2015-06-16 15:26:00

வயதானவரின் உரிமைகளுக்கு ஆதரவாக குரல் எழுப்ப அழைப்பு


ஜூன்,16,2015. வயதானவர்களுக்கு எதிரான உரிமை மீறல்கள் தனிப்பட்ட அமைப்புகளிலும், வெளியில் தெரியாமலும் இடம்பெற்றுவரும்வேளை, வன்முறை மற்றும் உரிமை மீறல்களிலிருந்து விடுபட்ட சுதந்திரமான வாழ்வு வாழ்வதற்கு இவர்களுக்கு இருக்கும் உரிமைகளுக்கு ஆதரவாக மக்கள் பொதுவில் குரல் எழுப்புமாறு கேட்டுள்ளார் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன்.

வயதானவர்கள் துன்புறுத்தப்படுவது குறித்த உலக விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்பட்ட ஜூன் 15, இத்திங்களன்று இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ள பான் கி மூன் அவர்கள், இன்றைய நம் உலகில் வயதான தலைமுறைகள் புறக்கணிக்கப்படுவதும், அவர்களின் உரிமைகள் மீறப்படுவதும் கவலை தருகின்ற உண்மை நிகழ்வுகளாக உள்ளன என்று இவ்வுலக தினத்திற்கென வெளியிட்ட தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

2050ம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் வயதானவர்கள் 20 விழுக்காட்டுக்கு மேல் இருப்பார்கள் என்றும், அனைவருக்கும் மாண்பு நிறைந்த வாழ்வை அமைத்துக்கொடுப்பதற்கு உறுதி எடுப்போம் என்றும் பான் கி மூன் அவர்கள் கூறியுள்ளார்.

1995ம் ஆண்டில் அறுபதும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் 54 கோடியே 20 இலட்சமாக இருந்தனர், இவ்வெண்ணிக்கை 2025ம் ஆண்டில் ஏறக்குறைய 120 கோடியாக உயரும் என்று உலக நலவாழ்வு நிறுவனம் கணித்துள்ளது. 

ஆதாரம் :  UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.