2015-06-15 16:58:00

செக் குடியரசின் கிறிஸ்தவ ஒன்றிப்புக் குழுவுடன் திருத்தந்தை


ஜூன்,15,2015. கிறிஸ்தவ மறையின் சீர்திருத்தவாதிகளுள் ஒருவரும், செக் குடியரசைச் சார்ந்தவருமான Jan Hus அவர்கள் இறந்ததன் 600ம் ஆண்டை நினைவுகூரும் விதமாக, உரோம் நகர் வந்திருந்த செக் குடியரசின் கிறிஸ்தவ ஒன்றிப்புக் குழுவைச் சார்ந்தவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று, திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

Prague பல்கலைக் கழகத்தின் அதிபராகவும், புகழ்பெற்ற மறையுரையாளராகவும் விளங்கிய Jan Hus அவர்கள், ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னர், மனிதாபிமானமற்ற முறையில் கொலை செய்யப்பட்டது குறித்து, தன் வருத்தத்தை அக்குழுவினரோடு பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, Jan Hus அவர்கள் குறித்த ஆய்வுகள், இன்றைய கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சிகளுக்கு பெரும் தூண்டுகோலாக உள்ளன என்றும் தெரிவித்தார்.

தன் அழைப்புக்கு பிரமாணிக்கமாக இருக்கும் திருஅவை, ஒன்றிப்பை நோக்கி நடைபோடுவதன் அடிப்படையாக, திருஅவையின் புதுப்பிக்கும் பணி அமைந்துள்ளது என்றும், செக் கிறிஸ்தவ ஒன்றிப்புக் குழுவினரிடம் தெரிவித்தார், திருத்தந்தை.

அனைத்துக் கிறிஸ்தவ சபைகளும் ஒன்றிணைந்து, ஒரே திருஅவையாகச் செயல்படுவது, நாம் அறிவிக்கும் நற்செய்திக்கு நம்பத்தகுந்த ஒரு சாட்சியமாக விளங்கமுடியும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.