2015-06-19 17:07:00

திருத்தந்தை:மறைசாட்சிகளின் இரத்தமே கிறிஸ்தவ ஒன்றிப்பின் விதை


ஜூன்,19,2015. மறைசாட்சிகளின் இரத்தமே கிறிஸ்தவ சபைகளிடையே உருவாகும் ஒன்றிப்பிற்கு விதையாகவும், இறையரசைக் கட்டியெழுப்பும் கருவியாகவும் செயல்படுகிறது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் நகருக்கு வருகை தந்துள்ள அந்தியோக்கியாவின் சிரிய ஆர்த்தடாக்ஸ் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை இரண்டாம் Mor Ignatius Aphrem அவர்களை, திருப்பீடத்தில் இவ்வெள்ளி காலை சந்தித்து உரையாடியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மத்தியக் கிழக்குப் பகுதியில் அப்பாவி கிறிஸ்தவர்களும், சிறுபான்மையினரும் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருவதை நிறுத்தமுடியாமல் உலகத் தலைவர்கள் இருப்பது குறித்து தன் கவலையை வெளியிட்டார்.

மத்தியக் கிழக்குப் பகுதியில், இரு கிறிஸ்தவ மதத் தலைவர்கள் Mor Gregorios Ibrahim அவர்களும், Paul Yazigi அவர்களும் கடந்த ஈராண்டுகளாகக் கடத்தி வைக்கப்பட்டிருப்பது குறித்தும் ஆழ்ந்த கவலையை வெளியிட்டத் திருத்தந்தை, எண்ணற்ற அருள் பணியாளர்களும், துறவியரும் தங்கள் சுதந்திரத்தை இழந்துள்ளனர் என்பதைக் குறிப்பிட்டு, ஒப்புரவு மற்றும் அமைதிக்காக செபிக்கும்படி அழைப்பு விடுத்தார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பை நோக்கியப் பயணத்தில் முதுபெரும் தந்தை, மூன்றாம் Mor Ignatius Jacob அவர்களுக்கும், திருத்தந்தை 6ம் பவுல் அவர்களுக்கும் இடையே உரோம் நகரில் 1971ம் ஆண்டு இடம்பெற்ற சந்திப்பு குறித்தும், பின்னர், முதுபெரும் தந்தை, Mor Ignatius Zakka Iwas அவர்களுக்கும், திருத்தந்தை 2ம் யோவான் பவுல் அவர்களுக்கும் இடையே உரோம் நகரிலும், தமஸ்கு நகரிலும் இடம்பெற்ற சந்திப்புக்கள் குறித்தும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துரைத்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.