2015-06-19 16:49:00

திறமைகளை அறியவும், வாழ்வை அன்புகூரவும், போட்டிகள் உதவட்டும்


ஜூன்,19,2015. விளையாட்டுக்கள் வழியே பொருளாதார வெற்றி, எவ்விலை கொடுத்தும் வெற்றிபெறல் மற்றும் தனிமனிதப் புகழுக்காக உழைத்தல் போன்ற தவறான கலாச்சாரம், விளையாட்டு வீரர்களிடமிருந்து வெளியேற வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்தார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் Los Angeles நகரில் நடைபெறவிருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான உலக விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளச் செல்லும் இத்தாலியக் குழுவை, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கலாச்சார மற்றும் சமூக மாண்பை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற, விளையாட்டுப் போட்டிகள் உதவுகின்றன என்று கூறினார்.

இப்போட்டிகளில் பங்குபெறும் மாற்றுத் திறனாளிகள் அனைவரும் ஒருவர் மற்றவரின் திறமைகளைக் கண்டுகொள்ளவும், வாழ்வை அன்புகூரவும் உதவவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் வீரர்கள் முன்வைத்தார், திருத்தந்தை.

மனிதகுல மதிப்பீடுகளின் அனுபவங்களைத் தரவல்ல வகையில் நோக்கப்படும் விளையாட்டுப் போட்டிகளில், நேர்மையும், ஒருமைப்பாட்டுணர்வும் எப்போதும் காக்கப்படவேண்டும் என்ற அழைப்பும் திருத்தந்தையால் முன்வைக்கப்பட்டது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.