2015-06-15 16:34:00

வாரம் ஓர் அலசல் – அன்பால் உலகை வாழ வைப்போம்


ஜூன்,15,2015. பாகிஸ்தானில் ஜூன்,10, கடந்த புதன்கிழமையன்று Aftab Bahadur Masih என்ற பாகிஸ்தானிய கத்தோலிக்கர் தூக்கிலிட்டுக் கொலை செய்யப்பட்டார். இவரது மரண தண்டனையை நிறுத்தி வைக்குமாறும், விசாரணையை மீண்டும் தொடங்குமாறும் கராச்சி ஆயர் ஜோசப் கூட்ஸ் அவர்கள், பாகிஸ்தான் அரசுத்தலைவர் Himari Hussain அவர்களுக்கு விண்ணப்பக் கடிதம் எழுதியிருந்தார். இவ்விவகாரம் தொடர்பாக, மற்ற கத்தோலிக்கத் தலைவர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் தொடர்ந்து அரசுக்கு விண்ணப்பித்து வந்தனர். ஆனால் பாகிஸ்தான் அரசு கடந்த புதன் அதிகாலை 4.30 மணிக்கு லாகூர் Kot Lakhpat சிறையில் Aftab அவர்களுக்கு, மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. Aftab அவர்கள், தான் செய்யாத குற்றத்திற்காக, அதுவும் பல  கொலைகள் செய்தார் என்று அநியாயமாய்க் குற்றம் சாட்டப்பட்டு 1992ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி தனது 15வது வயதில் மரண தண்டனை விதிக்கப்பட்டார். இவர் Ghulam Mustafa என்ற குழாய் பொருத்தும் தொழில் செய்பவரிடம் பணியாளாய் இருந்தவர். Aftabக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மறுநாள் காவல்துறை, முஸ்தாபா அவர்களைத் துன்புறுத்தி, Sabiha Bari என்பவரும் அவரது இரு மகன்களும் கொல்லப்பட்ட சம்பவத்தில் Aftabவுக்குத் தொடர்பு உண்டு என்று சொல்லுமாறு கட்டாயப்படுத்தியது. ஆனால் அண்மையில் குலாம் முஸ்தாபா அவர்கள், இக்கொலையில் Aftabக்கு எவ்விதத் தொடர்பும் கிடையாது, ஆனால் இவர் கொலை நடந்ததைப் பார்த்த சாட்சி மட்டுமே என்று ஒப்புக் கொண்டுள்ளார். அதோடு, தான் முன்னர் பொய் சொன்னதாகவும், ஒரு சமயத் தலைவர் முன்பாக, ஆணைப் பத்திரத்தில் கையெழுத்தும் போட்டுள்ளார் முஸ்தாபா. இத்தகவலை பிரசுரித்துள்ள ஆசியச் செய்தி நிறுவனம், இது தொடர்பாக மேலும் பல விபரங்களையும் வெளியிட்டுள்ளது.

Aftab அவர்கள், ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்தால் அவரை விடுதலை செய்து விடுவதாக, அவரைக் கைது செய்தபோது காவல்துறை சொல்லியுள்ளது. சாதாரண 15 வயது தொழிலாளியால் இந்தப் பணத்தை அப்போது கொடுக்க முடியவில்லை. பாகிஸ்தானில் மரண தண்டனை நிறைவேற்றும் சட்டம் கடந்த ஆண்டுவரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த ஆண்டில் பேஷ்வார் இராணுவப் பள்ளியில் 134 மாணவர்களும், 19 வயது வந்தவர்களும் கொல்லப்பட்டதையடுத்து, பாகிஸ்தான் பிரதமர் Nawaz Sharif அவர்கள், மரண தண்டனை நிறைவேற்றும் தடைச் சட்டத்தை நீக்கினார். அதனால் குற்றமற்ற Aftab Bahadur Masih அவர்கள் கடந்த வாரத்தில் தூக்கிலிடப்பட்டார். இவர் சிறையில் இருந்த இத்தனை ஆண்டுகளில் பல தடவைகள் அவருக்கு மரண அச்சறுத்தல்கள் வந்துள்ளன. எனவே தனது மரணம் எப்போது நடக்கும் என்ற அச்சத்திலேயே தினம் தினம் செத்துக் கொண்டிருந்ததாக, இவர் தனது இறப்பிற்குமுன் எழுதிய நீண்ட உருக்கமான கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் ஒரு கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

பாகிஸ்தானில் பயங்கரவாதக் கொலைகளின் அடிப்படையில் மரண தண்டனை சட்டத்தின்மீது தடை நீக்கப்பட்டுள்ளது. ஆனால், Kot Lakhpat சிறையிலுள்ள குற்றவாளிகளில் பலர் வழக்கமான குற்றவாளிகள். இவர்களைக் கொலை செய்வதன் மூலம் இந்நாட்டில் பாகுபாட்டு வன்முறையை எவ்விதத்தில் நிறுத்த முடியும் என்று என்னால் சொல்ல முடியாது என்றும் Aftab அவர்கள் தனது கடைசிக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அன்பு நேயர்களே, இவரது கடிதம் மேலும் நம்மை வாசிக்க வைக்கின்றது.

நான் கறுப்பு அதிகார ஆணையைப் பெற்றுள்ளேன். ஜூன் 10, புதன்கிழமை நான் இறக்கும்வரை எனது கழுத்தில் கயிறு கட்டித் தொங்கவிடப்பட்டிருப்பேன். நான் குற்றமற்றவன். ஆனால் இது என்னை இத்தண்டனையிலிருந்து விடுதலை செய்யாது. இந்த 22 வருட சிறை வாழ்வில் பல தடவைகள் மரண ஆணை அறிக்கைகளைப் பெற்றேன். நான் இறக்கப் போகிறேன் என்று எனக்கு எத்தனை தடவை சொல்லப்பட்டது என்றுகூட என்னால் கூற முடியவில்லை. இந்த ஆணையைப் பெற்றபோதெல்லாம் நாள்களை எண்ணிக் கொண்டிருந்தேன். எனது உடலைப் போன்று நரம்புகளும் அதிர்ந்தன. நான் உண்மையிலேயே இறப்பதற்கு முன்பே பலமுறை இறந்துவிட்டேன். நீ இறக்கப் போகிறாய் என்று சொல்வதைப் போன்ற, சிறை அறையில் உட்கார்ந்துகொண்டு இறக்கும் நேரத்திற்காகக் காத்திருப்பதைப் போன்ற மிகக் கொடூரமான காரியம் எதுவும் இருக்கக்கூடுமோ என்பது சந்தேகமே. 15வது வயதில் வாழ்வுக்கும் இறப்புக்கும் இடையே சிக்கினேன், எனது எதிர்காலம் பற்றி முழுவதும் நிச்சயமற்ற ஒரு நிலை. நான் கலைப் பிரியன். அதில் என் கவலைகளை மறந்தேன். என்னோடு சிறையில் இருந்த நான்கு, ஐந்து கிறிஸ்தவர்களால் எனது வாழ்வு சற்று மேம்பட்டது. நான் அநாதை. பணம் கிடைப்பதற்கும் வாய்ப்பு இல்லை. எனவே நான் கடவுளை மட்டுமே சார்ந்து இருக்க முடியும்.  

பாகிஸ்தானில் அநியாயமாய்த் தூக்கில் போடப்பட்டுள்ள Aftab Masih அவர்களின் கடிதம் இதோடு முடியவில்லை. மேலும், இந்நாட்டில் மரண தண்டனை சட்டத்தை இரத்து செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியமும் இஞ்ஞாயிறன்று அரசைக் கேட்டுள்ளது. அதற்குப் பதிலளித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் Qazi Khalilulla அவர்கள், கடும் குற்றவாளிகளுக்கு மட்டுமே இத்தண்டனை நிறைவேற்றப்படும், இது உள்நாட்டு விவகாரம், இதில் வெளிநாடுகளின் தலையீடு தேவையில்லை என்று பதில் கூறியுள்ளார்.

மரண தண்டனைகள் பாகுபாட்டு வன்முறைகளுக்கு முடிவு சொல்லுமா? குற்றங்கள் இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்குமா? நாடுகளில் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள மரண தண்டனைகள் அந்தந்த நாடுகளில் பயங்கரவாதத்தையோ குற்றங்களையோ ஒழித்திருக்கின்றனவா? சிந்திப்போம். மனித வாழ்வு மரண தண்டனைகளால் அழிக்கப்படும்போது, அமெரிக்காவில் ஆஸ்டின் பிளாகர், ஸ்டெபானி கத்தோலிக்கத் தம்பதியரின் செயல் ஒன்றை நாம் குறிப்பிட்டாக வேண்டும். இத்தம்பதியரின் மூன்றாவது குழந்தை வயாத்தின் இதயத்தில் இடது பகுதி இல்லை என்பது கரு வளர்ந்த ஆறாவது மாதத்தில் ஸ்கேன் மூலம் தெரிந்தது. குழந்தை அப்படியே பிறக்கட்டுமா அல்லது கருவைக் கலைத்துவிடலாமா, சொல்லுங்கள் என்று மருத்துவமனையில் கேட்டபோது ஒரு நாள் முழுக்க முடிவுக்கு வர முடியாமல் தவித்த தாய் ஸ்டெபானி, “கடவுள் ஏதோ ஒரு காரணத்துக்காக இந்த உயிரை எனக்குள் அனுப்பியிருக்கிறார். அது பிறக்கட்டும், பார்த்துக்கொள்ளலாம்”என்றார். பின்னர் குழந்தை பிறந்த மூன்றாவது மாதத்தில் அதன் வலது வென்டிரிக்கிள் வழியாகவே உடல் முழுவதற்கும் ரத்தம் அனுப்பப்படும் வகையில் மருத்துவர்கள் நரம்பு அறுவைச் சிகிச்சை செய்தனர். பின்னர் இரு மாதங்கள் சென்று, செயற்கை சுவாசக் கருவியைப் பொருத்திய மருத்துவர்கள், நிறைய மருந்துகளை உட்செலுத்தினார்கள். இனி இதய அறுவைச் சிகிச்சை மூலம் அவனைப் பிழைக்க வைக்க முடியாது. புதிய இதயம்தான் வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். இப்படி பல கட்டங்களில் தீர்மானம் எடுக்கவேண்டிய கடினமான சூழல் அத்தம்பதியருக்கு. தற்போது வயாத் மாற்று இதயம் பெற்று சுவாசிக்கத் தொடங்கியுள்ளான். எனினும், குழந்தைகளுக்குப் பொருத்தப்படும் மாற்று இதயம் அதிகபட்சம் இருபது ஆண்டுகளுக்குத்தான் வேலை செய்யுமாம். அதற்குப் பிறகு வளர்ந்த மனிதர்களின் இதயம் பொருத்தப்பட வேண்டுமாம். சிறுவன் வயாத் பல்லாண்டுகள் வாழட்டும் எனச் செபிப்போம்.

உலகில், பிறந்த குழந்தை முதல் பல்வேறு வயதுடைய பெருந்தகையாளர்கள், உறுப்பு தானங்களை வழங்கி தங்களையொத்த வயதினர் வாழ உதவி வருகிறார்கள். இவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்றுகூட, மூளைச்சாவு அடைந்த 44 வயது சந்திரமோகன் அவர்களின் உறுப்புகள் ஏழு பேருக்குத் தானம் செய்யப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரைச் சேர்ந்த தையல் தொழிலாளியான சந்திரமோகன் அவர்களால் ஏழு பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். இன்று தமிழகத்தில் 5,289 பேர் பல்வேறு தானங்களுக்காகக் காத்திருக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது. அன்பர்களே, உலகை அன்பு ஆளும்போது, வயாத்துகள், ஸ்டெபானிகள் போன்றவர்கள் நீண்ட காலம் கண்ணீர்விட வேண்டியதில்லை. ஜூன்,14, இஞ்ஞாயிறு உலக இரத்ததான தினம். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் இந்த உலக நாளை ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் குறிப்பிட்டார். இன்று உலகில் இலட்சக்கணக்கான மக்கள் பொதுப்படையாகத் தெரியாமல் இரத்த தானம் செய்து பலரின் துன்பங்களை நீக்குகின்றனர் என்று உரைத்த திருத்தந்தை, இவர்களைப் பாராட்டியதோடு இவர்களின் எடுத்துக்காட்டை இளையோர் பின்பற்றுமாறும் கூறினார்.  

இன்று நாடுகளில் விபத்துகள் அதிகரித்துவிட்டன. அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களும் பெருகிவிட்டனர். எனவே மருத்துவத் துறையில் இரத்தத்தின் தேவை அதிகரித்துவிட்டது. இரத்ததானம் செய்யும்போது ஒருவரின் உயிர் காக்கப்படுவதாலும், நமக்கு அதனால் இழப்பு இல்லை என்பதாலும் ஒவ்வொருவரும் இரத்ததானம் செய்யலாம். இரத்தம் கொடுக்கும்போது ஒருவரிடம் இருந்து 350 மில்லி இரத்தம் எடுக்கப்படும். இது மீண்டும் ஒரு மாதத்தில் ஊறிவிடும். 90 நாட்களுக்கு ஒரு முறை இரத்ததானம் செய்யலாம். 30 நிமிடங்களில் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடலாம். ஒரு மணி நேர ஓய்வுக்குப் பின் அன்றாட பணிகளைத் தொடங்கிவிடலாம். இரத்ததானம் செய்வதால் உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. ஏனெனில் உடலுக்கு பாதிப்பு தராத அதிகப்படியான இரத்தமே தானமாகத் தரப்படுகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 60 இலட்சம் யூனிட் இரத்தம் தேவைப்படுகிறது. ஆனால் பாதி அளவே இரத்தம் கிடைக்கிறது என்று ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது.

அதே சமயம், மது அருந்தியவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு இரத்ததானம் செய்யக்கூடாது. பால்வினை நோய் மற்றும் மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஓராண்டு காலமும், காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்ற ஐந்து ஆண்டுகள் வரையும் இரத்ததானம் செய்யக்கூடாது. இரத்ததானம் பெற்றவர்கள் ஓராண்டும், எய்ட்ஸ், இதயநோய், சிறுநீரக நோய், தைராய்டு, வலிப்பு நோய் உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் இரத்ததானம் செய்யக்கூடாது. சரியான பரிசோதனை இல்லாமல் இரத்ததானம் செய்யவோ, இரத்தம் பெறவோ கூடாது.

இதயம், இதய வால்வு, இரத்தக் குழாய், நுரையீரல், கல்லீரல், கணையம், சிறுகுடல், தோல், இரு சிறுநீரகங்கள், இரு கண்கள் ஆகியவற்றைத் தானம் செய்யலாம். இரத்த தானமோ, உடல் உறுப்பு தானமோ செய்யும்போது உயிர்கள் காக்கப்படுகின்றன. ஆயினும், இந்தத் தானங்களால் ஏழை எளிய மக்கள் பலன் அடைவது குறைவு என்பதையும் நாம் மறக்கக் கூடாது. அன்பர்களே, மனித வாழ்வைப் போற்றி மதிப்போம். அன்பால் சக மனிதரை வாழ வைப்போம். உலகை வாழ வைப்பது அன்பு ஒன்றே.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.