2015-06-16 14:51:00

விவிலியத் தேடல் : மணமகளின் தோழியர் உவமை – பகுதி - 4


சாதாரணப் பொருள்களைத் தங்கமாய் மாற்றும் சக்திபெற்ற ஒரு முனிவர், காட்டில் வாழ்கிறார் என்ற செய்தி, ஊரெங்கும் பரவியது. இதைக் கேட்ட இருவர், அம்முனிவரைத் தேடி காட்டுக்குச் சென்றனர். அவரைக் கண்டதும், அவர் பாதத்தில் விழுந்து வணங்கினர். தன்னைத் தேடிவந்ததன் காரணத்தை முனிவர் கேட்டபோது, இருவரும் மிகப் பணிவுடன், "குருவே, உங்களைப் போல உலகைத் துறந்து, உள்ளொளி பெறவே உங்களைத் தேடி வந்துள்ளோம்" என்று பொய் சொன்னார்கள். அவர்களை தன் சீடர்களாக ஏற்றுக்கொண்ட முனிவர், அடுத்தநாள், ஒரு மண்கலம் நிறைய தானியங்களையும், ஒரு குச்சியையும் அவர்களிடம் கொடுத்து, சூரிய ஒளியில், தானியங்களைக் காயவைத்து வருமாறு பணித்தார்.

முனிவர் தந்த பணியை அறவே வெறுத்த இருவரும், பொய்யானப் பணிவோடு, கலத்தையும், குச்சியையும் எடுத்துச் சென்றனர். கலத்தில் இருந்த தானியங்களை, சூரிய ஒளியில் வைத்து, குச்சியால் அதைக் கிளறிய வண்ணம் அமர்ந்திருந்தனர். அப்போது, சிறிது, சிறிதாக, அந்த மண்கலமும், அதிலிருந்த தானியங்களும் தங்கமாக மாறத் துவங்கின. அந்த ஆனந்த அதிர்ச்சியில் தங்களையே மறந்த இருவரும், தங்கள் கையில் வைத்திருந்த குச்சியைத் தூர எறிந்துவிட்டு, தங்கமாய் மாறியிருந்த கலத்தையும், தானியங்களையும் எடுத்துகொண்டு, காட்டை விட்டு ஓடி மறைந்தனர். தொட்ட பொருள்கள் அனைத்தையும் தங்கமாய் மாற்றும் சக்தி, அவர்கள் கையிலிருந்த குச்சியில்தான் இருந்ததென்பதை அவர்கள் உணரவில்லை.

நம்மில் பலர், வாழ்வில் நல்லவை பலவற்றை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல், எவ்விதம் தவறவிடுகிறோம் என்பதைக் கூறும் ஓர் உவமை இது. குறிப்பாக, எதிர்பாராத மகிழ்வு நம்மை அடையும்போது, அந்த மகிழ்வின் ஊற்று எது என்பதையும், அந்த மகிழ்வை நிலைக்கச் செய்யும் வழிகள் எவை என்பதையும் மறந்து, கணப்பொழுது மகிழ்வில் கரைந்து போகும் ஆபத்து உண்டு.

கடந்த சில வாரங்களாக நாம் சிந்தித்துவரும் 'மணமகளின் தோழியர் உவமை'யில் இத்தகைய ஒரு நிலை உருவானது. மணமகனை அழைத்துவர தங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததும், பத்துத் தோழியரில், முன்மதியுடைய ஐவர், அந்த மகிழ்வை நிலைக்கச் செய்யும் வழிகளைச் சிந்தித்தனர். அறிவிலிகளான ஏனைய ஐந்துபேர், அந்த அழைப்பு தந்த ஆனந்த அதிர்ச்சியில், தங்களையே மறந்து, புறப்பட்டனர்.

அறிவிலிகள் ஐவரின் எண்ணமெல்லாம், தங்களுக்குக் கிடைத்த இந்த அரிய வாய்ப்பை, ஊரறியப் பறைசாற்றவேண்டும் என்பதிலேயே அதிகம் இருந்தது. அதற்கேற்றாற்போல், ஊர்மக்கள் வியக்கும்வண்ணம் தங்களையே அலங்காரம் செய்துகொண்டனர். மணமகன் அழைப்பு என்ற நிகழ்வுக்கு தாங்கள் அழைப்பு பெற்றவர்கள் என்பதைக் காட்ட, அவர்களிடம் இருந்த அழைப்பிதழ், அவர்கள் ஏந்திச் சென்ற விளக்குகள். அவற்றையும் கழுவித் துடைத்து, கவனமாய் எடுத்துச் சென்றனர்.

கண்கவர் அலங்காரம், கையில் ஏந்திச் சென்ற விளக்குகள் என்ற இரு வழிகளில் தங்களையே விளம்பரம் செய்துகொண்ட இந்த ஐந்து தோழியரும், தாங்கள் ஏந்திச்செல்லும் விளக்குகள், தொடர்ந்து எரிந்தால் மட்டுமே தங்கள் மகிழ்வு நிலைக்கும் என்ற அடிப்படை உண்மையை மறந்துவிட்டனர். விளக்குகள் தொடர்ந்து எரிவதற்குத் தேவையான எண்ணெயை அவர்கள் தங்களோடு எடுத்துச் செல்லவில்லை (மத். 25:3) என்பதை உவமையின் முதல் பகுதி தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது.

அது மட்டுமல்ல... அந்த ஐந்து தோழியரும் தங்கள் தவறைச் சரிசெய்வதற்கு, அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு தரப்பட்டது என்பதையும் உவமையின் முதல் பகுதி கூறுகிறது. மணமகன் வருவதற்கு ஏற்பட்ட காலதாமதம்தான், அப்பெண்களுக்கு வழங்கப்பட்ட மற்றொரு வாய்ப்பு. அந்நேரத்திலாவது அவர்கள் தங்கள் தவறைச் சரிசெய்திருக்கலாம். ஆனால், அவர்கள் எண்ணமெல்லாம், தங்களை இன்னும் கூடுதலாக அழகுபடுத்துவதிலேயே குறியாய் இருந்ததால், தாங்கள் அழைக்கப்பட்ட நிகழ்வின் மையத் தேவையான எண்ணெய் மீது அவர்கள் கவனம் திரும்பவேயில்லை.

மணமகன் வரும் நேரம் கூடிக்கொண்டே போனபோது, மணமகனுக்கு என்ன ஆயிற்றோ, அவர் எப்போது வருவாரோ என்று, முன்மதியுடைய தோழியரின் எண்ணங்கள், மணமகனைச் சுற்றியே வலம்வந்தன. ஆனால், அறிவிலிகளின் எண்ணங்கள் வேறுபட்டிருந்தன. நேரம் அதிகமாக, அதிகமாக, தங்கள் ஒப்பனைகள் வீணாகப் போகின்றதே என்ற கவலையே அறிவிலிகளின் எண்ணங்களை நிறைத்தன. எவ்வளவு நேரம்தான் ஒருவர் தன்னைப் பற்றியே சிந்திக்கமுடியும்? எனவே, அவர்கள் களைப்பில் உறங்கிவிட்டனர். தொடர்ந்து அங்கு நிகழ்ந்ததை, நற்செய்தியாளர் மத்தேயு, இவ்வுவமையின் இரண்டாம் பகுதியில் இவ்வாறு விவரிக்கின்றார்:

மத்தேயு நற்செய்தி 25: 6-10அ

நள்ளிரவில், ‘இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்’ என்ற உரத்த குரல் ஒலித்தது. மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர். அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து, ‘எங்கள் விளக்குகள் அணைந்துகொண்டிருக்கின்றன; உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்’ என்றார்கள். முன்மதி உடையவர்கள் மறுமொழியாக, ‘உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக்கொள்வதுதான் நல்லது’ என்றார்கள். அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்து விட்டார்.

எண்ணெய் எடுத்துவர மறந்துவிட்ட தோழியருக்கும், முன்மதி நிறைந்த தோழியருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல், உவமையின் இரண்டாம் பகுதியில் நம் கவனத்தை அதிகம் ஈர்க்கிறது. ‘எங்கள் விளக்குகள் அணைந்துகொண்டிருக்கின்றன; உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்’ என்று ஐந்து பெண்கள் வேண்டுவதும், அதற்கு, மற்ற ஐந்து பெண்கள், ‘உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக்கொள்வதுதான் நல்லது’ என்று சொல்லும் பதிலும், சில சிந்தனைகளை எழுப்புகின்றன.

இந்த உரையாடலை மேலோட்டமாகப் பார்க்கும்போது, முன்மதியுள்ள பெண்கள், சுயநலம் மிக்கவர்களாய், தேவையில் இருப்போருக்கு உதவி செய்ய மறுப்பவர்களாய் தோன்றலாம். ஆனால், ஆற அமர சிந்தித்தால், மற்றோர் உண்மை புலனாகும். ஐந்துபேர் கொணர்ந்திருந்த எண்ணெய், பத்துப்பேருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டால், மணமகன் அழைப்பு என்ற முக்கிய நிகழ்வு நடைபெறும்போது, அனைத்து விளக்குகளுமே அணைந்துபோகும் ஆபத்து உருவாகும். எனவே, இந்த உதவியைச் செய்வது, அனைவரும் சேர்ந்து ஆற்றவேண்டிய ஒரு பொதுப்பணிக்கு இடையூறாக இருக்கும் என்பதால், இந்த உதவி மறுக்கப்பட்டது என்ற கோணத்தில் நாம் சிந்திப்பது நல்லது.

இந்தக் கோணத்தைப் புரிந்துகொள்ள, விமானப் பயணத்தின்போது தரப்படும் ஓர் எச்சரிக்கை உதவியாக இருக்கும். விமானப் பயணத்தின் துவக்கத்தில் சொல்லப்படும் எச்சரிக்கைகளில் ஒன்று, ஆக்சிஜன் முகக் கவசம் பற்றியது. நடுவானில், விமானம் பறந்துகொண்டிருக்கும்போது, விமானத்திற்கு உள்ளிருக்கும் காற்றழுத்தத்தில் ஆபத்தான அளவு மாற்றங்கள் உருவாகும்போது, ஆக்சிஜன் முகக்கவசங்கள் ஒவ்வொருவரின் இருக்கைக்கு மேலிருந்து தானாகவே விழும். அந்த ஆக்சிஜன் முகக்கவசங்களை எவ்விதம் பயன்படுத்துவது என்ற விவரங்களை, விமானப் பணிப்பெண் கூறும்போது, அந்த முகக்கவசங்களை, பெற்றோர் அல்லது பெரியவர்கள் முதலில் தங்களுக்கு அணிந்துகொண்டு, பிறகு, அவற்றை, குழந்தைகளுக்கு அணிவிக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறுவார்.

இந்த எச்சரிக்கையை முதல்முறை கேட்டபோது, எனக்குள் நெருடல் உருவானது, பாசத்திற்கு, அன்பிற்கு முரணான ஒரு கருத்தாக அது ஒலித்தது. அவசரம், ஆபத்து என்று வரும்போது, தன் குழந்தைக்கு முதலில் ஆக்சிஜன் முகக்கவசத்தை மாட்டுவதற்குப் பதில், ஏன் பெற்றோர் அதை முதலில் மாட்டிக் கொள்ளவேண்டும் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. என் கேள்விக்கு விரைவில் பதில் கிடைத்தது.

பெற்றோரோ, பெரியவர்களோ முதலில் முகக்கவசம் மாட்டிக்கொண்டு, சீராகச் சுவாசித்தால்தான், அவர்களால் அருகிலிருக்கும் குழந்தைக்கோ, அடுத்தவருக்கோ உதவ முடியும். அதற்கு மாறாக, குழந்தைக்கு முதலில் உதவும் நோக்கத்தில், பதட்டத்தில், தங்களுக்கு முகக்கவசம் அணியாமல் உதவி செய்யப் போகும் பெற்றோர் மயங்கி விழுந்தால், குழந்தையும் செய்வதறியாமல் திகைத்து, இருவருமே ஆபத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

அவசர நிலை உருவாகி, ஆக்சிஜன் முகக்கவசம் விழுந்ததும், முதல் 30 நொடிக்களுக்குள் பெரியவர்கள் அதை மாட்டிக் கொள்ளவேண்டும். ஏனெனில், அந்த 30 நொடிகள் தாண்டினால், ஆக்சிஜன் குறைபாட்டினால் மயக்கநிலை உருவாகும். பலரும் மயங்கிவிழுந்தால், விமானத்தில் ஏற்கனவே உருவாகியிருக்கும் அவசர நிலை இன்னும் ஆபத்தானதாக மாறும். எனவேதான், பெரியவர்கள், விவரம் தெரிந்தவர்கள், அடிக்கடி விமானப் பயணம் செய்பவர்கள் உடனடியாகச் செயலில் இறங்கி, தங்கள் முகக்கவசத்தை முதலில் அணிந்துகொண்டால், குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள், முகக்கவசத்தை அணியத் தெரியாதவர்கள் என்று அனைவருக்கும் உதவமுடியும் என்பது, விமானப் பணியாளர்கள் வலியுறுத்தும் கருத்து.

முன்மதியுடைய பெண்கள், ‘உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக்கொள்வதுதான் நல்லது’ என்று இவ்வுவமையில் சொல்வதை இத்தகையக் கோணத்தில் சிந்தித்தால், அவர்கள் சொன்னது, பொதுநலனை மனதில் வைத்து சொல்லப்பட்ட பதில் என்பது விளங்கும். யாருக்குமே தேவையான அளவு எண்ணெய் இல்லாமல், திருமண இல்லமே இருளில் மூழ்குவதற்குப் பதில், எண்ணெய் கொணராத பெண்கள், தங்கள் தவறை சரிசெய்வதுதான் நல்லது என்று சொல்லப்பட்ட பதில், தகுந்த பதிலாக ஒலிக்கிறது.

மணமகனை வரவேற்கும் வாய்ப்பு வந்த நேரம் முதல், அவசியமற்றவைகளில் தங்கள் கவனத்தைச் செலுத்தி, அவசியமான எண்ணெயை மறந்துவிட்ட ஐந்து தோழியர், தங்கள் தவறைச் சரி செய்வதற்கு வணிகரிடம் சென்ற நேரத்தில், மணமகன் வந்துவிடுகிறார். பின்னர் அங்கு நிகழ்ந்ததை இவ்வுவமையின் மூன்றாம் பகுதி விவரிக்கிறது. இப்பகுதியில் நமது தேடல் அடுத்தவாரம் தொடரும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.