2015-06-17 15:24:00

புதன் மறைக்கல்வி உரை – குடும்பங்களில் மரணங்களின் தாக்கம்


ஜூன்,17,2015. குடும்பம் குறித்த தன் மறைக்கல்வி படிப்பினைகளை கடந்த 18 வாரங்களாக தொடர்ந்து வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரமும் உரோம் நகர் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஏறத்தாழ 25 ஆயிரம் விசுவாசிகளுக்கு, குடும்பம் என்ற தலைப்பின் கீழ், குடும்ப உறுப்பினர்களின் மரணத்தால், குடும்பங்கள் அனுபவிக்கும் துயரங்கள் குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

குடும்ப அங்கத்தினர்களின் மரணத்தால் வரும் துன்பம் என்பது, எவ்வித விலக்குமின்றி அனைவருக்கும் பொதுவானது. அனைவரும் இதனை எவ்வித வித்தியாசமுமின்றி எதிர்நோக்க வேண்டியுள்ளது. இத்தகைய துன்பங்களில் உழல்பவர்மீது இயேசு எப்போதும் கருணையுடையவராக இருக்கிறார். இன்று நாம் வாசிக்கக்கேட்ட, ‘நயீன் ஊர் கைம்பெண்ணின் மகன் உயிர் பெறுதல்' குறித்த நிகழ்வும், இயேசுவின் கருணை உள்ளத்தைக் குறித்தே நமக்கு எடுத்துரைக்கிறது. குடும்பத்தினர் ஒருவரை இழப்பது என்பது குடும்பத்திற்கு பெரும் வேதனை தரும் ஒன்றாகும். அதிலும் குறிப்பாக, தங்கள் குழந்தையை இழக்கும் பெற்றோருக்கு. இயேசு அன்று, நயீன் கைம்பெண்ணின் அருகில் நின்ற காட்சியானது, அவர் நம்முடன், நம் இருள் சூழ்ந்த வேளைகளிலும், நம் இழப்பின்போதும், துயர்களின்போதும் அருகே இருக்கிறார் என்பதைக் காட்டி நிற்கிறது. ‘சாவே உன் கொடுக்கு எங்கே’ என கொரிந்தியருக்கு எழுதிய மடலில் கேட்கிறார், தூய பவுல் அடிகள். இந்த சாவின் உள் அர்த்தத்தை உணர்ந்து புரிந்து கொள்ளவும், சாவு நம் வாழ்வை தீர்மானிப்பதில்லை என்பதில் முழு நம்பிக்கை கொள்ளவும் நமக்குத் தேவையான ஒன்று உள்ளது. ஆம். இயேசுவின் மீதான விசுவாசம் வழியாகவும், அவரின் உயிர்ப்பிலும் அவர் இருப்பிலும் கொள்ளும் விசுவாசம் வழியாகவும், நம் இழப்புக்களை நாம் துணிச்சலுடன் எதிர்கொள்ளமுடியும். தங்கள் உறவினர்களை இழந்த குடும்பங்களுக்கு அருகே நாமும், கனிவும் இரக்கமும் நிறைந்த கிறிஸ்துவைப்போல் ஆறுதலாக இருப்போமாக. அனைத்திற்கும் மேலாக, இயேசு தன் சிலுவை மற்றும் உயிர்ப்பு வழியாக வெளிப்படுத்திய அன்பின் சாட்சிகளாக நாம் எப்போதும் இருப்போமாக. இயேசு வெளிப்படுத்திய அன்பு, மரணத்தைவிட பலம் பொருந்தியது. நம்மால் அன்புகூரப்பட்டவர்களின் மரணம் தரும் துயரத்தை எதிர்கொள்வதற்கு ஆழமாகத் தேவைப்படும் சரியான பதிலுரையாக விளங்கும் நம் விசுவாசத்திற்காக இறைவனுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.

இவ்வாறு, தன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை, இவ்வியாழனன்று தான் வெளியிடவிருக்கும் சுற்றுமடல் குறித்தும் எடுத்துரைத்தார். இயற்கையைப் பாதுகாத்தல் குறித்த இந்த சுற்றுமடல், நம் பொது வீடாகிய இவ்வுலகில் இயற்கை அழிந்து வருவதைக் குறித்து, குறிப்பாக ஏழைகள் இதனால் பாதிப்படைந்து வருவது குறித்து  உலக தலைவர்களுக்கு, அதாவது பொறுப்பிலுள்ளோருக்கு அழைப்பு விடுக்கிறது. ‘உழுது பயிரிடுங்கள்’ என இறைவனால் மனித குலத்திடம் ஒப்படைக்கப்பட்ட இவ்வுலகு குறித்த இச்சுற்றுமடலை, திறந்த மனதுடன் வாசிக்குமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தன் புதன் மறைப்போதக உரையின் இறுதியில், வரும் சனிக்கிழமையன்று உலகில் சிறப்பிக்கப்பட உள்ள உலக அகதிகள் தினம் குறித்தும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். தங்கள் நாட்டைவிட்டு தூரமாக அடைக்கலம் தேடும் இம்மக்களின் மாண்பு, எப்போதும் மதிக்கப்படும்படியாக நம் உதவிகளை இவர்களுக்கு ஆற்றுவோம் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்த திருத்தந்தை, அவர்களிடையே பணியாற்றிவரும் அனைவருக்கும் தன் ஊக்கத்தை அளிப்பதாகவும் தெரிவித்தார்.  மறைப்போதக உரையின் இறுதியில், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.