2015-06-13 15:16:00

பொதுக் காலம் 11ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


மண், விதை, செடி, கொடி, மரம் என்று... தாவர உலகை மையப்படுத்தி, இயேசு, பல வேளைகளில் பேசியிருக்கிறார். தச்சு வேலையை, தன் குடும்பத் தொழிலாகச் செய்து வந்த இயேசுவுக்கு, தாவர உலகின் மீது எப்படி இவ்வளவு ஈடுபாடு வந்திருக்க முடியும் என்று எண்ணி வியப்படைகிறேன். தன்னைச் சூழ்ந்திருந்த இயற்கை வழியே, இறைவனைத் தொடர்ந்து சந்தித்துவந்த இயேசுவுக்கு, இயற்கையின் அதிசயங்கள் மனதில் பதிந்தது, ஒன்றும் அதிசயம் இல்லையே!

சாதிக்கவேண்டும் என்ற வெறியில், இயற்கை சழற்சிக்கு மாறாக, இரவையும் பகலாக்கி, இடைவிடாமல், அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு...

சேகரிக்கவேண்டும் என்ற சுயநல வெறியில், சுற்றுச்சூழலுக்கு எது நடந்தாலும் கவலையில்லை என்று, இயற்கை வளங்களை அழித்துவரும் நமக்கு...

இந்த ஞாயிறு வாசகங்கள் வழியே பாடங்கள் சொல்லித் தருகிறார், இறைவன்.

இயற்கையை நினைவுறுத்தும் இவ்வாசகங்கள், இந்த ஞாயிறன்று நம்மை வந்தடைந்துள்ளதை நான் ஒரு வரமாக, வாய்ப்பாக எண்ணிப் பார்க்கிறேன். சுற்றுச்சூழலை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள சுற்றுமடல், ஜூன் 18, வருகிற வியாழனன்று, வெளியாகவிருக்கிறது. இயற்கையில் தன்னையே கரைத்துக்கொண்ட அசிசி நகர் புனித பிரான்சிஸ், இயற்கையோடிணைந்து, இறைவனை வாழ்த்திப் பாடிய கவிதையின் வார்த்தைகள், "Laudato Si"அதாவது, “வாழ்த்தப் பெறுவாராக” என்ற வார்த்தைகளை, தலைப்பாகக் கொண்டு திருத்தந்தையின் இந்த மடல் எழுதப்பட்டுள்ளது.

படைப்பின் பாதுகாப்பு என்ற கருத்தை வலியுறுத்தி, திருத்தந்தையர் 6ம் பவுல், 2ம் யோவான் பவுல், 16ம் பெனடிக்ட் ஆகியோர் பல்வேறு தருணங்களில் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். எனினும், இயற்கையை மையப்படுத்தி, சுற்றுமடல் ஒன்று வெளிவருவது, இதுவே முதல்முறை. பொதுவாக, திருத்தந்தையர் வெளியிடும் சுற்றுமடல், இறையியல் கருத்துக்களையும், திருஅவையின் படிப்பினைகளையும் உள்ளடக்கிய ஒரு மடல். இந்தப் பின்னணியில் சிந்திக்கும்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிடவிருக்கும் "வாழ்த்தப் பெறுவாராக" என்ற சுற்றுமடல், சுற்றுச்சூழலைக் குறித்து, விவிலியமும், திருஅவையும் கொண்டிருக்கும் கண்ணோட்டத்தை உலகிற்குத் தெளிவுபடுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த எதிர்பார்ப்பு, இருவகையான தாக்கங்களை உருவாக்கியுள்ளதென்பதை ஊடகங்கள் வழியே நாம் உணர்கிறோம். ஐ.நா.அவை பொதுச்செயலர், பான் கி மூன் உட்பட, பல உலகத் தலைவர்கள், திருத்தந்தை வெளியிடவிருக்கும் சுற்றுமடலை, தாங்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்திருப்பதாகக் கூறியுள்ளனர்.

அதேவேளையில், இந்தச் சுற்றுமடலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குரல்களும் எழுந்துள்ளன. ஆன்மீக வழிகாட்டியாக விளங்கவேண்டிய திருத்தந்தை, ஏன் உலகைச் சார்ந்த கவலைகளைப் பற்றிப் பேசுகிறார்; சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்துப் பேசுவதை, அறிவியல் அறிஞர்களிடம் அவர் விட்டுவிடலாமே என்ற கோணத்தில் எதிர்ப்புக்கள் எழுவதையும் காணலாம். இத்தகைய எதிர்ப்புக்குரல் எழுவதற்கு, காரணம் உண்டு...

இந்தச் சுற்றுமடலில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள், இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை எனினும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இயற்கையைக் குறித்தும், சுற்றுச்சூழல் குறித்தும் அவ்வப்போது பேசிவந்துள்ள கருத்துக்களை மனதில் கொண்டு சிந்தித்தால், இந்தச் சுற்றுமடல் நம் அனைவருக்கும் சங்கடமான கேள்விகளை எழுப்பும் என்றும், குறிப்பாக, இயற்கையைச் சீரழித்துவரும் சுயநல சுறா மீன்களுக்கு ஒரு சாட்டையடியாக விழும் என்றும் ஓரளவு கணிக்கலாம். எனவேதான், திருத்தந்தை வெளியிடவிருக்கும் சுற்றுமடலுக்கு ஆங்காங்கே எதிர்ப்புக்கள் எழுந்து வருகின்றன என்று நினைக்கிறேன்.

சுற்றுச்சூழல் பற்றி பேசுவதற்கு அறிவியல் மேதைகளும், அரசு அமைப்புக்களும், பன்னாட்டு நிறுவனங்களும் உள்ளன என்று எழும் எதிர்ப்புக்குரல், இவ்வுலகில் நாம் அவ்வப்போது நடத்திவரும் பன்னாட்டுக் கருத்தரங்குகள், உலக உச்சி மாநாடுகள் இவற்றை மனதில் வைத்துப் பேசியிருக்க வேண்டும். இயற்கையை, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நாம் உலக உச்சி மாநாடுகள் நடத்தாமல் இல்லை.

ஆபத்தில் இருக்கும் நமது இயற்கையை எவ்விதம் காப்பாற்றுவது என்று, உலக நாடுகள் இணைந்து, ஒவ்வொரு உச்சி மாநாட்டிலும், தீர்மானங்கள் நிறைவேற்றின. இருப்பினும், இயற்கை, இன்னும் நம் கைகளில் சிக்கி, சின்னாபின்னமாகி வருவது உண்மைதானே!

இயற்கை என்ற பள்ளியில், இறைவன் நமக்குச் சொல்லித்தர விழையும் பாடங்களைக் கவனமாகப் படித்திருந்தால், இந்த நிலைக்கு நாம் வந்திருக்கத் தேவையில்லை. உச்சி மாநாடுகள் நமக்குச் சொல்லித்தரும் பாடங்களைக் கேட்பதற்குமுன்னர், இன்றைய நற்செய்தி வழியாக இயேசு நமக்குச் சொல்லித்தரும் பாடங்களுக்கு செவிமடுப்போம்.

மாற்கு நற்செய்தி 4ம் பிரிவில் இன்று நாம் வாசிக்கும் முதல் உவமை, "தானாக வளரும் விதை" என்ற உவமை. மாற்கு நற்செய்தியில் மட்டும் சொல்லப்பட்டுள்ள இந்த அழகிய உவமையைக் கேட்கும்போது, விவசாயம், மிகவும் எளிதான ஒரு விடயம் என்ற கற்பனையை இயேசுவின் வார்த்தைகள் உருவாக்குகின்றன. விதைப்பவர் செய்யவேண்டியதெல்லாம் எளிதான காரியங்கள்... விதைக்க வேண்டும், அறுவடை காலம் வந்ததும், அறுவடை செய்ய வேண்டும்... அவ்வளவுதான். இவ்விரு செயல்களுக்கும் இடைப்பட்டக் காலத்தில், இயற்கை தானாகச் செயல்படும் என்ற கருத்தில் இயேசு பேசியிருக்கிறார். "நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளருகிறது. முதலில் தளிர், பின்பு கதிர், அதன் பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது" (மாற்கு நற்செய்தி 4 : 27-28) என்பவை இயேசுவின் வார்த்தைகள்.

இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, இயேசுவுக்கு விவசாயம்பற்றி சரிவரத் தெரியவில்லை என்ற மமதையில் எனக்குள் கேலி உணர்வுகள் எழுந்தன. ஆனால், இயற்கையை மையப்படுத்தி, உலக அரசுகளும், பன்னாட்டு அவைகளும் நடத்திவரும் கருத்தரங்குகள், உச்சி மாநாடுகள் இவற்றின் பின்னணியில் சிந்திக்கும்போது, இயேசு கூறிய இந்த உவமையின் ஆழம் புரிந்தது. என் கேலி மறைந்து, கேள்விகள் மனதை உறுத்துகின்றன. இந்த உவமையில் இயேசு சுட்டிக்காட்டுவது எளிதான இயற்கை வழிகள்... இந்த இயற்கை வழியில் நாம் சென்றிருந்தால்... நம் பேராசைகளுக்கு, அவசரங்களுக்கு ஏற்றபடி இயற்கையை மாற்றாமல், இயற்கை செயல்படும் போக்கில் நாம் சென்றிருந்தால்... இயற்கையை இவ்வளவு சீரழித்திருப்போமா என்ற கேள்வி எழுகிறது.

இந்த உவமையில் இயேசு முக்கியமாக வலியுறுத்துவன... பொறுமை, நிதானம், நம்பிக்கை... இந்த அற்புத குணங்கள், நாம் வாழும் உலகில், பெருமளவு காணாமற் போய்விட்டன. இன்றைய அவசர உலகின் கணக்குப்படி, இன்று விதைக்க வேண்டும், நாளையே அறுவடை செய்யவேண்டும். இன்று விதைப்பதை நேற்றே அறுவடை செய்ய முடியுமா என்று ஆய்வுகள் தற்போது நடைபெற்று வந்தாலும் ஆச்சரியமில்லை.

அவசரம் மட்டுமல்ல, ஆசையும் நம்மை ஆட்டிப் படைக்கிறது. ஒரு விதையிலிருந்து ஒரு நூறு பலன் விளைவது இயற்கை நியதி என்றால், அந்த ஒரு விதையிலிருந்து 200, 300 என்று பலன்களை எதிர்பார்த்து, அதனால், விதைகளில் மரபணு மாற்றம் செய்து, உரத்தில் கூடுதல் சக்தியைச் சேர்த்து.... விளைநிலங்களைக் கல்லறைகளாக்கி வருகிறோம்.

நமது அவசரத்துக்கும் ஆசைக்கும் ஈடுகொடுக்கும் வண்ணம், தொழில் நுட்பங்கள், வேதியல் உரங்கள், விதைகளில் மரபணு மாற்றங்கள், திடீர் விதைகள், திடீர் பயிர்கள் என்று எத்தனை, எத்தனை விபரீதப் பரிட்சைகள்... இந்த விபரீத, விஷப் பரிட்சைகளில் தவறியதால், ஆயிரக்கணக்கில் விவசாயிகளின் தற்கொலைகள்... முன்னேற்றம் என்ற பெயரில் ஆபத்தான வழிகளை நமக்கு நாமே வகுத்துக் கொண்டோம். இப்போது, மாற்றுவழிகளைச் சிந்திக்க உச்சி மாநாடுகள் கூட்டிப் பேசுகிறோம்...

சுயநலம், பேராசை, குறுக்குவழி, உடனடித்தீர்வுகள், அவசரம், என்ற களைகளை ஆரம்பத்திலிருந்தே நாம் நமது தனிப்பட்ட வாழ்விலும், சமுதாய வாழ்விலும் வேரோடு களைந்திருந்தால், சுற்றுச்சூழல் பாதுகாப்பைப்பற்றி இவ்வளவு தூரம் நாம் கவலைப்பட்டிருக்கத் தேவையில்லை. உச்சி மாநாடுகளையும், கருத்தரங்குகளையும் நடத்தியிருக்கத் தேவையில்லை.

பூமிக்கோள உச்சி மாநாடு (The Earth Summit) 1992ம் ஆண்டு, பிரேசில் நாட்டின் ரியோ தெ ஜனெய்ரோ (Rio de Janeiro) நகரில், முதல் முறை நடைபெற்றபோது, Severn Cullis Suzuki என்ற 12 வயது சிறுமி, உலகத் தலைவர்களிடம் 6 நிமிடங்கள் பேசினார். அச்சிறுமியின் சொற்கள் உலகத் தலைவர்களின் உள்ளங்களில் அம்புகளாய் பாய்ந்தன. சிறுமி Severn சொன்ன ஒரு சில உண்மைகளுக்கு மீண்டும் செவி மடுப்போம்:

“நான் என் எதிர்காலத்திற்காகப் போராட வந்திருக்கிறேன். இன்று உலகில் பட்டினியால் இறக்கும் என்னைப்போன்ற ஆயிரமாயிரம் குழந்தைகள் சார்பில் பேச வந்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் உலகின் பல பகுதிகளில் அழிந்து வரும் உயிரினங்கள் சார்பில் நான் பேச வந்திருக்கிறேன்."

இவ்விதம் தன் உரையைச் சூடாக ஆரம்பித்த சிறுமி Severn Suzuki, அவர்களை நோக்கிச் சிலக் கேள்விகளை எழுப்பினாள். அன்று அம்புகளாய் அத்தலைவர்களை நோக்கிப் பாய்ந்த அக்கேள்விகள் இன்று நம்மையும் நோக்கி பாய்ந்து வருகின்றன.

“நீங்கள் சிறுவர்களாய் இருந்தபோது என்னைப் போல் சூரியனையும், காற்றையும் பற்றி பயந்தீர்களா? கவலைப் பட்டீர்களா? நான் வாழும் இந்த உலகில் நடக்கும் பயங்கரங்களுக்கு என்ன பதில் என்று சிறுமி எனக்குத் தெரியாது. உங்களுக்கும் அந்தப் பதில்கள் தெரியாது என்ற உண்மையை நீங்கள் உணர வேண்டும் என்று கூறவே நான் இங்கு வந்திருக்கிறேன்.

விண்வெளியில் ஓசோன் படலத்தில் விழுந்துள்ள ஓட்டையை அடைக்க உங்களுக்குத் தெரியாது.

இறந்து போகும் உயிரினங்களை மீண்டும் உயிர்ப்பிக்க உங்களுக்குத் தெரியாது.

காடுகள் அழிந்து பாலை நிலங்களாய் மாறிவருவதைத் தடுக்கும் வழிகள் உங்களுக்குத் தெரியாது.

உடைந்து போன இயற்கையைச் சரி செய்ய உங்களுக்குத் தெரியாதபோது, அதை மேலும் உடைக்காமல் விடுங்கள். அது போதும் எங்கள் தலைமுறைக்கு.”

அந்த ஆறு நிமிடங்கள் உலகச் சமுதாயத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்பி, சங்கடமான கேள்விகளை விட்டுச் சென்றாள் அந்தச் சிறுமி. இது நடந்து இப்போது 23 ஆண்டுகள் கழிந்து விட்டன. Severn Suzuki அன்று எழுப்பிய அந்தக் கேள்விகள், இன்றும் நம்முன் எழுப்பப்படுகின்றன. இக்கேள்விக் கணைகள் நம்மீது பாயும்போது, நாமும் தலைகுனித்து நிற்க வேண்டியுள்ளது.

இறைவன், நமக்கு வழங்கியுள்ள கொடையான இயற்கையை நாம் மதிக்கவேண்டும், பேணி, பாதுகாக்கவேண்டும், இயற்கை வளங்களை ஒரு சிலர் மட்டுமல்ல, அனைவரும்... மீண்டும் சொல்கிறேன்... அனைவரும் பகிர்ந்து வாழவேண்டும் என்ற எண்ணங்களை எல்லா மதங்களும் சொல்கின்றன. இருப்பினும், நமது சுயநல வெறி, இந்த உன்னதக் கொள்கைகளை உதைத்தெறிந்துவிட்டு, அழிவை நோக்கி இந்தப் பூமியை இழுத்துச் செல்கிறது. இந்த ஞாயிறு சிந்தனையை ஓர் ஆன்மீக ஆய்வோடு நிறைவு செய்வோம். நமது ஆன்ம ஆய்வுக்கு உதவியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்ற திருப்பலியில் கூறிய கருத்துக்கள் உதவட்டும்:

நம் சகோதர சகோதரிகளையும், படைப்பையும் நாம் பாதுகாக்கத் தவறும்போது, அழிவை நோக்கிய பாதையை நாம் திறந்துவிடுகிறோம். வரலாற்றின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மரணத்தையும், அழிவையும் விளைவிக்கவும், மனித குலத்தின் முகத்தைக் குலைக்கவும் எழும் ஏரோதுகள் நம்மிடையே உள்ளனர்.

பொருளாதாரம், அரசியல் மற்றும் சமுதாய தளங்களில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் தலைவர்களுக்கும், அனைத்து நல்மனம் கொண்டோருக்கும் நான் சிறப்பான ஒரு வேண்டுகோளை விடுக்கிறேன். கடவுளின் திட்டம் ஆழப் பதிந்துள்ள படைப்பின் பாதுகாவலர்களாக நாம் இருப்போம்.

இங்கு மற்றோர் எண்ணத்தைப் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். பாதுகாவல் என்ற பணிக்கு, நன்மைத்தனமும், மென்மையும் கொண்டிருப்பது அவசியம். மென்மையான மனது கொண்டிருப்பதை வலுவிழந்த நிலையாகக் காண்பது தவறு, மென்மை உணர்வுகள் கொண்டோரிடமே, கனிவு, கருணை, பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது போன்ற நற்பண்புகள் காணப்படும். எனவே, நன்மைத்தனத்தையும், மென்மையான உணர்வுகளையும் கண்டு நாம் அஞ்சக்கூடாது.

அனைத்தையும் சுற்றிவளைத்து அபகரித்துக் கொள்ளும் சுயநலத்தைக் களைந்து, மென்மையான மனதுடன், படைப்பு அனைத்தையும் பேணிக் காக்கும் மனதை இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் வழங்க மன்றாடுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.