2015-06-13 15:39:00

உயிர்ப்புப் பெருவிழாவை ஒரே நாளில் சிறப்பிக்கப் பரிந்துரை


ஜூன்,13,2015. கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவை அனைத்துக் கிறிஸ்தவ சபையினரும் ஒரே நாளில் சிறப்பிக்கும் பரிந்துரையை முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 

மூன்றாவது உலக அருள்பணியாளர் தியானத்தில் கலந்துகொள்ளும் அருள்பணியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்த திருத்தந்தை, ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களும், எல்லாக் கிறிஸ்தவ சபையினரும் கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவை ஒரே நாளில் சிறப்பிக்க கத்தோலிக்கத் திருஅவை ஆவல் கொண்டுள்ளது என்றும் கூறினார்.

கிறிஸ்தவ சபைகளின் ஒன்றிப்பை மனதில் வைத்துப் பேசிய திருத்தந்தை, சுற்றுச்சூழல் குறித்த தனது திருமடலை வெளியிடுவதற்கு ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை பர்த்தலோமேயோ அவர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பதையும் குறிப்பிட்டார்.

முதுபெரும் தந்தை பர்த்தலோமேயோ அவர்களுக்கு வேறு நிகழ்வு இருப்பதால், பேராயர் Zizoulas அவர்கள் கலந்து கொள்வார், இவ்வாறு இந்தத் திருமடல், முக்கிய ஆர்த்தடாக்ஸ் இறையியலாளர்களில் ஒருவரால் வழங்கப்படும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

இச்சந்திப்பில் இந்தியப் பெருங்கடலில் குடிபெயர்வோர் எதிர்கொள்ளும் பிரச்சனை குறித்தும் குறிப்பிட்ட திருத்தந்தை, குடிபெயர்வோரைத் திருப்பி அனுப்புவது பாவம் என்று எச்சரித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.