2015-06-17 15:41:00

அமைதி ஆர்வலர்கள் : 1986ல் நொபெல் அமைதி விருது(Elie Wiesel )


ஜூன்,17,2015. 1986ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பெற்றவர் Elie Wiesel.  தற்போதைய உருமேனிய நாட்டில் அமைந்துள்ள Sighetu Marmației என்ற ஊரில் 1928ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி பிறந்த Eliezer என்ற "Elie" Wiesel அவர்கள், ஒரு யூத மத எழுத்தாளர், பேராசிரியர் மற்றும் அரசியல் ஆர்வலர். இரண்டாம் உலகப்போரின்போது இவர் தனது குடும்பத்தோடும், இவர் வாழ்ந்த பகுதியில் வாழ்ந்த பிற யூதர்களோடும் ஜெர்மனியின் வதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டார். அங்கு இவரது பெற்றோரும், இளைய சகோதரியும் இறந்தனர். வீசல் அவர்களும், அவரின் இரு மூத்த சகோதரிகளும் உயிர் தப்பினர். 1945ம் ஆண்டில் நேச நாடுகளின் படைகள் முன்னேறியதைத் தொடர்ந்து Buchenwald வதைமுகாம் விடுதலை செய்யப்பட்டது. இவரும், இவரது இரு சகோதரிகளும் பாரிஸ் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டு கருணை இல்லத்தில் வைத்து பராமரிக்கப்பட்டனர். பாரிசில் சொர்போனில் படித்த பின்னர் பத்திரிகையாளராக வேலை செய்தார். Buna ஆஷ்விஷ் நாத்சி வதைமுகாமிலும், Buchenwald வதைமுகாமிலும் கைதியாக இவர் இருந்தபோது கிடைத்த அனுபவங்களை வைத்து இரவு என்ற தனது முதல் புத்தகத்தை 1958ல் வெளியிட்டார். அதன்பின்னர் இவர் 57 நூல்கள் எழுதியுள்ளார். இவரின் சில புத்தகங்களுக்கு அடிப்படைக் கருப்பொருளாக, நாத்சி வதைமுகாம் அனுபவங்களே இருந்துள்ளன. Algemeiner Journal என்ற நாளிதழின் ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் வீசல் அவர்கள் இருந்துள்ளார்.

ஏலி வீசல் அவர்களுக்கு 1986ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டபோது அவ்விருதை வழங்கும் நார்வே நாட்டுக் குழு இவரை, “மனித சமுதாயத்தின் தூதர்” என அழைத்து பெருமைப்படுத்தியது. முழுவதும் மனிதமற்று கேவலப்படுத்தப்பட்டபோதும், ஹிட்லரின் மரண முகாம்களில் மனித சமுதாயத்தின்மீது காட்டப்பட்ட வெறுப்பு போன்ற சமயங்களில் அனுபவித்த துன்பங்ளும், அமைதிக்காக இவர் எடுத்த தெளிவான நடவடிக்கைகளையும் நார்வே குழு குறிப்பிட்டது. ஏலி வீசல் அவர்கள், அமைதி, மனித மாண்பு மற்றும் பிராயச்சித்தம் ஆகியவற்றுக்கு சக்தி வாய்ந்த செய்தியை அளித்துள்ளார் எனவும் பாராட்டியது. இவரது தந்தை Shlomo Wiesel ஒரு கிராம விவசாயி. இவர், போலந்து யூதர்களுக்கு உதவினார் என்பதற்காக சில மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து இவர் தப்பிய பின்னர் இக்குடும்பத்தினர் பசிக் கொடுமையை அனுபவித்துள்ளனர். ஏலி வீசல் அவர்களின் குடும்பத்தினர் பெரும்பாலான நேரங்களில் Yiddish மொழியையே பேசினாலும், ஜெர்மானியம், ஹங்கேரியம், உருமேனியம் ஆகிய மொழிகளையும் பேசியுள்ளனர். இவரின் தந்தை இவரில் மனிதாபிமானப் பண்பை ஆழமாக உணர்த்தியுள்ளார். எபிரேய மொழியைக் கற்கவும், எபிரேய இலக்கியங்களை வாசிக்கவும் ஊக்கப்படுத்திய அதேநேரம், இவரது தாய் சாரா, விவிலியத்தின் ஐந்நூல்களாகிய தோராவைப் படிக்க உற்சாகப்படுத்தினார். எனவே வீசல் சொல்வார் எனது தந்தை அறிவையும், எனது தாய் விசுவாசத்தையும் வழங்கினார்கள் என்று.

1940ம் ஆண்டில் உருமேனிய நாடு Sighet நகரை ஹங்கேரி நாட்டிடம் இழந்தது. இதனால், 1944ல் ஹங்கேரி அதிகாரிகள் Sighet நகரிலுள்ள யூதர்களை Auschwitz-Birkenau முகாமுக்கு எடுத்துச் செல்ல ஜெர்மன் இராணுவத்தை அனுமதித்தனர். எனவே வீசல் அவர்களின் குடும்பமும் இம்முகாமுக்குச் சென்றது. ஏலி வீசல், தனது தாய் மற்றும் மூன்று சகோதரிகளிடமிருந்து பிரிக்கப்பட்டு தந்தையோடு Buna வதைமுகாமுக்கு அனுப்பப்பட்டார். எட்டு மாதங்களுக்கு மேல் தனது தந்தையுடன் அங்கு தங்கியிருந்தார். போர் முடியும் கட்டத்தில் மூன்று வதை முகாம்களில் மாறி மாறி இவர்கள் அனுப்பப்பட்டு மிகவும் கடினமான மற்றும் ஆபத்தான வேலைகள் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர். 1945ம் ஆண்டு சனவரி 29ம் தேதி, தந்தையும் மகனும் புச்சன்வால்டு முகாமுக்கு வந்த பின்னர், வீசல் அவர்களின் தந்தை கடுமையாய் காவலர்களால் அடிக்கப்பட்டார். இவரது உணவைப் பறிப்பதற்காக சக கைதிகளாலும் அடிக்கப்பட்டார். இதில் வீசல் அவர்களின் தந்தை இறந்தார். இதற்கு ஒரு வாரம் கழித்து இம்முகாமை அமெரிக்கப் படைகள் விடுதலை செய்தன. முகாமில் வீசல் அவர்களின் கைதி எண் "A-7713"

2ம் உலகப் போருக்குப் பின்னர் ஏலி வீசல் அவர்கள், எபிரேயம் கற்றுக் கொடுத்து இசை ஆசிரியராக வேலை செய்தார். பின்னர் பத்திரிகைத் துறையில் சேர்ந்தார். போர் முடிந்து பத்து ஆண்டுகளுக்கு இவர் தனது யூத இனப் படுகொலை அனுபவம் பற்றிப் பேசவே இல்லை. எனினும், 1952ல் இலக்கியத்தில் நொபெல் விருது பெற்ற ப்ரெஞ்ச் எழுத்தாளர் François Mauriac இவருக்கு நெருங்கிய நண்பரானார். அந்த நண்பர் கொடுத்த அழுத்தத்தில், உலகம் என்ற ஒரு நூலை Yiddish மொழியில் எழுதினார். இது அர்ஜென்டீனாவின் புவனோஸ் ஐரெசில் வெளியிடப்பட்டது. இதனைச் சுருக்கி ப்ரெஞ்ச் மொழியில் 127 பக்கங்களில் இரவு என்ற தலைப்பில் எழுதினார். ஆனால் இதனை வெளியிடுவதற்குப் பதிப்பகத்தார் கிடைப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டார். பின்னர், 1960ல், நூறு டாலர் முன்பணத்திற்கு Arthur Wang of Hill & Wang நிறுவனம் அமெரிக்க ஐக்கிய நாட்டில் இதனை வெளியிட்டது. 18 மாதங்களில் 1046 பிரதிகள் விற்றன. இந்நூல் முப்பது மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 1997ம் ஆண்டுக்குள் இது ஆண்டுதோறும் அமெரிக்காவில் மட்டும் மூன்று இலட்சம் பிரதிகள் விற்றது.

1955ல் அமெரிக்க ஐக்கிய நாடு சென்று அந்நாட்டுக் குடிமகனானார் ஏலி வீசல். வன்முறை, அடக்குமுறை, இனவெறி ஆகியவற்றுக்கு எதிராக இவர் குரல் கொடுத்ததற்காக 1986ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது இவருக்கு வழங்கப்பட்டது. அதோடு அமெரிக்க அரசுத்தலைவர் சுதந்திரப் பதக்கம் உட்பட பல விருதுகளும் வீசல் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளாத அனுபவம், அதனைப் புறக்கணித்தற்குச் சமம். ஒருமுறை வாழ்வை உலகுக்குக் கொண்டு வந்த பின்னர், உலகை மாற்றுவதன் மூலம் அதனைப் பாதுகாக்க வேண்டும் என்று சொன்னவர் ஏலி வீசல்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.