2015-06-17 16:48:00

இந்தியப்பெருங்கடலின் வெப்பத்தால் பருவமழை குறைவு: ஆய்வு தகவல்


ஜூன்,17,2015. இந்தியப்பெருங்கடலில் வெப்பம் அதிகரிப்பதே தென்மேற்கு பருவ மழை குறைய காரணம் என இந்திய வானிலை அறிஞர்கள் மேற்கொண்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

புனேவில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ராக்ஸி மேத்யூ கால் என்பவர் தலைமையில் பன்னாட்டு ஆய்வாளர்கள் அடங்கிய குழு, இந்த ஆய்வை மேற்கொண்டது.

1901-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டுவரை கோடை பருவமழையின் போக்கு தென் ஆசியாவின் பல பகுதிகளில் எவ்விதம் அமைந்திருந்ததென ஆராயப்பட்டது.

இந்தியாவின் வடக்கு, மத்தியகிழக்கு மற்றும் கங்கை, பிரம்மபுத்ரா வடிநிலப் பகுதி, இமாலய அடிவாரங்களில் மழை பொழிவது பெரிய அளவில் குறைந்துள்ளது என்றும்,

இந்தியாவில் கடந்த 100 ஆண்டுகளில் 10 முதல் 20 விழுக்காடு அளவுக்கு மழை குறைந்துள்ளது என்றும், ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியப் பெருங்கடல் வெப்பம் அடைந்துள்ளதே மழை வெகுவாக குறைய காரணம் என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு. இந்தியப்பெருங்கடல் பகுதியில் வெப்பம் அதிகரித்து, இந்திய துணைக்கண்டப்பகுதியில் வெப்பம் குறைந்துள்ளது. இதனால், நிலம்-கடல் பரப்பின் வெப்ப வேறுபாடு பலவீனமடைந்து, மழைப்பொழிவு குறைந்து விட்டது.

கோடையில் நிலம்-கடல் பரப்பின் வெப்ப நிலை வேறுபாடு பருவமழையின் முக்கியக் காரணிகளுள் ஒன்றாக விளங்குகிறது.

ஆதாரம் : The Hindu /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.