2015-06-18 16:45:00

திருத்தந்தை - மன்னித்து, அமைதி கொண்டால் செபிக்க முடியும்


ஜுன்,18,2015. நம் சகோதர, சகோதரிகளை மன்னித்து, மனதில் அமைதி கொண்டிருந்தால் மட்டுமே, நம்மால் செபிக்க முடியும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை திருப்பலியில் கூறினார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இவ்வியாழன் காலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றியத் திருப்பலியில், பலமற்ற நிலை, செபம், மன்னிப்பு என்ற கருத்துக்களை மையப்படுத்தி, தன் மறையுரையை வழங்கினார்.

கிறிஸ்தவ வாழ்வில் நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடிக்கும் இறைவனின் துணை இல்லையெனில், கீழே விழும் அளவுக்கு நாம் பலமற்றவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, நமக்குத் தொடர்ந்து தேவைப்படுவது செபம் என்பதை எடுத்துரைத்தார்.

நாம் செபிப்பதற்கு முன்னரே நமது தேவைகளை, தந்தை அறிந்துள்ளார். எனினும், நமது தேவைகளை, அவரிடம் எளியமுறையில், ஒரு சில வார்த்தைகளில் சொல்வது நமது செபமாக வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செபத்தின் தேவையைக் கூறினார்.

மன்னிப்பின் வழியாக, நம் உள்ளங்களை நிறைக்கும் அமைதியிலிருந்து மட்டுமே நம்மால், 'அப்பா' என்று ஆண்டவனை அழைக்க முடியும் என்பதை தன் மூன்றாவது எண்ணமாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் பகிர்ந்துகொண்டார்.

எனவே, நம் பலமற்ற நிலையில், செபங்களை எழுப்பும் வேளையில், மன்னிப்பு என்ற வலுவான கோட்டையும் நம்மைச் சுற்றி எழுப்பப்படவேண்டும் என்று தன் மறையுரையில் குறிப்பிட்டார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.