2015-06-18 16:32:00

திருத்தந்தையின் திருமடல் "இறைவா, உமக்கே புகழ்" வெளியீடு


ஜுன்,18,2015. 'எவ்வகையான உலகை அடுத்தத் தலைமுறையினருக்கு விட்டுச் செல்லப்போகிறோம்' என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் திருமடலில் எழுப்பியுள்ள கேள்வி, நமது சுற்றுச்சூழலை மட்டும் மனதில் வைத்து எழுப்பப்பட்டக் கேள்வியல்ல என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

"இறைவா, உமக்கே புகழ்: நமது பொதுவான இல்லத்தைப் பேணுதல்" என்ற தலைப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள திருமடல், இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் வெளியிடப்பட்ட நிகழ்வில் துவக்க உரையாற்றிய திருப்பீட நீதி, அமைதி அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் இவ்வாறு கூறினார்.

இவ்வுலகைக் காப்பது என்ற முக்கியமான பணியில், அனைவரும் கூடிவந்து, திறந்த மனதுடன் உரையாடல்களை மேற்கொள்ளவேண்டும் என்பது, இத்திருமடலில் திருத்தந்தை வலியுறுத்தும் ஒரு முக்கியக் கருத்து என்பதை, கர்தினால் டர்க்சன் அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்கள், இயற்கையை மையப்படுத்தி இயற்றிய புகழ்பாடலிலிருந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திருமடலின் தலைப்பைத் தெரிவு செய்திருப்பது, இம்மடல் முழுவதும் இழையோடியிருக்கும் ஒரு முக்கியக் கருத்தை வெளிப்படுத்துகிறது என்று கூறிய கர்தினால் டர்க்சன் அவர்கள், செபம் நிறைந்த ஆழ்நிலை தியான மனநிலையுடன் இயற்கையைக் காண்பதே திருத்தந்தை நமக்கு வழங்கும் முக்கிய கருத்து என்றார்.

திருத்தந்தையின் மடலில் காணப்படும் கருத்துக்களையும், இத்திருமடலின் அமைப்பையும், கர்தினால் டர்க்சன் அவர்கள், தன் துவக்க உரையில் சுருக்கமாக விளக்கினார்.

கர்தினால் டர்க்சன் அவர்களின் உரையை அடுத்து, கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தந்தையின் சார்பில் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட Pergamo பெருநகர் அவையின் தலைவர், மேன்மைமிகு John Zizioulas அவர்கள், திருத்தந்தையின் திருமடலில் காணப்படும் இறையியல், ஆன்மீகம் இவை குறித்து உரையாற்றினார்.

கத்தோலிக்கத் துயர் துடைப்புப் பணிகள் அமைப்பின் தலைவர், Carolyn Woo அவர்கள், பொருளாதாரம், நிதிநிலை, வர்த்தகம் ஆகிய துறைகள் வழியே சுற்றுச்சூழல் சந்திக்கும் சவால்கள் குறித்து, திருமடல் வழங்கும் ஆலோசனைகளை தன் உரையில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.