2015-06-18 16:51:00

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க லண்டன் பேரணி


ஜுன்,18,2015. இறைவன் படைத்த இவ்வுலகை, நாம் சரிவரக் காப்பாற்றவில்லை என்ற கவலை, கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல, மத நம்பிக்கையுள்ள அனைவருக்கும் கவலையாக உள்ளது என்று இங்கிலாந்து ஆயர் ஒருவர் கூறினார்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் உலக உச்சி மாநாட்டில் போராடவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்த 'காலநிலை கூட்டணி' என்ற அமைப்பினர், ஜூன் 17, இப்புதனன்று, லண்டன் மாநகரில் ஏற்பாடு செய்திருந்த ஒரு பேரணியில் 10,000த்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டு பிரித்தானிய பாராளு மன்றத்திற்கு முன் கூடிவந்தனர்.

இந்தப் பேரணியில் பங்கேற்ற ஆங்கலிக்கன் ஆயர் Nicholas Holtam அவர்கள், இவ்வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள திருமடல், இயற்கைமீது பற்றுகொண்டுள்ள அனைவரையும் ஈர்த்துள்ளது என்று கூறினார்.

இந்தப் பேரணியில் கலந்துகொள்ள வந்திருந்தோரின் எண்ணிக்கை பெருமளவு இருந்ததால், பேரணியின் துவக்கத்தில் இடம்பெற்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு செபவழிபாடு இரு இடங்களில் நடத்தப்பட்டன என்றும், இவ்விரு இடங்களிலும் தன் செய்தியை பகிர்ந்துகொண்ட ஆயர் Nicholas Holtam அவர்கள், இரண்டாவது இடத்தை அடைய ரிக்சாவில் பயணித்தார் என்றும் ICN செய்திக் குறிப்பு கூறுகிறது.

இயற்கை ஆர்வலர்கள், தேனீ வளர்ப்பவர்கள், ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள், மருத்துவர்கள், விவசாயிகள், அருள் பணியாளர்கள், என்று பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.

இந்தப் பேரணியில் கலந்துகொள்ள இயலாத இன்னும் பலநூறு பேர், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் உலக உச்சி மாநாட்டில் போராடவேண்டும் என்ற கருத்தைத் தாங்கிய மின்னஞ்சல்களை அனுப்பினர் என்றும் ICN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.