்கத்தானே செய்யும்.

புயல் வீசும் நேரத்தில் நமது நம்பிக்கை எங்கே இருக்கிறது?

புயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ? என்று கவிஞர் வைரமுத்து எழுதிய வரிகள் நினைவுக்கு வருகின்றன. புயல் வரும்போது சுயம்வரத்தைப் பற்றி, அல்லது மற்ற நல்ல காரியங்களைப் பற்றி நினைத்துப் பார்க்கமுடியுமா? முடியும். இந்தப் புயல் போய்விடும், அமைதி வரும் என்று நம்புகிறவர்கள், சுயம்வரம், திருமணம் என்று திட்டமிடலாம். ஆனால், புயலை மட்டும் மனதில், பூட்டிவைத்து போராடும்போது, வாழ்க்கையும் புயலோடு சேர்ந்து அடித்துச் செல்லப்படும்.

புல்லைப் பற்றிய ஓர் ஆங்கில கவிதை.. எனக்கு மிகவும் பிடித்த கவிதை... கதை என்றும் சொல்லலாம். அண்ணனும் தம்பியும் ஒரு நாள் வீதியில் நடந்து போய்கொண்டிருந்தபோது, திடீரென தம்பிக்கு ஒரு சந்தேகம். "தைரியம்னா என்னாண்ணே?" என்று அண்ணனிடம் கேட்டான். அண்ணன் தனக்குத் தெரிந்த மட்டும் விளக்கப் பார்த்தான். புலி, சிறுத்தை, யானை என்று தனக்குத் தெரிந்த மிருகங்களை வைத்து தைரியத்தை விளக்கப் பார்த்தான். தம்பிக்கு விளங்கவில்லை என்பதை அவன் முகம் காட்டியது. அவர்கள் நடந்து சென்ற பாதையில் யாரோ ஒருவர் புல்தரை ஒன்றை எரித்து விட்டிருந்தார். முற்றிலும் எரிந்து போன புல்தரையின் நடுவில் ஒரு சின்னப் புல் மட்டும் தலை நிமிர்ந்து நின்றுகொண்டிருந்தது. அண்ணன் தம்பியிடம் அந்த புல்லைக் காட்டி, "தம்பி இதுதான் தைரியம்" என்றான்.

கவிதை இதோடு முடிகிறது. தம்பிக்கு விளங்கியதா இல்லையா என்பதெல்லாம் நமது கவலை இல்லை. அந்த காட்சி நமக்கு முக்கியம். முற்றிலும் எரிந்து போன ஒரு புல்தரையின் நடுவே நின்றுகொண்டிருக்கும் புல் நமக்கு ஒரு பாடம். தன்னைச் சுற்றி எல்லாமே அழிந்தாலும், அந்த அழிவில் கலந்து மறைந்து போகாமல் தலை நிமிர்ந்து நிற்கும் புல்லை, ஆங்கிலக் கவிஞர் தைரியம் என்றார். நான் நம்பிக்கை என்கிறேன்.

புயல் வரும் வேளையில் பூவொன்று சுயம்வரத்துக்குப் புறப்படுவதும் இதுபோன்ற ஒரு நம்பிக்கை தரும் செயல்தானே.

2004ம் ஆண்டு, டிசம்பர் 26, ஆசிய நாடுகளில் சுனாமியால் ஏற்பட்ட அழிவுகள் நம்மில் பலருக்கு இன்னும் ஆறாத காயங்களாய் வலித்துக் கொண்டிருக்கும். அந்தப் பேரழிவின் நடுவிலும் எத்தனையோ விசுவாச அறிக்கைகள் வெளியாயின. கடவுள், மதம் என்ற பின்னணிகளே இல்லாமல் பார்த்தாலும் அந்நேரத்தில் நடந்த பல அற்புதங்கள் மனித சமுதாயத்தின் மேல் நமது நம்பிக்கையை வளர்க்கும் விசுவாச அறிக்கைகளாக வெளி வந்தன. அப்படி வந்த விசுவாச அறிக்கைகளில் ஒன்றை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.

சுனாமியில் தன் குழந்தைகள் மூவரையும் சேர்த்து, தன் குடும்பத்தில் பத்து பேரை இழந்த பரமேஸ்வரன், சூடாமணி தம்பதியரைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். டிசம்பர் 26, பரமேஸ்வரனின் பிறந்த நாள். நாகப்பட்டினம் கடற்கரையில் அதைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது வந்த சுனாமி, அவரது மூன்று குழந்தைகளையும் மற்ற உறவினர்களையும் கடலுக்கு இரையாக்கியது. குழந்தைகளை இழந்த பரமேஸ்வரன் - சூடாமணி தம்பதியர், நம்பிக்கை இழந்து, வெறுப்பைச் சுமந்து கொண்டு போகவில்லை. மாறாக, ஒரு சுயம்வரம் ஆரம்பித்தார்கள்... சுயம்வரம் என்பது மனதுக்குப் பிடித்தவர்களைத் தேர்ந்தேடுப்பதுதானே. அந்த சுனாமியால் பெற்றோரை இழந்து தவித்த 16 அனாதை குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர், பரமேஸ்வரன், சூடாமணி தம்பதியர்.

சுனாமி அவர்கள் குடும்பத்தை அழித்தாலும், அவர்களது மனித நேயத்தை அழித்துவிடவில்லை. குழந்தைகளின் மதம், இனம், இவற்றையெல்லாம் கடந்து, மனித நேயம் என்ற அடிப்படையில் மட்டுமே குழந்தைகளைத் தத்தேடுத்தார்கள். 3 வயது முதல் 16 வயது வரை உள்ள 16 பேரைத் தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். நம்பிக்கை இழந்து தவித்த அந்த குழந்தைகளுக்கும்,  இளையோருக்கும் நம்பிக்கை தந்தனர். அதுமட்டுமல்ல, மனித குலத்தின் மேல் நமக்குள்ள நம்பிக்கையை வளர்த்திருக்கின்றனர், பரமேஸ்வரன், சூடாமணி தம்பதியர்.

புயலுக்கு முன்னும், பின்னும் அமைதி வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். பரமேஸ்வரனுக்கும், சூடாமணிக்கும் புயலுக்கு நடுவிலிருந்து  அமைதி வந்தது. நம்பிக்கை வந்தது.

புயலுக்கு நடுவே, நமது நம்பிக்கை எங்கே போகிறது? சிந்தித்துப் பார்க்கவேண்டும். அந்தப் புயல் நடுவில் இறைவன் இருக்கிறார் என்ற ஒரு நம்பிக்கை நமக்கெல்லாம் வேண்டும். ஒருவேளை அவர் உறங்கிப் போனதுபோல் தெரிந்தாலும், அவர் அங்கே இருக்கிறார் என்பதே ஒரு பெரும் நிம்மதியைத் தரும். இறைவன் எழுந்ததும், புயல் தூங்கிவிடும். இறைவன் எழுவார். புயலை அடக்குவார்.

புயல் நேரங்களிலும் நல்லவை நடக்கும் என்ற நம்பிக்கையை நாம் வளர்த்துக்கொள்வோம். புயல் நேரங்களிலும் மனம் தளராமல், நல்லவற்றையேத் தேர்ந்தெடுக்கும் சுயம்வரத்தை நடத்துவோம்.

இறுதியாக, இரு எண்ணங்கள், வேண்டுதல்கள்... ஜூன் 20, இச்சனிக்கிழமை, புலம்பெயர்ந்தோர் உலக நாளைக் கடைபிடித்தோம். ஜூன் 21, ஞாயிறன்று, தந்தை தினத்தைக் கொண்டாடுகிறோம். மே மாதம் இரண்டாம் ஞாயிறை அன்னை தினமாகவும், ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிறை தந்தை தினமாகவும் நாம் கொண்டாடுகிறோம்.

புலம் பெயர்ந்தோர் நாளையும், அன்னைதினம், அல்லது, தந்தை தினம் இவற்றையும் இணைத்துச் சிந்திக்கும்போது, நமது அன்னையரும் தந்தையரும் நம் குடும்பங்களிலேயே புலம்பெயர்ந்தோராய் மாறிவரும் துயரத்தையும் சிந்திக்கவேண்டும். புலம்பெயர்ந்தோர் தங்கள் நாட்டைவிட்டு, அல்லது, உள்நாட்டுக்குள்ளேயே ஆதரவு ஏதுமின்றி அலைகழிக்கப்படுகின்றனர். அன்னையரும், தந்தையரும் வீட்டுக்குள்ளேயே உறவுகள் அறுக்கப்பட்டு, அல்லது, வீட்டைவிட்டு முதியோர் இல்லங்களுக்கு அனுப்பப்பட்டு அகதிகளாய் வாழ்கின்றனர்.

1907ம் ஆண்டு அமெரிக்காவின் மேற்கு வெர்ஜீனியாவில் Monongah என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 362 தொழிலாளிகள் இறந்தனர். இதனால், பல நூறு குடும்பங்கள் தந்தையை இழந்து தவித்தன. இந்த நாளை நினைவுகூரும் விதமாக, 1908ம் ஆண்டு முதல் தந்தை தினம் அறிவிக்கப்பட்டது.

கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, தாய்க்கு ஒரு தினம், தந்தைக்கு ஒரு தினம் என்று நாம் கொண்டாடி வருகிறோம். இந்தக் கொண்டாட்டங்கள் வருடத்தின் இரு நாள்களோடு முடிந்துவிடுவது நியாயமா? அன்னை தினம், தந்தை தினம் இரண்டும், மலர்களாலும், வாழ்த்து அட்டைகளாலும் நிறைந்து போன வியாபாரத் திருநாள்களாக மாறிவிட்டன. வயது முதிர்ந்த காலத்தில், தாயையும், தந்தையையும் முதியோர் இல்லங்களில் சேர்த்துவிட்டு, இந்த நாளில் மட்டும் அவர்களைச் சென்று பார்த்து மலர்களையும், மற்ற பரிசுகளையும் தருவதால் நமது கடமைகள் முடிந்துவிடுகின்றனவா?

ஆண்டின் இரு நாள்களில் மட்டுமல்ல. ஆண்டின் ஒவ்வொரு நாளும் அவர்கள் நினைவுகூரப்பட வேண்டியவர்கள். அவர்கள் இவ்வுலகில் வாழும் எஞ்சிய நாட்கள் அனைத்தும், அவர்கள் நினைவுகூரப்பட வேண்டியவர்கள். போற்றிக் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

உலகில் வீசும் வன்முறைப் புயல்களால் புலம்பெயர்ந்துள்ள குடும்பங்களை, அதிலும் குறிப்பாக, தாய், தந்தை என்ற ஆணிவேர்கள் அகற்றப்பட்டு, காய்ந்த சருகுகள் போல புயலில் சிக்கித் தவிக்கும் பல்லாயிரம் குழந்தைகளுக்காக இன்று இறைவனிடம் உருக்கமான வேண்டுதல்களை எழுப்புவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.